கண்ணில்லாத காஷ்மீர் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்


மோடி அரசாங்கம், காஷ்மீர் மாநிலத்தை மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தின்கீழ் இரு யூனியன் பிரதேசங்களாக முறையாகப் பிரித்திடும் சமயத்தில், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு குழுவை காஷ்மீருக்கு அனுப்புவதற்கு மூர்க்கத்தனமான முறையில் முடிவினை எடுத்திருக்கிறது. இந்தப் பயணம் ஒட்டுமொத்தத்தில் விதிகளை மீறிய, பொருத்தமற்ற ஒன்றாகும். வருகின்ற  ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 27 பேரில் 22  பேர் அதிதீவிர வலதுசாரிக் கருத்துக்களைக் கொண்டிருக்கக்கூடிய பேர்வழிகள். அவர்கள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ராசெம்ப்ள்மெண்ட் நேஷனல் (Rassemblement National of France), ஜெர்மனியைச் சேர்ந்த ஆல்டர்நேடிவ் ஃபார் டெட்ச்லேண்ட் (the Alternative for Deutschland of Germany), போலந்தைச் சேர்ந்த ஜஸ்டிஸ் அண்ட் லா பார்ட்டி (the Justice and Law Party of Poland), இத்தாலியைச் சேர்ந்த ஃபோர்சா இட்டாலியா அண்ட் லேகா நார்ட் (the Forza Italia and Lega Nord of Italy), ஸ்பெயினைச் சேர்ந்த வாக்ஸ் (Vox of Spain), பெல்ஜியத்தைச் சேர்ந்த விளாம்ஸ் பெலாங் (Vlaams Belang of Belgium), மற்றும் இங்கிலாந்தின் பிரெக்சிட் கட்சி (the Brexit Party of UK) போன்ற கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறவர்கள்.

இந்திய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் ஸ்ரீநகருக்குச் செல்வதைத் தடுக்கின்றபோது, எப்படி ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் சரியாகவே கேட்டிருக்கின்றன. இது மோடி அரசாங்கத்தின் நம்பத்தகாத அரசியல் சூழ்ச்சியைத் தோலுரித்துக் காட்டி இருக்கிறது. மேலும், இந்தப் பயணத்தின் மற்றுமொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், இவ்வாறு வருகின்ற பேர்வழிகள் அனைவரின் சித்தாந்த மற்றும் அரசியல் குணம் அநேகமாக ஒன்றாகும்.

இந்தக் கட்சிகள் அனைத்துமே ஒரு பொதுவான குணத்தைப் பெற்றிருக்கின்றன. அது என்னவெனில், இஸ்லாமிய எதிர்ப்பு. (Islamophobia.). இவர்களின் தலைவர்கள் எப்போதுமே நிறவெறிக் கருத்தக்களை, நவீன பாசிஸ்ட் கருத்துக்களை  உமிழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

 இவ்வாறு காஷ்மீருக்கு, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு சிலரைப் பொறுக்கியெடுத்து அழைத்துவந்திருப்பது, ஜம்மு-காஷ்மீர் மீதான தாக்குதலின் பின்னே இந்துத்துவா வெறி இருந்திருப்பதை வெளிப்படுத்துகிறது. காஷ்மீரில் வாழும் முஸ்லீம் மக்கள் மத்தியில், ‘இந்தியாவில் உள்ள மாநிலங்களில் நம் மாநிலம் மட்டுமே பெரும்பான்மையாக முஸ்லீம்கள் வாழும் மாநிலம் என்பதால்தான் நாம் இவ்வாறு தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறோம்’ என்று விரிவான அளவில் இருக்கின்ற உணர்வை உறுதிப்படுத்துவதுபோலவே இது அமைந்திருக்கிறது.

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் காஷ்மிருக்கு வந்துள்ள பயணம் ஓர் அதிகாரபூர்வ பயணத்திற்கு உள்ள அனைத்து அம்சங்களையும் பெற்றிருக்கிறது. இந்தப் பயணத்திற்காக ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், பிரஸ்ஸல்ஸில் இந்திய வம்சாவளி ஒருவரின் தலைமையின்கீழ்  பெயரளவில் இயங்கும் அரசு சாரா நிறுவனம் ஒன்றின் மூலம்  தனித் தனியே பொறுக்கி எடுக்கப்பட்டு வரவழைக்கப் பட்டிருக்கிறார்கள்.  தில்லியில், இந்தக் குழுவினரை தேசிய பாதுகாப்பு ஆலோசகர்,அஜித் டோவல்,  சந்தித்துப் பேசியிருக்கிறார். ஸ்ரீநகரில் ராணுவ கமாண்டர் இவர்களைச் சந்தித்துப்  பேசியிருக்கிறார்.

ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதாகவும், மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் ஐ.நா.அமைப்புகளிடமிருந்தும், அமெரிக்காவின் காங்கிரஸ் பிரதிநிதிகளிடமிருந்தும் சர்வதேச அளவில் விமர்சனங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதை எதிர்கொள்வதற்காகவே, பாஜக அரசாங்கம் இப்படி பொறுக்கியெடுத்து ஒரு குழுவை காஷ்மீருக்கு வரவழைத்திருக்கிறது. உண்மையில் இது இவர்களின் சொரூபத்தை – அதாவது நாங்கள் அதிதீவிர முஸ்லீம் எதிர்ப்பாளர்களே என்கிற உண்மையை – இத்தகைய அதிதீவிர முஸ்லீம் எதிர்ப்பாளர்கள்தான் மோடி அரசாங்கத்தின் ஜம்மு – காஷ்மீர் மீதான  ஜனநாயக விரோதத் தாக்குதல்களை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை, சர்வதேச அளவில் மேலும் தோலுரித்துக் காட்டியிருக்கிறது.

இவ்வாறு வந்திருக்கும் கட்சிகளில் வாக்ஸ் (Vox) மற்றும் லேகா (Lega)

போன்ற பல கட்சிகள்  இஸ்ரேல், பாலஸ்தீன மக்களை நசுக்குவதை ஆதரிப்பனவாகும்.

காஷ்மீர் மக்கள், மோடி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்கிற இந்த நடவடிக்கையை ஸ்ரீநகரிலும் மற்றும் பல இடங்களிலும் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக ஸ்தம்பிக்க வைத்து தங்கள் எதிர்ப்பினைக் காட்டி இருக்கிறார்கள்.  அனைத்துக் கடைகளும் அவர்கள் வந்த சமயத்தில் மூடப்பட்டிருந்தன. ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்த சமயத்தில் சாலைகளில் எவ்வித இயக்கமும் இல்லை.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சிதைத்து, இரு யூனியன் பிரதேசங்களாக அதிகாரபூர்வமாக அறிவித்திருப்பதை, காஷ்மீர் மக்கள் ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் பதிலடி கொடுத்திருக்கின்றனர். சுமார் மூன்று மாதங்களாக மூடப்பட்டிருக்கிற நிலையில் காஷ்மீர் மக்கள் தங்கள் எதிர்ப்பினைக் காட்டத் தொடங்கி இருக்கிறார்கள்.  நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட வட்டார வளர்ச்சிக் கவுன்சில்களுக்கான தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தல்கள் கேலிக்கூத்தானவைகளாக மாறிவிட்டன.

அரசின் அடக்குமுறை, மக்கள் ஆட்சியாளர்களிடமிருந்து முற்றிலுமாகத் தனிமைப்பட்டிருத்தல் மற்றும் தங்கள் எதிர்ப்பினைக் காட்டத் துவங்கியிருக்கிற இத்தகைய சூழ்நிலையில்தான் மாநிலத்தின் வெளியிலிருந்து புலம்பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்கள் மற்றும்  இதர மக்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன. மேற்கு வங்கத்திலிருந்து புலம் பெயர்ந்து வந்துள்ள ஐந்து தொழிலாளர்கள் குல்காமில்  கொடூரமான முறையில்   கொல்லப்பட்டிருப்பதும், இதற்கு முன்னதாக ஆறு வர்த்தகர்களும் தொழிலாளர்களும் கொல்லப்பட்டிருப்பதும், காஷ்மீர் மீண்டும் ‘வன்முறைத் தாக்குதல், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் வன்முறைத் தாக்குதல்’ என்கிற விஷ வட்டத்திற்கான   கடும் எச்சரிக்கையாகும்.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மக்களின் மீதான தாக்குதல்களுக்கு எதிராகக் கண்டனக்குரல் கொடுப்பதும், அவர்களின் ஜனநாயக உரிமைகளை மீண்டும் அவர்களுக்கு அளிக்கப்படவும்,  அங்கே ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்துவிதமான தடைகளையும் நீக்கிடவும், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவித்திடவும், அரசாங்கமே அப்பகுதிகளை முடமாக்கி வைத்திருப்பதற்கு முற்றுப்புள்ளிவைத்திடவும் ஆட்சியாளர்களைத்  தேவையான நடவடிக்கைகள் எடுப்பது என்பது நாட்டிலுள்ள ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளுக்கு மேலும் அதிகமான கடமையாக மாறியிருக்கிறது.

(அக்டோபர் 30, 2019)

(தமிழில்: ச.வீரமணி)

Author: theneeweb