தோப்பில் முகம்மது மீரானின் சாய்வுநாற்காலி – நாவல் – நடேசன்

வாசிப்பு அனுபவம் நடேசன்

தோப்பில் முகம்மது மீரான் எழுதிய சாகித்திய அக்கடமி விருது பெற்ற நாவல் சாய்வுநாற்காலியை அவரை நினைவு கூர்ந்து பேசுவதற்காக இரண்டாவது முறையாக வாசித்தேன்.

காதலித்தபோது தெரியாத பெண்ணின் பக்கங்களை பிற்காலத்தில் மனைவியாக்கியபின் புரிந்து கொள்வது போல் இருந்தது.

முதல்முறை வாசித்தபோது கண்ணில்படாத பல புதிய தருணங்கள் அவிழ்ந்து அழகு காட்டியது. இம்முறை இலகுவாக நாவலின் புதிய இடுக்குகள், மடிப்புகளுக்குள் பயணிக்க முடிந்தது.

தாத்தா குதிரை வைத்திருந்தார் என்ற பாரம்பரிய பெருமைகளை பேசியபடி நிகழ்காலத்தை வீணாக்கும் சமூகங்களை நம்மால் நாள்தோறும் நம் எதிரே தொலைக்காட்சியில் தெரிகிறது. முன்னாள் மகோன்னதங்கள் பின்னாளில் சிதிலமாகிறது.
சமூகங்கள் மட்டுமல்ல தனிமனிதர்கள் பாரம்பரிய பெருமைகளை இறுகப் பிடித்தபடியே தொங்கும்போது நிகழ்காலம் அவர்களைக் கடந்து விட்டு செல்கிறது.

வுரீன் பிள்ளை என்ற வீரனின் வழிவந்த முஸ்தபாகண்ணு தனது வாழ்நாளைச் சாய்வு நாற்காலியில் இருந்தவாறு வீணடிக்கும் கதையே இந்தநாவல் .

தனியொரு மனிதனது கதை மட்டுமல்ல, ஐந்து தலைமுறையை சேர்ந்தவர்களது கதை; இவர்கள் வாழ்ந்த தென்பத்தன் கிராமத்தின் சரித்திரம்; திருவிதாங்கூர் இராஜ்ஜியத்தின் வரலாறும் பிணைந்து நாவலில் வருகிறது.

திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்ட வர்மா, அரசாள்வதற்கு உறுதுணையாக இருந்த வீரனான பவுரீன்பிள்ளைக்கு அரசர் அளித்த வெகுமதிகள் , நில புலன்கள், வீடு, தோட்டம் என்பன அவரை ஒரு செல்வந்தராக்கியது. அவரிடமிருந்து ஒரு பரம்பரை உருவாகிறது. ஆண் பரம்பரையினர் தென்பத்தன் கிராமத்தில் வளமாக வாழ்ந்து வழிகாட்டி வருகிறார்கள். அந்தப்பரம்ரையில் இறுதியாக வரும் முஸ்தபாகண்ணு, அந்தச் செல்வத்திற்கும் புகழிற்கும் முற்றுப்புள்ளி வைக்கிறார் .

அடங்க மறுக்கும் காமத்தையும் , அதற்காக எதையும் செய்யத்தயங்காத மனநிலையும் கொண்டவர் முஸ்தபா கண்ணு. அவரது செயல்களைத் தூண்டும் அவரது இதயம் எப்படியானது..? என்ற முன்னறிவிப்பு எமக்கு நாவலின் முதல் அத்தியாயத்திலேயே தெளிவாகிவிடுகிறது.

ஊரில் உள்ள மதராசா மீது தென்னை மரமொன்று விழுந்ததால் படித்துக் கொண்டிருந்த குழந்தைகள் இறந்துவிட்டன. ஊரே பதறுகிறது.

முஸ்தபா கண்ணு சாய்வு நாற்காலியில் கிடந்தபடி – “அதென்ன கரச்சல் ? எனக்கேட்ட போது,

“ மதரஸாவுக்கே மேலே தெங்கு விழுந்து நிறையப் புள்ளியோ மௌத்தாபோச்சாம் “ என்கிறாள் மனைவி மரியம் பீவி.
எந்த உணற்சியுமற்று சிகரட்டைப்பற்றியவரிடம்,

“எழும்பிமாருங்கோ – நம்ம புள்ளையோ இல்லையா –? “ என்றாள் மரியம்பீவி

தாடியை கையால் ஒதுக்கிய முஸ்தபாக்கண்ணு,

“மணி எட்டாச்சு – பசியாற உண்டோ ?? “ எனக்கேட்கிறார்.

இந்தச் சிறிய சம்பவத்தையும் அது தொடர்பான உரையாடலையும் முதல் அத்தியாயத்திலே எமக்கு அறிமுகப்படுத்தி, அந்தப் பாத்திரத்தின் மனநிலையை தெரியப்படுத்தும்போது, இனிவரும் நிகழ்வுகள் எப்படியிருக்கும் என்பதை வாசகர்கள் புரிந்து விடுகிறார்கள்.
இனிமேல் அதிர்ச்சியும் அடையவேண்டியதில்லை என்ற போதிலும் பெண்களை பால்கறக்கும் மாடுகளாக தொழுவத்தில் கட்டியபின்பு பால் வற்றியதும் கிழட்டு மாடு பிரயோசனமில்லையென அதபு பிரம்பால் அடித்து கொலை செய்வதை படிக்கும்போது நெஞ்சம் திடுக்கிடுகிறது.

நாவலில் வரும் முஸ்தபாக்கண்ணுவை வாசகர்களால் வெறுக்கப்படும் பாத்திரமாக்குவதில் தோப்பில் முகம்மது மீரான் வெற்றி காண்கிறார்.

நாற்பது வருட திருமணத்தில் கண்ட பயன் என்ன..? என ஏங்கித் தற்கொலை செய்ய முயன்றாலும் மரியம்பீவியால் முடியவில்லை.
வாப்பாவின் நடத்தையை வெறுத்து வீட்டை விட்டு சென்ற மகனைக் ஒரு முறையானும் காணவேண்டும் என்ற எண்ணம் தற்கொலையைத் தடுக்கிறது. இதன் மூலம் தாயின் தாயின் மனநிலையைப் நமக்கு படம் பிடித்துக்காட்டி மரியம்பீவியையும் மறக்க முடியாத பாத்திரமாக்கியிருக்கிறார் .

இந்தக் கதையில் வரும் அஃறிணைப் பொருட்களான சவ்தாமன்ஸிலின் சாய்வு நாற்காலி, அலுமாரி, பிரம்பு மற்றும் வாள் என்பன உயிர் வாழும் மனிதர்களைப்போல் நாவலின் பக்கங்களிலிருந்து எழுந்து வந்து கதை சொல்வதனால் அவையும் வாசிப்பவர்களது மனதில் வாழ்கின்றன.

ஒரு பிரம்பு, போர்க்கருவியாகி பல பெண்களின் உயிர்களை கொன்று விடுகிறது. பூண்போட்ட அந்த அதபு பிரம்பை முஸ்தபாக் கண்ணின் மகன் பலமுறை உடைக்க முயன்றும் அது உடையாதிருப்பதிலிருந்து தொடரும் பெண்ணடிமைத்தனம் படிமமாக வருகிறது

முஸ்தபாகண்ணுக்கு எடுபிடியாக வரும் இஸ்ராயில் ஒரு வித்தியாசமான பாத்திரம். மரியம்பீவியிடம் அன்பு செலுத்தி , அவளைத் தாயாக நினைத்து முஸ்தபாகண்ணிடம் இருந்து அவளை பாதுகாக்க நினைப்பதன் மூலம் சிறிய பாத்திரமாக சிருட்டிக்கப்பட்டாலும் இஸ்ராயிலும் முழுமையான பாத்திரம்தான்.

நஸீமாவின் பாத்திரம் வித்தியாசமானது . பெண்களை தனது காமத்திற்குப் பலியாக்கி பின் கொலைகளைச் செய்து வரும் தனது காக்காவான முஸ்தபாகண்ணை வெறுப்புடன் பார்த்து தனது கணவனை உறவில் இருந்து விலக்கியிருப்பதும் இறுதியில் கணவன் ஒரு மீன்காறியுடன் சென்றதனால் அவனில் மீன் மணப்பதை புரிந்துகொள்ளும்போது தனது தவறை உணர்வதாகவும் கதை நகருகிறது.

காமம் பிணியாக பீடித்த முஸ்தபாகண்ணும் , காசநோயுடன் வாழும் மரியம்பீவியும் , காமத்தை அடக்கியபடி மன உளைச்சலோடு எப்பொழுதும் படுக்கையில் இருக்கும் நஸீமாவும் சவ்தா மன்ஸிலை நோயாளிகள் வாழுமிடமாக்கியிருக்கிறார்கள்.

தோப்பில் முகம்மது மீரான் சாய்வுநாய்காலி என்பதற்குப் பதிலாக சவ்தா மன்ஸில் என்ற பெயரை நாவலுக்கு வைத்திருக்கலாம் . மேலும் முஸ்தபாக்கண்ணு எந்த இடத்திலாவது ஈரமுள்ள நெஞ்சத்தினராக காட்டப்பட்டிருந்தால் அல்லது அவரது குரூரமான குணத்திற்கான நியாயங்கள் சொல்லப்பட்டிருந்தால் அந்தப் பாத்திரம் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும்.

நகைச்சுவை இழையோடும் நாவல். மொழிநடையில் மலையாளமும் அரபும் கலந்திருந்தபோதிலும் ஆழ்ந்து படிப்பவருக்குத் தடையாகவில்லை.

சாய்வு நாற்காலி – தமிழ் நாவல்களில் முக்கியமானதெனக் கருதுகின்றேன்.

Author: theneeweb