வங்கதேசத்தில் தீவிரமடைகிறது ஆயத்த ஆடை தொழிலாளர் போராட்டம்: ஒருவர் பலி

வங்கதேசத்தில் ஊதிய உயர்வு கேட்டு ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் நான்கு நாள்களாக நடத்தி வரும் போராட்டம், புதன்கிழமை மேலும் தீவிரமடைந்தது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டம் 4-ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்றது.

தலைநகர் டாக்காவையொட்டி சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த சுமார் 10,000 பேர், போலீஸாரால் தண்ணீரைப் பீய்ச்சியடித்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

டாக்காவின் புறநகர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 5,000 பேரைக் கலைப்பதற்காக போலீஸார் ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார்; 50 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமார் 4,500 ஆயத்த ஆடை ஆலைகளைக் கொண்டுள்ள வங்கதேசம், ஆண்டுக்கு
3,000 கோடி டாலர் (சுமார் ரூ.2.11 லட்சம் கோடி) மதிப்பிலான ஆடைகளை ஏற்றுமதி செய்து வருகிறது.

சுமார் 40 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றும் அந்தத் துறை வங்கதேசப் பொருளாதாரத்துக்கு முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.
இந்தச் சூழலில், தொழிலாளர்களின் அடிப்படை ஊதியத்தை வங்கதேச அரசு கடந்த டிசம்பர் மாதம் 8,000 டாக்காவாக (சுமார் ரூ. 6,700)-ஆக உயர்த்தியது.
எனினும், விலைவாசி உயர்வை சமாளிக்கும் வகையில் இந்த ஊதிய உயர்வு இல்லை எனக் கூறி, ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share:

Author: theneeweb