ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தெளிவாகச் சிந்திக்க வேண்டும். – முருகேசு சந்திரகுமார்

நேர்காணல்  –

(தலைவர், சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு)

1.   எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் உங்கள் அமைப்பு எவ்வாறு செயற்படவுள்ளது.

மிகக் கடினமான ஒரு நிலையை இந்த ஜனாதிபதித் தேர்தல் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு இந்தத் தேர்தல் ஒரு பொறியாகவே வந்துள்ளது. வெளிப்படையான இனவாதமே இந்தத் தேர்தலில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. சிங்கள, பௌத்த முதன்மை வாதத்தையே பிரதான வேட்பாளர்கள் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கக் கூடிய வேட்பாளர் இவர்தான் என்று நம்பிக்கையோடு தெரிவு செய்யக்கூடிய நிலையில் எவருமில்லை என்பதே உண்மை. யுத்தம் முடிந்து பத்தாண்டுகள் கடந்த பிறகும் எமது மக்கள் பல்வேறு தீர்க்கப்படாத பிரச்சினைகளின் மத்தியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதற்குப் பொறுப்புச்சொல்லக்கூடிய, இதற்கான பொறுப்பை ஏற்கக் கூடியநிலையில் எந்தப் போட்டியாளர்களுமில்லை. அத்துடன் இலங்கைத்தீவு எதிர்நோக்குகின்ற பொருளாதார நெருக்கடி, இனமுரண், ஊழல், இயற்கை வளச் சிதைப்பு – வள அபகரிப்பு, வேலையில்லாப் பிரச்சினை போன்றவற்றுக்கான தீர்வுகளையும் எவரும் முன்வைப்பதைக் காண முடியவில்லை. எனவே நாம் இதையெல்லாம் கவனத்திற் கொண்டே தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது.

நம்முன்னே உள்ள இந்தப் பொறியை எப்படிக் கையாள்வது என்பதைக் குறித்து பல்வேறு நிலைகளில் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். எமது தீர்மானம் எந்த நிலையிலும் மக்களுக்கு பாதிப்பை உண்டாக்கக் கூடாது. அதேவேளை அது ஒரு வரலாற்றுத் தவறாகவும் அமைந்து விடக்கூடாது என்பதில் கவனம் கொண்டுள்ளோம்.

2.   ஐந்து கட்சிகளின் 13 கோரிக்கைகள், அவர்களது முடிவு குறித்து என்ன கருதுகிறீர்கள்?

இந்தக் கட்சிகளின் கூட்டும் இவற்றின் கோரிக்கைகளும் எமக்குப் எந்த நம்பிக்கைகளையும் வியப்பையும் அளிக்கவில்லை. நமது நடைமுறை அனுபவங்களை வைத்துப் பார்த்தால், இந்தக் கோரிக்கைகளை எந்தப் பிரதான வேட்பாளரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது  தெளிவாகவே தெரியும். அப்படியென்றால் எதற்காக இந்தக் கோரிக்கைகள்? சரி, இந்தக் கோரிக்கைகள் தமிழ் மக்களின் பாற்பட்டவை. தமிழ்ச்சமூகத்தின் அடிப்படைகளைப் பிரதிபலிப்பவை என்றால், இந்தக் கோரிக்கைகளைப் பிரதான வேட்பாளர்கள் எவரும் ஏற்க மறுக்கும்போது நாம் எத்தகைய தீர்மானத்தை எடுப்பது? அடுத்த கட்டம் என்ன? அதை ஒரு பொறியாகவும் பொறிமுறையாகவும் மாற்றக்கூடிய வல்லமை எம்மிடம் உண்டா? அதாவது இந்த வேட்பாளர்கள் எமக்கு உருவாக்கியிருக்கும் நெருக்கடியைப்போல நாம் இவர்களுக்கு நெருக்கடியை உருவாக்கக் கூடிய பொறியாகவும் பொறிமுறையாகவும் எமது கோரிக்கைகள் அமைந்தனவா? அப்படி எதுவும் இல்லை என்பதைத்தானே இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பிறகு, ஐந்து கட்சிகளும் கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றமை காட்டுகின்றது.

ஆனால், நிச்சயமாக நாம் அவ்வாறான ஒரு பொறியையும் பொறிமுறையையும் உருவாக்கியிருக்க முடியும். அப்படி ஒரு வீரியமிக்க பொறிமுறைக்குரிய கோரிக்கையை நாம் முன்வைத்திருக்க வேண்டும். சர்வதேச சமூகத்தின் மொழியில், எதிர்த்தரப்புகள் தடுமாறக்கூடிய, பொறுப்புச் சொல்லக்கூடிய அளவுக்கு அந்தக் கோரிக்கைகளை நாம் உருவாக்கியிருக்க வேண்டும். இதற்கான சாத்தியங்களும் தாராளமாகவே இருந்தன. ஆனால், அது செய்யப்படவில்லை. எனவேதான் இந்தக் கோரிக்கையாளர்கள் மீளவும் தோல்வியைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டது. பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சியைப் பாராட்டுகிறேன். அவர்களுடைய நோக்கத்தை வெற்றியடைய வைத்திருக்க வேண்டிய பொறுப்பு ஏனையோருக்குண்டு. அதைச் செய்யத் தவறியது தவறு.

3.   தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ள பிரதான இரு வேட்பாளர்கள் தரப்பு உங்கள் அமைப்புடன் சந்திப்புகளை நடத்தியதா?

பல முயற்சிகளை இரு வேட்பாளர்களின் தரப்புகள் மட்டுமல்ல பிற தரப்பினரும் மேற்கொண்டிருந்தனர். நாம் எமது நிலைப்பாட்டினைத் தெளிவாக அவர்களுக்குச் சொன்னோம். ஏற்கனவே அவற்றை ஊடகங்களிலும் வெளியிட்டிருந்தோம். ஆகவே அந்த நிலைப்பாட்டின் வழி நின்றே நாம் சிந்திக்க முடியும். முடிவெடுக்கக் கூடியதாக இருக்கும் என. எமது நிலைப்பாட்டை அவர்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும் என நம்புகிறேன்.

4.   தேர்தல் பிரச்சாரக் கூட்டம், தேர்தல் விஞ்ஞாபனம் ஆகியவற்றின் பிரகாரம் தமிழ் மக்களுக்குச்  சொல்லப்படும் கருத்து என்னவெனக் கருதுகிறீர்கள்?

இலங்கையின் அரசியல் யதார்த்தமும் வரலாறும் உங்களுக்கு நன்றாகத் தெரியும். தேர்தல் விஞ்ஞாபனங்கள் என்ற சமூக ஆவணங்களுக்குப் பொறுப்புச்சொல்லும் அரசியற் பண்பாடு நம்மிடமில்லை. ஏன், தமிழ்க்கட்சிகளே அந்தப் பண்பாட்டைப் பின்பற்றுவதில்லை. அப்படியிருக்கும்போது எட்டப்பட்ட இருதரப்பு உடன்படைக்கைகள், பிற நாட்டு மத்தியஸ்தங்களோடு எட்டப்பட்ட உன்பாடுகள் போன்றவற்றையே மீறிய தரப்புகள்தான் இப்பொழுது ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் மயக்க வார்த்தைகளை வைத்து அழகாகத் தயாரித்திருக்கின்றன. இந்த விஞ்ஞாபனங்களிலும் சரி, தேர்தல் பரப்புரைகளின்போதும் சரி தமிழ் மக்கள் திருப்தியடையக்கூடிய அடிப்படைகள் எதையும் காண முடியவில்லை. தமிழ் மக்கள் மட்டுமல்ல, தமிழ் மொழித்தேசிய இனங்களுக்குரிய விடயங்களும் திருப்தியான முறையில் இல்லை. ஆகவே இதுகால வரையிலும் இல்லாத அபாய நிலை ஒன்று இப்பொழுது உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரையிலும் இனப்பிரச்சினை என்ற ஒரு பிரதான விவகாரம் உண்டு என்பது பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. ஆகவே அதற்கான தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலையும் காணப்பட்டது. ஆனால், இது இப்போது இல்லாமலாக்கப்பட்டுள்ளது. இது மிகமிக ஆபத்தான ஒரு போக்கு. இந்த நிலைக்குக் காரணம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கடந்தகால, நிகழ்கால நிபந்தனைகளற்ற, கண்மூடித்தனமான அரசியலேயாகும். மிகவும் பலவீனமான அரசியலைக் கூட்டமைப்பு மேற்கொண்டதால் வந்தவினை இது. பலவீனமான முறையில் அரசியலைக் கையாண்டு விட்டு கோரிக்கைகளை மட்டும் பலமான தோற்றத்தோடு முன்வைப்பதால் எந்தப் பயனுமில்லை. இதையே தமிழ்ச்சமூகம் இன்று தண்டனையாகப் பெற்றிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். மாற்றப்பட வேண்டும்.

5.   தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

முதலில் மக்கள் தெளிவாகச் சிந்திக்க வேண்டும். யுத்தம் முடிந்து பத்து ஆண்டுகள் கடந்து விட்டன. இந்தப் பத்தாண்டுகளிலும் பல தேர்தல்களில் மக்கள் நம்பிக்கையோடு வாக்களித்திருக்கிறார்கள். மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிகார ஆட்சிகள் ஜனாதிபதி என்ற அதிகார பீடத்திலும் பாராளுமன்றத்திலும் மாகாணசபையிலும் உள்ளுராட்சி சபைகளிலும் அமைந்திருக்கின்றன. ஆனால், மக்களுடைய  அந்த நம்பிக்கைகள் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டன? மக்களுடைய எந்தப் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன? அப்படியென்றால் ஏன் அந்த நம்பிக்கைகள் பொய்த்துப்போனது? தமிழ்த் தரப்பை எடுத்துக் கொள்ளுவோம். இந்த நம்பிக்கைகளை ஊட்டியவர்கள் இதற்கான பொறுப்புக்களை எடுத்தார்களா? இதற்கான மாற்று வழிகளைக் கண்டார்களா? அரசாங்கத்தைக் கொண்டு சிறிய பிரச்சினைகளைக் கூடத் தீர்த்து வைத்தார்களா? இதையெல்லாம் மக்கள் தெளிவாகச் சிந்திக்க வேண்டும். அப்படிச் சிந்திக்காமல் வெறுமனே உணர்ச்சி வசப்பட்டுத் தீர்மானங்களை எடுப்பது பொருத்தமானதல்ல. அப்படி அறிவுக்கு அப்பாற்பட்டு உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தீர்மானங்களை எடுத்தால் எங்களுடைய எந்தப் பிரச்சினையும் தீரப்போவதில்லை. மேலும் மேலும் பிரச்சினைகள் கூடிக்கொண்டேயிருக்கும். ஆனால், அப்படியான வகையில் தீர்மானம் எடுக்குமாறே மக்களை இவர்கள் திரும்பவும் தூண்டுகிறார்கள்.

கடந்த பதினைந்து ஆண்டுகால அரசியல் தெரிவு என்பது யார் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதாக இல்லாமல் யார் தெரிவு செய்யப்படக் கூடாது என்பதாகவே இருக்கிறது. இது எதிரிக்குச் சகுனம் பிழைக்க வேண்டும் என்பதற்காக எமது மூக்கினை நாமே உடைப்பதைப்போன்றது. அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பரும் இல்லை என்ற அரசியல் அறிவனுபவத்தைப் பாடமாகக் கொண்டு நாம் தெரிவுகளைச் செய்ய வேண்டும். எவர் அதிகாரத்துக்கு வந்தாலும் அவர்களை நம்மால் கையாள முடியும் என்ற நம்பிக்கையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆற்றலும் அறிவும் உள்ள சமூகத்துக்கு அதுவே அழகு.

தற்போதுள்ள அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியலை மிக மோசமாகப் பலவீனப்படுத்தியது மட்டுமல்ல இனப்பிரச்சினை என்ற ஒன்றைப்பற்றியே பேசத் தேவையில்லை என்ற நிலையை உருவாக்கியது. இந்த அரசாங்கமே மேலும் தொடர்ந்தால் அது தமிழ்ச்சமூகத்தை மரணக்குழியிலேயே கொண்டுபோய் விடும். ஆகவே இதைப் புரிந்து கொண்டு மக்கள் செயற்படுவது அவசியம். முதலில் மக்கள் தமது சுய பாதுகாப்பையும் முன்னேற்றத்தையும் எட்ட வேண்டும். அதைக்குறித்து சிந்திக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

6.   ஜனாதிபதித் தேர்தல் தமிழ் மக்களின் அரசியல் பயணத்துக்கு எவ்வாறான தாக்கத்தைக் கொடுத்துள்ளது?

இந்தத் தேர்தல் தமிழ் மக்கள் மிகமிக நிதானமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டியதொரு நிலையை உண்டாக்கியுள்ளது. அறுபது ஆண்டுகால வரலாற்றில் முதற்தடவையாக இனப்பிரச்சினையைப் பற்றியே பேசத்தேவையில்லை என்ற ஒரு நிலையை தென்னிலங்கை அரசியற் சக்திகள் துணிகரமாக மேற்கொள்ளக்கூடிய நிலையை இந்தத் தேர்தல் உண்டாக்கியுள்ளது. ஆகவே இதைப் புரிந்து கொண்டு தமிழ் மக்கள் செயற்பட வேண்டும். இதற்குப் பிரதான காரணம் தென்னிலங்கை அரசியற் சக்திகள் என்பதை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனுடைய வழி நிற்கும் தரப்புகளுமே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே நாம் கூறியிருப்பதைப்போல பலவீனமான அரசியலை மேற்கொண்டதால் வந்த விளைவே இதுவாகும். இந்த ஜனாதிபதித் தேர்தலானது பாராளுமன்றத் தேர்தலுக்கான அடிப்படையை உருவாக்குது என்பதால், அதற்கான கட்டியத்தைக் கொண்டிருப்பதால் மக்கள் அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலையும் கவனத்திற் கொண்டு வாக்களிக்க வேண்டும். தமது தெரிவுகளைச் செய்ய வேண்டும்.

தேர்தல் என்பது எமக்குக் கிடைக்கின்ற ஒரு நல் வாய்ப்பு. அதைச் சரியாகக் கையாளவில்லை என்றால் அடுத்து வரும் காலம் எமக்குத் தண்டனைக்காலமாகவே அமைந்து விடும். சரியான முறையில் புத்திசாலித்தனமாகக் கையாண்டால் வெற்றியைப் பெற முடியும். எந்தச் சந்தர்ப்பத்திலும் வெற்றிக்கான வாய்ப்புகள் தாராளமாகவே உண்டு. நாம் நமது சிந்தனை முறையை மாற்றி, புதிய நம்பிக்கைகளை வைத்துச் செயற்பட்டால் நிச்சயமாக வெற்றி கிட்டும். அது முழுமையான வெற்றியாக இல்லாது விட்டாலும் பகுதி வெற்றிகள் முதலில் கிட்டும். அந்தப் பகுதி வெற்றிகள் ஒரு கட்டத்தில் முழுமையான வெற்றியாக அமையும். இதையே இன்று உலகம் முன்மொழிகின்றது.

ஆகவே மக்கள் தங்களுடைய கடந்த காலப்படிப்பினைகளைக் கொண்டு எந்த விதமான மயக்கங்களுமில்லாமல், அச்சமற்று தெரிவுகளைச் செய்ய வேண்டும்.

 

“ஒரு செயலைச் சிறப்பாகச் செய்வதற்கு வாய்ப்பிருக்கும்போது அதை மோசமாகச் செய்வதுதான் மன்னிக்க முடியாத மாபெரும் தவறு” என்ற ஃபிடல் காஸ்ரோ அவர்களின் கருத்தினை இந்த இடத்தில் தெரிவிப்பது பொருத்தமாகும்.

ஆகவே, நாம் நிதானமாகச் சிந்திக்க வேண்டும் என்ற ஒரு நிலையை இந்தத் தேர்தல்  தமிழ் மக்களுக்கு உணர்த்தியிருக்கிறது. தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கும் மலையக மக்களுக்கும் கூடத்தான்.

(ஞாயிறு தினக்குரல்) 03.10.2019

Author: theneeweb