சஜித்திற்கான ஆதரவு ; கூட்டமைப்பின் நிலைப்பாடு விரைவில் அறிவிக்கப்படும் – சுமந்திரன்

பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையிலான இலங்கை தமிழரசு கட்சி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று காலை வவுனியாவில் நடைபெற்றது.

இம் மத்திய குழு கூட்டத்தில் , ஜனாதிபதித் தேர்தலின் பிரதான வேட்பாளர்களான சஜித் பிரேமதாச மற்றும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்டோரின் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவ கட்சியான தமிழரசு கட்சியின் இந்த தீர்மானம் குறித்து அதன் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் வினவிய போது ,

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித்துக்கு ஆதரவளிப்பதற்கு தமிழரசு கட்சியின் மத்திய குழுவில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த தீர்மானத்தை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் தினங்களில் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் தலைவர்களுடனும் இது தொடர்பில் பிரிதொரு பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதன் பின்னர் கூட்டமைப்பின் இறுதி நிலைப்பாடு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Author: theneeweb

Copyright © 2019 Thenee