சிறுபான்மையினர் கரங்களில் நாட்டின் தலைவிதி! – கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம்,மேற்கு அவுஸ்திரேலியா

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலும் அதனைத் தொடர்ந்து வரும் பொதுத் தேர்தலும் இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையப்போகின்றது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அத்துடன் பொதுத் தேர்தலின் முடிவு எவ்வாறு அமையப்போகின்றது என்பதற்குக் கட்டியம் கூறப்போவது முதலில் வரப்போகும் ஜனாதிபதித் தேர்தல் என்பதிலும் சந்தேகமில்லை.
குறிப்பாக,இந்த இரண்டு தேர்தல்களும் இலங்கையின் கட்சி அடிப்படையிலான ஜனநாயக அரசியலைத் தொடரச் செய்யுமா? அதற்கு முற்றுப்புள்ளி வைத்து,குடும்ப அடிப்படையிலான ஆட்சியாதிக்கத்தை நிலைப்படுத்துமா? பௌத்த ஆதிக்கவாதிகளுக்கு முன்னிடம் வழங்கிச் சிறுபான்மை இனங்களுக்கும் அவர்களின் மத வழிபாடுகளுக்கும் குந்தகம் விளைவிக்குமா? நாட்டின் பாதுகாப்பு என்ற போர்வையில் ஜனநாயக சுதந்திரங்கள் பறிக்கப்படுமா? அதேபோன்று பெருளாதார வளர்ச்சி என்ற போர்வையில் சிறுபான்மை இனத்தவர்களின் காணி நிலங்களுக்கும், தொழில் முயற்சிகளுக்கும், வர்த்தக அமைப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படுமா? என்பனபோன்ற கேள்விகளுக்கு விடையளிப்பதாக அமையப்போகின்றன. இவவாறான வினாக்களின் விரிவான ஒருவிடையின் முன்னுரையாக விளங்கப்போகின்றது ஜனாதிபதித் தேர்தலின் முடிவு.
ஆதிஷ்டவசமாக, இலங்கையின் வரலாறு (அல்லது அதன் தலைவிதி) இந்த முடிவினை நிர்ணயிக்கும் சக்தியினையும,; பொறுப்பினையும் சிறுபான்மை இனங்களுக்கு வழங்கியுள்ளதென்பதை தமிழ் முஸ்லிம் வாக்காளர்கள் உணர்வார்களா? அவர்கள் இதுவரை உணரவில்லiயெனின் மிகவிரைவில் அவர்களை உணரவைக்கச் செய்வது அச்சமூகங்களின் அரசியல்வாதிகளினதும், மதத்தலைவர்களினதும், புத்திஜீவிகளினதும் தவிர்க்கமுடியாத கடமை என்பதை மேலும் வலியுறுத்த முடியாது. இந்தத் தேர்தல் தம்மையும் நாட்டையும் காப்பாற்ற இலங்கைத் தாய் இவ்விரு இனங்களுக்கும் வழங்கியுள்ள ஓர் அரிய சந்தர்ப்பம். இதை நழுவவிட்டபின்னர் ஒப்பாரி வைப்பதிற் பிரயோசனமில்லை. அவ்வாறாயின் இச்சந்தர்ப்பத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?
இந்தத் தேர்தற்களம் முப்பத்திரண்டு போட்டியாளர்களைக் குதிக்கச் செய்துள்ளபோதிலும் அவர்களுள் பிரதானமாக, இருவரே ஜெயிக்கும் வாய்ப்புடையோர். இன்னுமொருவர், அடுத்த களத்துக்குத் தன்னைப் பரீட்சித்துப் பார்க்கிறார். எனினும்,முதலிரண்டு ஜாம்பவான்களின் ஆட்டத்தில் மயங்கி மூன்றாமவரை ஒரு கோமாளி எனக்கருதி சிறுபான்மையினர் அவரை ஒதுக்கித் தள்ளினால் அது பெரும் மடமை என்பதை முதலில் உணரவேண்டும். இது ஏன் என்பதை இந்த ஆட்டத்தைக் கூர்ந்து நோக்குகையில் புலப்படும்.
ஐக்கிய தேசிய கட்சியின் அங்கத்தவராகவும், தேசிய ஐக்கிய முன்னணியின் ஆதரவிலும் களமிறங்கியுள்ளவர் சஜித் பிரேமதாஸ அவர்கள். இலங்கைப் பொதுசன முன்னணியின் அங்கத்தவராக ஆடுபவர் கோத்தாபய ராஜபக்ஸஅவர்கள். முன்னையவர் காலஞ்சென்ற ஜனாதிபதி றணசிங்ஹ பிரேமதாஸாவின் புதல்வர், பின்னையவர் முன்னைநாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் சகோதரன்.நமது மூன்றாமவர் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவராகவும், தேசிய மக்கள் சக்தியின் சார்பாகவும் களமிறங்கியுள்ள அனுர குமார திஸநாயகா அவர்கள்.
முதலிருவரின் அடிப்படைக் கொள்கைகளிலும் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் எதுவுமே இல்லை. தடையற்ற சந்தைப் பொருளாதாரத்தை வளர்ப்பது, வெளிநாட்டு முதலீடுகளுக்கு வரவேற்பளிப்பது, நாட்டின் இறைமையைப் பாதுகாப்பது, உண்ணாட்டுப் பாதுகாப்புக்கு உறுதியளிப்பது, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது என்பன போன்ற விடயங்களில் இருவருமே ஒரே பல்லவியைப் பாடிக்கொண்டு, இடையிடையே பொது மக்களின் வாக்குவங்கியை மனதிற்கொண்டு, வரிகளைக் குறைத்து வாழ்க்கைச் செலவைக் குறைப்பது, மாணவர்களுக்குச் சீருடையும் மதிய போசனமும் வழங்குவது, அத்தியாவசியப் பொருள்களின் விலைகளைக் குறைப்பது போன்ற சிதறுண்ட சலுகைகளை ஆங்காங்கே தமது பிரச்சார மேடைகளில் அள்ளி வீசுகின்றனர்.
ஆனால், இன அமைதியின்றி, நடந்து முடிந்த போரின் தழும்புகள் இன்னும் ஆறாது, பாரிய கடன் சுமையுடன் தள்ளாடிச் செல்லும் பொருளாதாரத்தையும் அதனால் சீரழியும் மக்களின் வாழ்க்கையையும் எவ்வாறு தீர்க்கமாக ஆலோசித்து முடிவுசெய்யப்பட்ட ஒரு பொருளாதார சமூகநலத் திட்டத்தின் அடிப்படையில் கட்டியெழுப்புவது என்பது பற்றி எந்த விபரங்களுமே இருவரிடமும் இல்லை. அது மட்டுமா? இன்று இந்த நாட்டின் அரசியலையும், பொது நிர்வாகத்தையும் அதன் விளைவாகப் பொருளாதாரத்தையும் பீடித்துள்ள ஒரு புற்றுநோய் ஊழல். அது தேசத்தின் ஒவ்வொரு அங்கத்தையும் அழித்துஈற்றில் பொருளாதாரத்தின் காப்பாளனாக விளங்கும் மத்திய வங்கியையும் ஊடுருவியுள்ளதெனின் எவ்வாறு பொருளாதாரம் மீட்சி பெறும்? இந்த நோயை எவ்வாறு ஒழிப்பதென்பதைப் பற்றி ஏன் இவ்விரு வேட்பாளர்களும் மௌனியாய் இருக்கின்றனர்?
அதே போன்றே இன அமைதியையும் சமூக சௌஜன்ய உறவையும். நாட்டின் பாதுகாப்புத் துறையினைக்கொண்டு பாதுகாக்க முடியாது. அதற்குமாறாக, அந்த அமைதியையும் உறவையும் குலைக்கும் அடிப்படைக் காரணிகளை நீக்குவதன்மூலமே சாந்தியையும் சமாதானத்தையும் நிலைப்படுத்த முடியும். ஒரு வீணாண போரினைச் சந்தித்த பின்னும் இவ்விரு வேட்பாளர்களும் அந்த உண்மையை உணராதிருப்பது விந்தையே. ஆனால் கோத்தாபய அந்தப் போரினை முன்னின்று நடத்தி வெற்றிகண்டவர்களுள் ஒருவர். அதனால் அந்த வெற்றியின் மமதை அவரின் கண்களை மூடியிருக்கின்றது. அதனால்தான் படைகளிடையே தனக்குள்ள செல்வாக்கைக்கொண்டு அமைதியை நிலைநாட்டுவேன் என்கிறார். இந்த நிலைப்பாடுதான்ட அவரை தமிழ்க் கட்சிகளின் பதின்மூன்று கோரிக்கைகளையும் முற்றாக ஏற்க மறுத்தார்.அவ்வாறாயின் சஜித் அவர்களும் இதனை உணராது அதே கோரிக்கைகளை உதறித் தள்ளியதேன்? இதனை விளக்குமுன் இன்னுமொரு உண்மையை உணர்த்த வேண்டியுள்ளது.
எந்த ஒரு பொருளாதாரமும் மக்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு வளர்ச்சிகாண முடியாது. பெரும்பாக, நுண்பாகப் பொருளியல் பண்டிதர்களும்கூடதனியே உற்பத்தி, விற்பனை, சந்தை, தொழில் நுட்பம், தொழிற்றிறன் என்றவாறு காரணிகளை அடுக்கிக்கொண்டு பேசுகின்றார்களே ஒழிய அவற்றுடன் சம்பந்தப்பட்ட மக்களைப் பற்றியும் அவர்களின் பங்களிப்பு பற்றியும் அதிகம் வலியுறுத்துவதில்லை. இதனாலேதான் எவ்வாறு என்ன வேகத்தில் ஒரு பொருளாதாரம் வளர்கின்றது என்பதைப்பற்றியே அதிகமதிகம் கவனம் செலுத்துகிறார்களே ஒழிய அந்த வளர்ச்சியில் எவ்வாறு மக்கள் பங்குகொண்டுள்ளனர் அதன் விளைவு மக்களைச் சென்றடைகின்றதா என்பதை நோக்கத் தவறிவிடுகின்றனர். இன்று லெபனானிலும், மெக்சிக்கோவிலும், சிலியிலும் ஏன் ஹொங்கொங்கிலும்சுட நடைபெறுவதுபோலும் அன்று மத்தியகிழக்கில் ‘அரபு வசந்தம்’ வெடித்ததுபோலும் பொதுமக்கள் திரண்டெழுந்து வீதிக்குவரும்வரை அவர்களை ஆட்சியாளர்களும் அவர்களின் பொருளாதார ஆலோசனைக் குழுவினரும் மறந்துவிடுகின்றனர்.
இலங்கையிலும் மொத்த சனத்தொகையின் சுமார் கால்வாசிக்கும் அதிகமான சிறுபான்மையினரை நசுக்கி ஒதுக்கிவிட்டுத் தொடரான பொருளாதார மீட்சிகாண முடியாது. எனவேதான் இன அமைதியை நிலைநாட்டுவது எதிர்வரும் ஜனாதிபதியின் தலையாய கடன். இதைப்பற்றி இரு வேட்பாளர்களுக்கும் கவலையில்லை என்பதை தமிழ்க் கட்சிகளின் பதின்மூன்று கோரிக்கைகளில் சிலவற்றையேனும் ஏற்க மறுத்தமை தெளிவாக்குகின்றது. அந்தக் கோரிக்கைகளிலுள்ள பிரதான குறைபாடுகளை இங்கே விபரிக்கத் தேவையில்லை. ஆனால் அவற்றை ஒட்டுமொத்தமாக இரு வேட்பாளர்களும் உதறித் தள்ளியமைக்கு என்ன காரணம்? இதை விளங்கிக்கொண்டால் சிறுபான்மையினர் எவ்வாறு வாக்களிக்க வேண்டுமென்பது தெளிவாகும்.
இன்று இலங்கையின் அரசியலை முற்றாக ஆட்கொண்டிருப்பது பௌத்த ஆதிக்க வெறி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் உருவாகிய பௌத்த அரசியல்வாதம் ¬ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிதா பண்டாரநாயக்காவின் காலத்திலிருந்து பௌத்த சிங்கள வாக்கு வங்கியின் திறவுகோலாக மாறி,2009க்குப் பின்னர்,அதாவது ராஜபக்ஸ ஆட்சி,அதாவது,ஆயுதந்தாங்கிய தமிழ்த் தேசியவாதிகளைப் போரிட்டு வீழ்த்தியபின் பௌத்த அரசியல்வாதம் பௌத்த ஆதிக்கவாதமாக ஒரு பூதாகரமான வடிவத்தைப் பெற்றுள்ளது.
இதன் ஒரே இலட்சியம் இலங்கையின் அரசியலையும் அதன் பொருளாதாரத்தையும், முடியுமானால் கலாசாரத்தையும்கூட, சிங்கள பௌத்தர்களின் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவருவது. 2014இலிருந்து அடுக்கடுக்காய் நடைபெற்ற முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளும்,அவ் வன்செயலாளர்களை சட்டம் கண்டும் காணாததுபோல் இருப்பதும்,அரசியல் தலைவர்கள் அவற்றைப்பற்றி எந்தக் கண்டனமும் தெரிவிக்காததும்,கிழக்கிலும் வடக்கிலும் தொடர்ந்தேற்சியாக நடைபெற்றுவரும் நிலச் சுவீகரிப்புகளும்,புதிதாகத் தோன்றும் பௌத்த விகாரைகளும் புத்தர் சிலைகளும், மிக அண்மையில் முல்லைத்தீவு நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்திடலில் இடம்பெற்ற பௌத்தசிதையொன்றின் தகனமும் இவ்வாதிக்க வெறியின் வெளிப்பாடுகளே.
இதன் எழுச்சிக்குப் பின்னால் பௌத்த பிக்குகளும், பலமான சில ஊடகங்களும்,பல பௌத்த தனவந்தர்களும்,வியாபாரிகளும்,அரசியல்வாதிகளும் இயங்குகின்றனர். இவர்களுக்கு பௌத்த வாக்கு வங்கியில் அதிக செல்வாக்குண்டு. இந்த நிலையில் சிறுபான்மையினரின் கோரிக்கைகளுக்குத் தலைசாய்க்கும் எந்தச் சிங்கள அரசியல் வேட்பாளனும் தேர்தலிலே மண்கவ்வுவது திண்ணம். இதனாலேதான் தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைகளை நஞ்செனக் கருதி இரு வேட்பாளர்களுமே ஏற்க மறுத்தனர்.
இச்சந்தர்ப்பத்தில் மூன்றாவது வேட்பாளரைப்பற்றிச் சில உண்மைகளைக் கூற வேண்டியுள்ளது. அனுர குமர திஸநாயக்க 1960களில் உருவான மக்கள் விடுதலை முன்னணியின் புதிய சகாப்தத் தலைவர். ஆனால், ரோஹண விஜயவீரவின் அன்றைய இனவாத விடுதலை முன்னணியல்ல அதன் இன்றைய அவதாரம். வரலாறு அக்கட்சியினருக்குப் புகட்டிய பல கசப்பான பாடங்களைக் கற்றுணர்ந்து, அதனால் விழிப்படைந்து முதிர்ச்சிபெற்று ஓர் இனவாதமற்ற தேசிய இடதுசாரி மக்கள் எழுச்சி இயக்கமாக அம்முன்னணி இன்று இயங்குகின்றது. தமிழர்களின் கோரிக்கைகளுள் நியாயமானவற்றை ஏற்று அமுல்படுத்துவேன் என்று திஸநாயக்க துணிந்து பேசியது இம்முன்னணியின் புதிய முகத்தை வெளிக்காட்டுகின்றதல்லவா? அது மட்டுமல்ல, தனது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை இனங்களையும் மதங்களையும் மையமாகக் கொண்டல்லாது பொருளாதாரக் கொள்கைகளையும், மக்கள் நலன்பேணும் கொள்கைகளையும், யாவரும் இலங்கையரே என்ற அடிப்படையில் ஊழலற்ற ஓர் அரசியலையும், சமவுரிமைகளுள்ள ஒரு தேசிய சமுதாயத்தiயும் இலக்காகக்கொண்டு பேசிவரும் இவ்வேட்பாளனை சிறுபான்மைஇனங்களிண்டும் மிகப் பரிவுடன் நோக்க வேண்டும். ஏனெனில் சிறுபான்மையினரின் எதிர்காலச் சுபீட்சம் இக்கொள்கைகளிலேயே தங்கியுள்ளது. எனினும், இவர் ஜனாதிபதியாக மாட்டார் என்பது உண்மையே. அவ்வாறாயின் ஏன் இவருக்குப் பின்னால் சிறுபான்மையினர் செல்ல வேண்டும்?
ஆரம்பத்தில் கூறியதுபோல் இவர் ஜெயிப்பதற்காக இக்களத்திற் குதிக்கவில்லை. எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்குள்ள பலத்தை எடைபோடுவதற்கான ஒரு வெள்ளோட்டமே அவரின் முயற்சி. அதேபோன்று சிறுபான்மை மக்களும் தமது இலக்குகளையும் இலட்சியங்களயும் ஜனாதிபதித் தேர்தலுடன் மட்டுப்படுத்தாமல் அதற்கப்பாலே சென்று வகுக்க வேண்டும்.திஸநாயக்காவின் கரங்களைப் பலப்படுத்துவதால் இந்நாட்டின் எதிர்கால அரசியலின்; ஜனநாயகப் போக்கினையும் அனைத்து மக்களின் அமைதியான வாழ்வையும் மேம்பாட்டையும் உங்களால் நிர்ணயிக்க முடியும். எப்படி?
சிறுபான்மை இனங்களிரண்டும் தனித்தனியாகவோ இணைந்தோ பெரும்பான்மை இனத்தவரின் ஆதரவில்லாமல் எந்த உரிமையையோ சலுகையையோ வென்றெடுக்க முடியாது. இதை முக்கியமாக தமிழினம் உணரவேண்டும். முஸ்லிம்களும் தமிழினத்தைப் பணயம் வைத்து இரண்டு தேசியக் கட்சிகளுடனும் அரசியல் பேரம்பேசிச்சலுகைகளைப் பெற்ற காலம் முடிந்துவிட்டதென்பதை உணரவேண்டும். பௌத்த ஆதிக்கவாதத்தின் பிடிக்குட் சிக்கியிருக்கும் இக்கட்சிகள் முஸ்லிம்களுக்கு இனிமேலும் பரிவுகாட்டா. உங்களின் வாக்குகளைப் பெற்றபின் உங்களின் சில தலைவர்களுக்குமந்திரிப் பதவிகளை வழங்குவதோடு அவர்களின் கடமை தீர்ந்துவிடும். ஆகவே பெரும்பான்மைச் சமூகத்திலிருந்து ஒரு பலமுள்ள குரல் சிறுபான்மையினரையும் உள்ளடக்கிய மக்கள் குரலாக ஒலிக்க வேண்டும்.தற்போதைய சூழலில் அந்தக் குரலே திஸநாயக்காவின் தேசிய மக்கள் சக்தி.
இதுவரை இடம்பெற்ற கருத்துக் கணிப்புகளின்படி முன்னிலையில் நிற்கும் இரு வேட்பாளர்களும் அறுதி வெற்றிக்குத் தேவையான ஐம்பத்தொரு சதவீத வாக்குளைப் பெறார் என்பது உறுதி. அவர்களுள் எவர் வென்றாலும் சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. எனவே முஸ்லிம்களும் தமிழர்களும் தமது தலைவர்களின் விருப்புவெறுப்புகளுக்கு முக்கியத்தும் அளியாது சுயமாகச் சிந்தித்து,நீண்டகாலத்தைக் கருத்திற்கொண்டு,தேசிய மக்கள் சக்தியைப் பலப்படுத்தினால் அடுத்து வரப்போகும் பொதுத் தேர்தலில் அக்கட்சி மூன்றாவது சக்தியாக உருவாகி ஒரு தனிப்பாதையில் நாட்டை வழிநடத்தும். ஆந்தப் பாதையிலேதான் சிறுபான்மை இனங்களுக்கு விடிவுண்டு.
ஆதிஷ்டவசமாக,நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பொறுப்பினை இத்தேர்தல் சிறுபான்மையினரின் தலைகளில் வரலாறு சுமத்தியுள்ளது. பொறுப்புடன் இதனைச் சுமப்பரா அல்லது சந்தர்ப்பத்தை நழுவ விடுவரா? ஆஷாடபூதிகளாக நடமாடும் தலைவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

 

 

Author: theneeweb