விஜயகலா வழக்கு – டிசம்பர் 13 ஆம் திகதி விசாரணை

விடுதலை புலிகள் அமைப்பு புத்துயிர் பெற வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவர் தொடர்பில் எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் நீதிமன்றத்தை தெளிவுபடுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு நினைவூட்டல் கடித்தை இன்று (01) அனுப்பியுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான அனைத்து விசாரணைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் திட்டமிடப்பட்ட குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அதற்கமைய சட்டமா அதிபரின் ஆலோசனை இதுவரையில் தமக்கு கிடைக்கவில்லை என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்த விடயங்களை கருதிற்கொண்ட கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி சந்தேகநபர் தொடர்பில் எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தை தெளிவுபடுத்துமாறு கோரி சட்டமா அதிபருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.

அதன் பின்னர் வழக்கை டிசம்பர் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதவான் தீர்மானித்துள்ளார்.

வடக்கில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலை புலிகள் அமைப்பு மீண்டும் புத்துயிர் பெற வேண்டும் என தெரிவித்தாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

Author: theneeweb