எஞ்சி நிற்கும் நம்பிக்கையீனங்கள்

—       கருணாகரன் —

“நாட்டிலே ஒருவிதமான மந்த நிலை காணப்படுகிறது” என்கிறார்கள் நண்பர்கள். அவர்களுடைய முகமும் சோர்ந்தபடியே உள்ளது. உடலில் கூட எந்த உற்சாகத்தையும் காணவில்லை. ஏதோ போஷாக்குக் குறைந்து விட்டவர்களைப் போலிருக்கிறார்கள். அதுவும் எல்லோருக்கும் இப்படியாக ஒரு சோர்வு ஒரேயடியாக வந்திருக்கிறது என்றால், இது ஏதோ பொதுப்பிரச்சினையின் விளைவாகத்தானிருக்க வேண்டும்.

மனதிலே நம்பிக்கையீனம் வந்து விட்டால் முதலில் காணாமல் போவது உற்சாகமும் மகிழ்ச்சியும் என்பது உங்களுக்கும் தெரிந்ததுதான். பதிலாக அந்த இடத்தில் சோர்வும் துக்கமும் வந்து குந்தி விடும் என்பதும் நீங்கள் அறிந்ததே.

நண்பர்களுடைய துக்கத்துக்குக் காரணம் புரியாமல் “ஓ. அப்படியா?” என்று மிகச் சாதாரணமாகத்தான் கேட்டேன்.

“இந்தப் பகிடியெல்லாம் வேண்டாம். நாடு கெட்டிருக்கிற கேட்டுக்குள்ள உனக்கு வம்பு, என்ன?” என்று வலு சூடாகக் கேட்டான் ஒரு நண்பன்.

”நாடு எப்போதுதான் நன்றாக இருந்தது? அப்படி நல்லபடியாக இருப்பதற்கு யார்தான் விட்டார்கள்?” என்று நானும் பதிலுக்குச் சூடாகக் கேட்க நினைத்தேன். எதற்குத் தேவையில்லாத வம்பு என்று விட்டு விட்டேன். தப்பித் தவறி அப்படிக் கேட்டாலும் அதற்குப் பிறகு, அதுவே பெரிய விவாதமாகி நட்பையே கெடுத்துக் கொள்ளும் அளவுக்குப் போய் விடும்.

நாங்கள் என்னதான் விவாதித்தாலும் நாட்டை நாம் நினைக்கிற மாதிரி இலகுவில் மீட்டு விட முடியாது. இனவாதத்திலும் மதவாதத்திலும் ஊறிக்கிடப்பது மட்டுமல்ல, பிராந்திய அடிமைகளாகவும் சர்வதேச விசுவாசிகளாகவும் நமது அரசியல் தலைவர்கள் எல்லாம் இருக்கும்போது எப்படி இலகுவாக நாட்டை மீட்டெடுப்பது?

இப்படியானதொரு வரலாற்றுச் சூழலில், இப்படியான யதார்த்தத் தொடர்  நிலையில் இருந்தாற் போலத்திடீரென “நாட்டிலே மந்த நிலை…!?” என்றால்…

ஆனாலும் நண்பர்களின் துக்கமும் ஏமாற்றமும் என்னவென்று புரிகிறது. அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற விதத்தில் அரசியலில் எந்தப் பெரிய முன்னேற்றமும் ஏற்படவில்லை. குறைந்தது அரசியலமைப்புத் திருத்தமே நம்பிக்கையளிக்கும் விதத்தில் நிகழவில்லை. அதற்கான நம்பிக்கைச் சாத்தியங்களையும் காணவில்லை. யுத்தம் முடிந்து பத்து ஆண்டுகளாகின்றன. இனமுரண்பாட்டுக்கான தீர்வை எட்டும் நோக்கமோ அதிகாரப் பகிர்வுக்கான எண்ணங்களோ அதிகாரத் தரப்பினரிடம் துளியளவும் இருப்பதாகத் தெரியவில்லை. இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் என்பது நடக்கவேயில்லை. இதைப்பற்றி மிகச் சிறிய அளவிலான முயற்சிகளும் உரையாடல்களுமே நடந்திருக்கின்றன. அதிலும் பெரும்பாலானவை சம்பிரதாயமானவை. ஆழமாக, நம்பிக்கையானவையாக, உறுதியானவையாக நடக்கவில்லை. நல்லெண்ணச் செயற்பாடுகள் எந்த முன்னேற்றத்தையும் எட்டவில்லை. பதிலாக அதே முரண்பாட்டு அரசியலே முன்னெடுக்கப்படுகிறது. அரசாங்கத்தை இன்னும் சந்தேகத்துடன்தான் சிறுபான்மைச் சமூகத்தினர் பார்க்கும் நிலை உள்ளது. கூடவே நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு படிகூட வளர்ச்சி ஏற்படவில்லை. ஆகக்குறைந்தது நாட்டுக்குத் தேவையான அரசியல் அறம், அரசியல் பண்பாடு எதுவும் கூட இருப்பதாகத் தெரியவில்லை. இப்படி எல்லாமே எதிர்மறையாக இருக்கும்போது உண்மையாகவே நாட்டைக்குறித்தும் சமூக வாழ்க்கையைக் குறித்தும் சிந்திப்போருக்கு உளச்சோர்வும் நம்பிக்கையீனமும் ஏற்படவே செய்யும். இதுதான் நம்முடைய நண்பர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. நம் நண்பர்களுக்கு மட்டுமல்ல, நாட்டிலுள்ள பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

ஆனாலும் அவர்களுக்கு மாற்று வழிகள் தெரியவில்லை. இப்போதுள்ள அரசியல் கட்சிகள், அரசியல்தலைவர்கள், அரசியல்வாதிகளை விட வேறு யாரும் புதிதாக – நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இருப்பதாகவும் தெரியவில்லை. அப்படி புதிதாக யாராவது வந்தாலும் அவர்களும் நம்பிக்கைக்குரிய அடையாளங்களைக் கொண்டிருப்பவர்களாக இல்லை.

குறிப்பாக தமிழ்த்தரப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மீதான நம்பிக்கையீனத்துக்குப் பதிலாக இன்னொரு சக்தியை மக்களால் அடையாளம் காண முடியவில்லை என்பது பலருடைய அபிப்பிராயம். ஆனந்தசங்கரியோ, விக்கினேஸ்வரனோ, சுகு சிறிதரனோ, டக்ளஸ் தேவானந்தாவோ, சந்திரகுமாரோ, கஜேந்திரகுமாரோ, சுரேஸ் பிரேமச்சந்திரனோ கூட நம்பிக்கைக்குரிய அரசியல் தளத்தைப் பரந்துபட்ட அடிப்படையில் கட்டமைக்கவில்லை. இவர்கள் எவரிடத்திலும் பொருத்தமான அரசியலை முன்னெடுக்கக்கூடிய அளவுக்கு திறனும் அறிவும் உள்ள அணிகள், நபர்கள் இல்லை. இருப்பவர்களும் முழுமையான அர்ப்பணிப்புக்குத் தயாரில்லை. அவர்களின் வாழ்க்கைச் சூழல் பாதகமானது. ஆனால், திறனும் அறிவாற்றலும் அப்பணிப்புணர்வும் இருந்தால்தான் எந்தக் கட்சியும் ஒரு கட்டமைப்பாக வலுவுடன் தொழிற்படும். இதுதான் முஸ்லிம்களின் தரப்பிலும் உள்ளது. மலையகத்தின் நிலையும் இதுதான்.

அதிகம் ஏன், தனித்தனியாக தமிழ், முஸ்லிம், மலையகச் சமூகத்தினர் இனரீதியாகச் சிறுபான்மையினர் என்று நோக்கப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள்.

இருந்தும் இவர்கள் தமக்கிடையில் ஒரு பொது வேலைத்திட்டத்தை வகுத்து, அதில் ஒன்றிணைந்து செயற்படுவதாக இல்லை. இந்தக் குறைபாடுகள், இந்தப் பலவீனங்கள் எல்லாம் ஆளும் தரப்புக்கு வாய்ப்பாக இருக்கிறது. அவர்கள் ஒவ்வொரு தரப்பையும் தனித்தனியாக – பிரித்துக் கையாள்கின்றனர்.

இது சிறுபான்மைச் சமூகத்தினரின் பாதுகாப்புக்கும் எதிர்காலத்துக்கும் பகிரங்கமாகவே அச்சுறுத்தல் – வளர்ச்சியற்ற நிலை என்று தெரிந்தும் கூட தமிழ், முஸ்லிம், மலையகத் தலைமைகள் இதையிட்டு கவலைப்படுவதாகவும் இல்லை. கரிசனை கொள்வதாகவும் இல்லை.

சில நாட்களுக்கு முன்பு நாட்டிலே பெரியதொரு அரசியல் கொந்தளிப்பு நடந்தது. அப்பொழுது கூட இந்தத் தலைமைகள் தங்களுக்கிடையில் ஒருங்கிணைந்து செயற்படவில்லை. அதை ஒரு வாய்ப்பாகக் கருதி, தாம் சார்ந்த சமூகங்களுக்கான பேரங்களைப் பேசவோ, காரியங்களைச் சாதிக்கவே முயற்சிக்கவில்லை.

பதிலாக இது அப்படியான – சிறுபான்மைச் சமூகங்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் பேசும் – சந்தர்ப்பமில்லை என்றே இவை சொல்லி வந்தன. இது அரசியலின் அடிச்சுவடே தெரியாதவர்களின் கூற்றன்றி வேறென்ன? அல்லது இலங்கை அரசியல் வரலாற்றைப் புரியாத – புரிந்து கொள்ள முடியாதவர்களின் அரசியலாகும். அல்லது செயற்திறனற்றோரின் சிந்தனையாகும்.

இப்படியான நிலையில்தான் பொதுவாக எல்லோருக்கும் அரசியல் சோர்வு ஏற்படுவதுண்டு. அது சமூகச் சோர்வாக மாறுகிறது. இதுதான் இலங்கையின் அவலம். இதுதான் இலங்கையின் தீமை. இதுதான் இலங்கையின் வீழ்ச்சி.

ஒரு நாடென்பது அங்கே வாழ்கின்ற மக்கள் சுதந்திரமாகவும் இயல்பாகவும் அவரவர் தளங்களில் செயற்படுவதற்கான ஊக்கத்தை அளிப்பதாக இருக்க வேணும். அப்பொழுதுதான் அந்த நாட்டில் வளர்ச்சி ஏற்படும். முன்னேற்றம் நிகழும். அதற்கான களச் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது அரசினதும் அரசியல் தலைமைகளினதும் பொறுப்பும் கடமையுமாகும்.

இதைச் செய்யும் தலைமைகளும் கட்சிகளுமே வரலாற்றுப் பாத்திரத்தை வகிக்கின்றன. இவையே வரலாற்றை உருவாக்குகின்றன. ஏனையவை வரலாற்றுக்கான அம்சங்களைத் தாங்கள் உண்டு வாழ்கின்றன.

இலங்கை சுதந்திரமடைந்த பிறகு இந்த நாட்டிலே வளர்ச்சிக்குப் பதிலாக வீழ்ச்சியே ஏற்பட்டிருக்கிறது என்பதை யாருமே மறுதலிக்க முடியாது. அரசியல் பண்பாட்டில் வீழ்ச்சி. பொருளாதாரத்தில் வீழ்ச்சி. (தேசிய உற்பத்திப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது) இன ஐக்கியத்தில் அல்லது இனவுறவில் வீழ்ச்சி. பன்மைத்துவத்தில் வீழ்ச்சி. ஜனநாயகச் செயற்பாடுகளில் வீழ்ச்சி. சமூக உறவுகளில் வீழ்ச்சி. பிராந்திய வளர்ச்சியில் வீழ்ச்சி. சர்வதேசத் தராத்தில் வீழ்ச்சி.

இதில் எல்லாம் வீழ்ச்சியில்லை என்றால், கடந்த எழுபது ஆண்டுகளில் (1949 – 2018) ஐந்து லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் யுத்தத்திலும் போராட்டத்திலும் கொல்லப்பட்டிருக்க வேண்டியிருந்திருக்காதே!

முப்பது ஆண்டுகள் உள்நாட்டுப் போர் ஏற்பட்டிருக்காதே.

போர் முடிந்து பத்து ஆண்டுகள்  கடந்த பிறகும் அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கான சாத்தியங்கள் இல்லாதிருக்க முடியாதே.

சர்வதேச நாடுகளின் தயவிலும் கட்டளைகளிலும் கட்டுப்பட்டிருக்க வேண்டியிருக்காதே.

உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற நிதிநிறுவனங்களின் கடன் நிபந்தனைகளில் சிக்குண்டிருக்க வேண்டியிருந்திருக்காதே.

இனம், மதம், சாதி, பிரதேச வாதம் என்ற பிரிவினைகளிலும் முரண்பாடுகளிலும் அழிந்து கொண்டிருக்க வேண்டியிருக்காதே.

இயற்கை வளச் சிதைவுகளை இவ்வளவுக்குச் செய்திருக்க வேண்டியதில்லையே!

அரசாங்கத்திலும் ஆட்சியிலும் எங்களுக்கான இடம் என்ன? பங்கு என்ன? என்ற கேள்விகளோடு சிறுபான்மைச் சமூகத்தினர் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காதே.

நாட்டை விட்டு மூளைசாலிகளும் உழைக்கும் தரப்பினரும் இளைய தலைமுறையினரும் லட்சக்கணக்கில் வெளியேற வேண்டியிருக்காதே.

போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் போன்ற குற்றச்சாட்டுகளில் உலக அரங்கின் முன்னே தலைகுனிய வேண்டியோ அச்சமடைந்திருக்கவோ வேண்டியதில்லையே.

இப்படி ஏராளமான கரும்புள்ளிகளின் வரலாற்றுக்குறிப்புகளோடுதான் இலங்கைத்தீவின் எழுபது ஆண்டுகாலச் சரித்திரம் இருக்கிறது என்றால்….

நம் நண்பர்களுக்கு மட்டுமல்ல நமக்கும்தான் உளச்சோர்வு ஏற்படும்.

இதையெல்லாம் துடைத்தழித்து விட்டு, இதோ ஒரு புது யுகத்தை ஆக்கித் தருகிறோம் என்று  நிமிர்ந்து நிற்பதற்கு எந்த ஒரு இடத்திலும் ஆமான ஒரு தலைவர் இது வரையில் இல்லை.

இதுவே உண்மை.

பல பத்துக் கட்சிகள் உண்டு. பல நூறு அரசியல்வாதிகள் உள்ளனர். ஆனால், வரலாற்றை முன்னகர்த்தக் கூடிய தலைகள் என்றால்….

அது கேள்வியே.

அந்தக் கேள்வியின் நிழலில்தான் நாங்களெல்லாம்.

Share:

Author: theneeweb