அமெரிக்காவில் 10 வருடமாக கோமாவில் இருக்கும் பெண்மணி குழந்தை பெற்றார் – பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா?

நியூயார்க் : அமெரிக்காவில் கடந்த 10 வருடமாக கோமாவில் இருந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் கர்ப்பம் அடைந்தாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் உள்ள பீனிக்ஸ் நகரில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஒரு பெண் கடந்த 10 வருடங்களாக ‘கோமா’ நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 29-ந்தேதி கோமாவில் இருந்த பெண் திடீரென வேதனை கலந்த குரலில் முனகினார். அதை அருகில் இருந்த நர்சு கவனித்தார். திடீரென அப்பெண்ணுக்கு பிரசவத்துக்கான அறிகுறிகள் தெரிந்தன.உடனே அவரை பிரசவ அறைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை நலமாக உள்ளது. இச்சம்பவம் டாக்டர்கள் மற்றும் நர்சுக்கு அதிர்ச்சியை அளித்தது.

இவர் கர்ப்பமாக இருந்த விவரம் யாருக்கும் தெரியவில்லை. நோயாளியாகவே சிகிச்சை அளித்து வந்தனர். அப்படி இருக்கும்போது அவரை யாரோ மர்மநபர் கற்பழித்து இருக்கலாம். அதன்மூலம் அவர் கர்ப்பம் அடைந்து குழந்தை பெற்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதுகுறித்து அரிசோனா மாகாண சுகாதாரத்துறை விசாரணை நடத்தி வருகிறது. ஆஸ்பத்திரிகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb