சவுதியில் இருந்து தப்பி வந்த பெண்ணுக்கு அடைக்கலம் அளிக்க ஆஸ்திரேலியா ஆலோசனை

மெல்போர்ன் : சவுதியிலிருந்து தப்பி வந்த இளம் பெண் ரஹாப் மொகமது அல் குனான்க்கு அடைகலம் அளிப்பது குறித்து ஆஸ்திரேலியா ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை அமைச்சர் கிரேக் ஹண்ட் கூறும்போது, அவர் ஆஸ்திரேலியாவுக்கு அடைகலம் வர வேண்டும் என்று உறுதியாக நினைத்தால், இதுகுறித்து நாங்கள் அவசரமாக ஆலோசிப்போம். அவருக்கு வழங்கப்பட உள்ள விசா குறித்து ஆலோசிப்போம். இதுகுறித்து குடியுரிமை அமைச்சர் டேவிட்டிடமும் பேசி இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

ரஹாப் மொகமது அல் குனான் குவைத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது தனது குடும்பத்தினரிடம் இருந்து தப்பி வந்துள்ளார். தனது குடும்பத்தினர் தன்னை உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாகக் கூறிய ரஹாப், அவர்களிடம் இருந்து தப்பி ஆஸ்திரேலியா செல்ல முடிவெடுத்து இதற்காக தாய்லாந்தில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையம் வந்தவரை சவுதி மற்றும் குவைத் அதிகாரிகள் சுற்றி வளைத்ததாகவும் அவரின் பயண ஆவணங்களைப் பிடுங்கிக் கொண்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் தந்தை அப்பெண்ணை திரும்ப அனுப்பி வைக்கும்படி கூறியிருந்த நிலையில் இந்த விவகாரத்தில் புகலிடம் கேட்கும் ஒருவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் போது, அவரை சொந்த நாட்டுக்கு அனுப்பக் கூடாது என்று ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகமை அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb