நமக்கு உண்மையில் பில்லியனர்கள் தேவையா?

அமேசான் பாஸ். ஜெஃப் பெஸாஸ்

கடந்த மார்ச் 2018-ல் ஃபோர்ப்ஸ் 72 நாடுகள் மற்றும் பிற பகுதிகளிலிருந்து 2208 மகா கோடீஸ்வரர்களை அடையாளப் படுத்தியது.  இவர்கள் அனைவரின் சொத்துக்களின் மொத்த மதிப்பு 9.1 ட்ரில்லியன் டாலர்களாகும். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 18% சொத்து மதிப்பில் அதிகரிப்பாகும்.

இதில் அமெரிக்கா மொத்தம் 585 மகா கோடீஸ்வரர்களுடன் முதலிடம் வகிக்கிறது.  2வது இடத்தில் ‘கம்யூனிச’ நாடான சீனா சாதனையான 373 மகா கோடீஸ்வர்களைக் கொண்டுள்ளது.

2018 நவம்பர் யாஹூ நிதி அறிக்கையின் படி 2017-ம் ஆண்டில் அமெரிக்க மெகா-மகா கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 12% அதிகரித்துள்ளது. மாறாக கம்யூனிச சீனாவின் பணக்காரச் செல்வந்த கோடீஸ்வர்களின் சொத்து மதிப்பு 39% அதிகரித்துள்ளது. 19ம் நூற்றாண்டின் இறுதியில் வர்த்தகத்தில் ஏகபோக உரிமையுடன், போட்டியாளர்களை நசுக்கி, சந்தைகளைக் கைப்பற்றி அரசாங்கத்தையும், அரசியல்வாதிகளையும் ஊழல்மயமாக்கி தங்களது பேராசை மற்றும் அதிகார பேரவாவில் பரிதாபமான ஜனநாயகத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொள்பவர்களுக்கு ஒப்பாக இப்போது இந்த புதிய மகா கோடீஸ்வரர்கள் உலகை ஆட்டிப்படைத்து வருகின்றனர்.

வால்மார்ட் குடும்பமான வால்டன் குடும்பத்தின் 163 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு பெரிய அளவில் வளர்ந்ததற்குக் காரணம் அதன் மகாவர்த்தகமான வால்மார்ட்தான்,  அமெரிக்காவின் மிகப்பெரிய தனியார் எம்ப்ளாயர் வால்மார்ட்தான், ஆனால் ஊழியர்களுக்கு வறுமை-மட்ட ஊதியம்தான் வழங்குகிறது.  அமேசான் பாஸ் ஜெஃப் பெஸாஸின் சொத்து மதி்ப்பு, ஒரே ஆண்டில் 78.5 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 160 பில்லியன் டாலர்களாக்கி உலகின் மிகப்பெரிய செல்வந்தராக உயர்ந்துள்ளார். ஆனால் அமேசான் ஊழியர்களுக்கு பரிதாபகரமான சம்பளமே வழங்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு கடும் போராட்டம், பொதுமக்கள் அழுத்தம் காரணமாக சம்பளம் உயர்த்தப்பட்டது. 2017 மத்தியில் வாரன் பஃபே (75பில். டாலர்), உலகின் 2வது பெரிய பணக்காரர், கூறும்போது, “அமெரிக்கப் பொருளாதாரத்தின் மிகப்பெரிய பிரச்சினை என்னவெனில் டாப்பில் இருப்பவர்களுக்கு சரிசம விகிதமில்லாத வகையில் சலுகைகளை வழங்குகிறது” என்றார்.

உலகின் வேறு பகுதிகளிலும் இதுதான் நிலைமை, வெறும் அமெரிக்கப் பணக்காரர்களுக்கு மட்டுமல்ல. 1980-களிலிருந்தே தொழிலாளர்களுக்கு, ஊழியர்களுக்குச் ச்செல்லும் சம்பளம், கூலி உள்ளிட்ட தொகையில் குறிப்பிடத்தகுந்த சரிவு ஏற்பட்டுள்ளது, இதுதான் சமத்துவமின்மையின் இடைவெளியை மேலும் மேலும் விரிவு படுத்துகிறது.  ஆக்ஸ்பாம் இண்டெர்னேஷனல் என்ற வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவர் வின்னி பியான்யிமா என்பவர்  “பில்லியனர்களின் அதிகரிப்பு, பில்லியனர்களின் சொத்து அதிகரிப்பு என்பது தோல்வியடையும் பொருளாதார அமைப்பின் நோய் அறிகுறி, நம் ஆடைகளைத் தயாரிப்பவர்கள், நம் தொலைபேசிகளை முறையாக அசெம்பிள் செய்பவர்கள், நம் உணவைப் பயிரிடுபவர்கள் கடுமையாகச் சுரண்டப்பட்டு வருகிறார்கள் என்பதே பயங்கர உண்மை” என்றார்.

இதே ஆக்ஸ்பாம் 2018-ல் வெளியிட்ட அறிக்கையின் படி இதற்கு முந்தைய ஆண்டில் 3.7 பில்லியன் மக்களின் சொத்துக்கள் அதிகரிக்கவே இல்லை. அதாவது உலக மக்கள் தொகையின் பாதியின் சொத்தில் எந்த வித மாற்றமும் இல்லை. ஆனால் 2017-ல் பெருக்கப்பட்ட மொத்த சொத்துக்களில்  82% சொத்துக்கள்  1% மட்டுமேயுள்ள இந்த மெகா-மகா கோடீஸ்வரர்களுக்குச் சென்றுள்ளதே நடந்தது. அமெரிக்காவில் பொருளாதார சமத்துவமின்மை கடுமையாகச் சென்று கொண்டிருக்கிறது. தேசிய வருவாயில் ஏழைமக்களுக்குச் செல்லும் பணம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.  கம்யூனிஸ சீனாவில் நிலைமை இன்னும் மோசம் என்றே பொருளாதார ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. கடந்த 20 ஆண்டுகளில் மிகப்பிரமாதமான பொருளாதார வளர்ச்சிக் கண்ட நாடு சீனா, ஆனால் அங்கு பொருளாதார சமத்துவமின்மையின் இடைவெளி மிக மோசம், இந்தப் பூமியில் பொருளாதாரச் சமத்துவமின்மை அதிகமுள்ள நாடு சீனாவாக இருக்கிறது. ஆக்ஸ்பாம் தன் உலக ஆய்வறிக்கையில், உலக மக்கள் தொகையில் பாதிபேரின் சொத்து மதிப்பு 42 பில்லியனர்களிடத்தில் மட்டுமே உள்ளது.

நமக்கு ஏற்படும் கேள்வி:

இவ்வளவு சொத்து சேர்த்தும் அவர்கள் ஆசை ஏன் அடங்குவதில்லை? ஏன் மேன்மேலும் சேர்த்துக் கொண்டே செல்கிறார்கள் என்பது புரிந்து கொள்ளக் கடினமானது.  அதிகம் சாப்பிடுவார்கள், அதிகம் குடிக்கிறார்கள், மிகப்பெரிய பங்களாக்கள், மேன்ஷன்கள், படகுகள், கப்பல்கள், வைரங்கள், தங்கங்கள், ஜெட் விமானங்கள் எல்லாம் இருக்கின்றன இதற்கு மேலும் அவர்களின் ஆசை என்ன இருக்க முடியும்?

ஆசைகள், பேராசைகள் எப்படி? இதோ விடை:

அதிகம், மேலதிகம், மிகுதி இதுதான் இவர்களது ஆசை. அதனால்தான் 4 மில்லியன் டாலர்கள் லம்போர்கினி வெனினோக்களை அவர்கள் வாங்குகின்றனர்.  தங்கள் குதிரைகளுக்காக மிகப்பெரிய மேன்ஷன்களை வாங்குகிறார்கள்.  தங்க டூத் பிரஷ்கள்,  ஒரு இரவுக்கு 15,000 டாலர்கள் ஸ்யூட்டில் தங்குகிறார்கள்.  தங்கள் நாய்களுக்கு அடம்பர ஷவர்கள், தங்கள் மாடிப்படிகளை தங்கத்தில் அலங்கரிக்கிறார்கள். ஆடம்பர தற்காப்பு பங்கர்கள் வைத்திருக்கின்றனர். அதிபர் டோனால்ட் ட்ரம்ப், ட்ரம்ப் டவரில் 57 மில்லியன் டாலர்கள் பெறுமான அபார்ட்மெண்ட் வைத்துள்ளார். இதன் தரை தங்கத்திலானது. இதைத் தவிர 2 விமானங்கள், 3 ஹெலிகாப்டர்கள், 5 தனிப்பட்ட பெரிய வீடுகள், அமெரிக்கா, ஸ்காட்லாந்து, அயர்லாந்து, யு.ஏ.இ. ஆகிய நாடுகளில் சுமார் 17 கால்ஃப் மைதானங்கள் ஆகியவை உள்ளன.

இது தவிர தங்களுக்குச் சாதகமான அரசுகள் அமைய ஏகப்பட்ட பணத்தைச் செலவு செய்கின்றனர். அமெரிக்க செனட்டர் பெர்னி சாண்டர்ஸ், “அவர்கள் தங்கள் செல்வத்தை தங்கள் அதிகாரத்தை நிரந்தரமாக்க செலவு செய்கின்றனர். ஆகவேதான் தேர்தல் களத்தில் பில்லியன் கணக்கான டாலர்களை இவர்கள் கொண்டு வந்து கொட்டுகின்றனர்” என்கிறார். அமெரிக்காவின் மிகப்பெரிய பன்னாட்டு பிசினஸ் மேக்னட் ஷெல்தன் ஏடல்சன் தேர்தல்களில் 113 மில்லியன் டாலர்கள் கொட்டியுள்ளார். தேர்தலில் பெரிய அளவில் பணமுதலைகள் பணம் போடுவது அமெரிக்க அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 3 பில்லியனர் குடும்பங்கள் குடியரசுக் கட்சியின் பிரதான நிதியாதாரமாகும். இவர்கள்தான் ட்ரம்பின் தீவிர வலதுசாரி கொள்கைகளை வளர்த்து விட்டனர். ஆனால் அமெரிக்க வாக்குகள் காட்டியது என்னவெனில் பணக்காரர்களுக்கு அதிக வரி, கார்ப்பரேட்களை ஒழுங்குமுறைப்படுத்துவது, தொழிலாளர் சங்கங்களை வலுப்படுத்துவது, பருவ நிலை மாற்றத்துக்கு எதிராக போராடுவது ஆகிய கொள்கைகளை ஆதரிப்பதாக இருந்தது, ஆனால் ஆட்சியைப் பிடித்த குடியரசுக் கட்சி மெகா-கோடீஸ்வர்கள் பக்கம்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

எவ்வளவோ  செய்ய வேண்டிய நிலையில் அமெரிக்கா, சீனா, ரஷ்யாவில் 3 மகா பில்லியனர்கள் அதிகாரத்தைப் பிடித்துள்ளனர். அமெரிக்க அதிபர் பதவியைப் பிடிக்கும் முதல் பில்லியனர் டோனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவின் விளாதிமிர் புதினுக்கு 70 பில்லியன் டாலர்கள் சொத்து உள்ளது, சீனா அதிபர் ஜின்பிங் 1.51 பில்லியன் டாலர்கள் சொத்து வைத்துள்ளார்.  இந்த மூவரும் சில கொள்கைகளை தங்களிடையே சுமுக சமிக்ஞை மேற்கொண்டுள்ளனர், இதில் சொத்து சேர்ப்பது பிரதானம், மனித உரிமைகளை குழிதோண்டிப் புதைப்பது கொள்கையாகும்.

ஆனால் சில பில்லியனர்கள் தங்கள் சொத்துக்களை மக்கள் சேவைக்குப் பயன்படுத்த உறுதி பூண்டுள்ளனர். ஆனால் செல்வந்தர்களின் ஆட்சியில் என்ன நடக்கும், பெரும் பணக்காரர்களின் முன்னுரிமைகளே கவனம் பெறும், உதாரணமாக தனியார் பள்ளிகளுக்கு நிதியுதவி செய்வது, பொதுமக்களின் நலன்கள் அல்ல. அதாவது பப்ளிக் ஸ்கூல்களுக்கு நிதியுதவி செய்வதல்ல.  மேலும் இவர்கள் சொத்து சேர்க்கும் வேகத்துக்கு தான தர்மங்கள் செய்வதில்லை.  2010-ல் பில்கேட்ஸ் சொத்து மதிப்பு 54 பில்லியன் டாலர்கள், இந்த ஆண்டில்தான் மக்கள் சேவை பற்றி உறுதியெடுத்தனர், ஆனால் இன்று அவரது சொத்து 90 பில்லியன் டாலர்கள்.

ஆகவே சிலர் கைகளில் மட்டும் சொத்துக்கள் குவிகிறது, இதனால் உலகம் முழுதும் பெரும்பான்மை மக்கள் பிரிவினருக்கு சொல்லொணா அவதிதான்.

கட்டுரை ஆசிரியர் டாக்டர் லாரன்ஸ் விட்னர் ( அமெரிக்க பல்கலை. வரலாற்றுத் துறை பேராசிரியர்)

மூலம்: கவுன்ட்டர்பஞ்ச் (அமெரிக்க இணையதளம் மற்றும் விமர்சன ஊடகம்) : Do we  Really  Need Billionaires

தமிழில்: இரா.முத்துக்குமார்.

 

Share:

Author: theneeweb