கசிப்புக்கிடங்கு

—-கருணாகரன் —-

அருவியாற்றங்கரையில் அன்றிரவு தங்கவேண்டியிருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை. அன்று முழுவதும் ஏற்பட்ட அலைச்சலில் அதற்கு மேல் எங்கும் போவதற்கும் யாருக்கும் மனமில்லை. வேறிடம் பார்க்கலாமா என்று மனம் தூண்டினாலும் உடலும் கால்களும் அதை ஏற்க மறுத்தன. அவ்வளவு களைப்பு.

அது பேயாக மழை பெய்த நாள். மழையில் நனைந்து கொண்டு, பாரத்தோடு காட்டு வழியே நடப்பது என்பது சாதாரணமானதல்ல. அதுவும் பசியோடு. உடலையும் மனதையும் சூடாக்கிக் கொள்வதற்கு ஒரு தேநீர் கூடக் கிடையாத வழியில் பயணம் செய்வதென்பதும் பாலைவனத்தில் தாகத்தோடு நடப்பதும் ஒன்றே.

மதவாச்சிக்குப் பின்புறத்தில் தந்திரிமலைக்குள்ளால் ஊடுருவி, நீண்ட நடைநடந்து பாவற்குளம் வந்து சேர்ந்திருந்தோம்.

அதுதான் பாதுகாப்பான வழி என்றார்கள். இல்லை அது ஆபத்தான வழி என்று உள் மனம் எச்சரித்துக் கொண்டேயிருந்தது. இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் பாதுகாப்பென்பது நகைப்பிற்குரிய ஒன்று. இதை நினைத்தால் சிரிப்புத்தான் வரும். எனக்கும் ஒரு கணம் சிரிப்பு வந்தது. ஆனால் சிரிக்க முடியாத அளவுக்குக் களைப்பும் சுமையும்.

யுத்தத்தின் இயல்பே பாதுகாப்பின்மையை ஏற்படுத்துவதுதான். ஆகவே யுத்தின்போது எதிராளிகளுக்குத் தெரியாமல் செய்யும் காரியமெல்லாமே பாதுகாப்பில்லாதவையே. அது எவ்வளவுதான் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் செயற்பட்டாலும் கூட.

நாங்கள் நடந்து வந்து கொண்டிருந்தபோது அருவியாற்றின் மேற்புறக் காட்டில் கள்ளமரம் வெட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் எங்களைக் காணவில்லை. அவர்கள் என்ன யாருமே எங்களைக் காணக்கூடாது. எதிராளிகளுக்கு மட்டுமல்ல, இந்த மாதிரிச் சட்ட விரோதமாகக் கள்ள மரத்தை வெட்டுகின்றவர்களுக்கே பயந்து நடக்க வேண்டிய நிலையில் நாங்கள் இருந்தோம். இதை எண்ணியபோது எனக்குச் சிரிப்பு வந்தது. அவர்களே பயந்து பயந்துதான் இந்தக் காரியத்தைச் செய்கிறார்கள். அவர்களுக்கே பயந்து நடக்க வேண்டிய நிலையில் நாங்கள் என்றால்… இந்த விதியை எண்ணச் சிரிப்பு வரத்தானே செய்யும்.

அவர்கள் எங்களைக் கண்டால் தங்களைப் பற்றியே யோசிக்காமல் படையினரிடம் போட்டுக் கொடுத்து விடுவார்கள். அப்படிப் போட்டுக் கொடுத்தால் எங்கள் பயணமும் நோக்கமும் உடைந்த மண்பானைக்குச் சமம்.

எங்களின் பகுதியி்ல் (வன்னியில்) என்றால் இந்த நேரம் அவ்வளவு மரம் வெட்டிகளும் காட்டில் ஆறுமாதத்துக்கும் கூடுதலாக வேலை செய்ய வேண்டியிருக்கும். எப்படியோ மடக்கிப் பிடிக்கப்பட்டு விடுவார்கள். அங்கே காட்டுக்குள் அத்துமீறி யாரும் நுழைய முடியாது. அப்படி நுழையும் காலமொன்று 1992 க்கு முன்பிருந்தது. பிறகு காடு புலிகளின் பொறுப்பில் என்று வந்த பிறகு யாரும் தேவையில்லாமல் அதற்குள் நுழைய முடியாது. என்ன தேவையாக இருந்தாலும் எவரும் கண்டபடி மரங்களை வெட்ட இயலாது. அது புலிகளாக இருந்தாலும்தான். அப்படி வெட்டுவதாக இருந்தால் புலிகளின் வனவளப் பிரிவில் அனுமதி பெற வேண்டும். அவர்கள் காட்டும் இடத்தில் வெட்டலாம். அதுவும் நின்று, பிறகு தேவையான மரங்களை அவர்களே “மரமடுவத்தில்” வைத்துத் தரத் தொடங்கினார்கள். அதற்கான ஆட்களை ஏற்பாடு செய்து வைத்திருந்தனர்.

மரம் வெட்டிகளின் கண்களில் தென்படாமல் ஒருவாறு தப்பி வந்தால், அட அடுத்த இடத்தில் கசிப்புக் காய்ச்சுவோர். காடே இந்த மாதிரிக் களவுகளுக்கும் சட்ட விரோதச் செயல்களுக்குமாக இருப்பதைப்போலப்பட்டது. இனி வேட்டைக்கார்கள் சந்திக்கக் கூடும். கசிப்புக்காய்ச்சுவோர் வலு ஹாயாக இருந்து கொண்டு கசிப்பு வடிப்பில் மும்முரமாக இருந்தார்கள். ஒரு பத்துப் பன்னிரண்டு பேர் இருக்கும். மழை தூறிக்கொண்டிருப்பது அவர்களுக்கு நல்ல வாய்ப்பான சூழலாக இருக்க வேணும். ஆற அமைதியாக இருந்து எந்தப் பதற்றமும் இல்லாமல் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். வழிகாட்டியே இதை முதலில் கண்டார். அவர் எச்சரித்ததால் எல்லோரும் நிலைமையை விளங்கிக் கொண்டு மறைந்து விட்டோம்.

இந்த மாதிரியான சூழலில் அவர்களும் எச்சரிக்கையாக கண்காணிப்பிற்கு ஆட்களை எங்காவது நிறுத்தியிருப்பார்கள். ஆகவே அதிலிருந்து தப்புவது சற்றுக்கடினமானது. அதைக் கண்காணித்துக் கண்டறிந்தபிறகே எங்களின் வழியைத் தேர்வு செய்ய முடியும்.

வழிகாட்டி எங்களைப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி விட்டு, உதவியாட்களோடு காட்டில் கரைந்தார். ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு அவர் வந்து சேர்ந்தபோது பசி எங்களை எரித்துக் கொண்டிருந்தது. சாப்பிடுவதற்கு அங்கிருந்து எப்படியும் இன்னும் ஒரு அரை மணி நேரமாவது செல்ல வேணும். அதற்குள் தலையைப் பாதுகாத்துக் கொள்வது என்பது பெரும்பாடே.

நன்மைகளைச் செய்வதென்பதும் நன்மைகளுக்காகச் செயற்படுவது என்பதும் எப்போதுமே கடினமானது என்பது பொது விதி. நாங்கள் செயற்படுவது எங்களுக்காக அல்ல. ஒரு சமூகத்துக்காக, ஒரு இனத்துக்காக என்ற நம்பிக்கையில், பொது நன்மைக்காக இவ்வளவு உத்தரிப்புகளையும் உத்தரித்துக் கொள்கிறோம் என்ற எண்ணிக் கொண்டு நடந்தேன். மற்றவர்களும் இப்படி எதையாவது எண்ணித் தங்களைச் சமாதானப்படுத்தியிருக்கலாம். அல்லது இந்த விதியை எப்படி இனி நம்மால் மீற முடியும் என்று கருதிக் கொண்டு அதன் பாட்டில் தங்களை ஒப்படைத்து விட்டு நடந்து கொண்டிருக்கலாம்.

எப்படியோ நடந்து பாவற்குளத்தைக் கடந்து செட்டிகுளத்துக்கும் பாவற்குளத்துக்குமிடையில் வந்து விட்டோம். இரவு பத்து மணிக்கு மேலிருக்கும். இதற்கு மேல் நடப்பதற்கு ஒருவருக்கும் விருப்பமில்லை. அதை விட நாங்கள் வந்து சேர்ந்திருந்த இடம் சற்றுப் பாதுகாப்பானது என்ற நம்பிக்கையும் இருந்தது. ஆகவே அங்கேயே இரவு தங்கிக் கொள்ளலாம் என்று எண்ணினோம்.

ஆற்றங்கரையில் தங்குவதென்றால் பாதுகாப்பில்லை. மிருகங்களோ படையினரோ ஆற்று வழியில் வரலாம். ஆனால் அதுதான் சுத்தமானது. ஆற்றுமணல் படுகையில் படுத்தால் களைப்புச் சுத்தமாக நீங்கும். மெத்தையில் படுப்பதைப்போலக் கால்களைப் புதைத்துக் கொண்டு மணலிடம் நம்மை ஒப்படைத்து விட்டுத்  தூங்கலாம். காவலுக்கு ஆளிருக்கும்போது பயமும் குறைவு. இருந்தாலும் அங்கே இருந்து சாப்பிடலாம். சாப்பிட்டு விட்டு விடியும் வரையில் வேறு இடத்தில் தங்கியிருப்பதே நல்லது என்றார் குரு அண்ணை.

குரு அண்ணையைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேணும். அவருடைய சொந்த ஊர் பனிக்கமோட்டை. வன்னியில் பிறந்து வளர்ந்த ஆட்களுக்குக் காட்டைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. பத்துப் பன்னிரண்டு வயதிலேயே காடறிந்து விடுவார்கள். வேட்டைக்கும் தேனுக்கும் என்று போகத்தொடங்கி, பிறகு வீட்டுக்கு, வேலிக்கு, மாட்டுப் பட்டிக்கு, வயலுக்கு என்று காட்டுத் தடிகளை வெட்டப்போய்…. அப்படியே காடு பழகி விடும்.

குரு அண்ணையும் பத்து வயதிலேயே காடுலாவத்தொடங்கினார்.  இயக்கத்துக்கு வந்தபோதும்  அவருக்குக் காட்டில் பயிற்சி முகாமை அமைக்கும் பொறுப்பே கிடைத்தது. ஒன்றிரண்டு சண்டைக்குப் போயிருந்தாலும் அதை விட இந்த வேலை முக்கியம். இதைச் செய்யக்கூடிய ஆள் என்று குரு அண்ணையைத்தான் இயக்கம் அடையாளம் கண்டது.

தனக்குக் கிடைத்த பொறுப்பை அல்லது தான் ஏற்ற பொறுப்பைக் குரு அண்ணை வலு சிறப்பாகச் செய்தார். ஆனால், தொடர்ந்து பயிற்சி முகாமுடன் தன் வாழ்க்கையைக் கழிப்பதற்கு அவர் விரும்பவில்லை. அதற்குப் பொருத்தமான ஆட்களை உருவாக்கி விட்டு அவர் காட்டுப் பயணங்களுக்கான வழிகாட்டியாகினார்.

குரு அண்ணையின் வார்த்தைகளுக்கு மந்திரச் சக்தி உண்டென்று எனக்குத் தெரியும். அவ்வளவும் அனுபவ அறிவிலிருந்து வருகின்றவை. அல்லது அறிவை அனுபவமாக்கியவை.

அருவியாறு மெல்லியதாக ஓடிக் கொண்டிருந்தது. அது இன்னும் வேகமெடுக்கவில்லை. இன்னும் இரண்டு மூன்று மழை அடுத்தடுத்துப் பெய்தால் பெருக்கெடுத்தோடக்கூடும்.

ஆனாலும் ஆற்றங்கரையில் நடப்பது எந்தக் களைப்பிலும் ஒரு சந்தோசத்தைத் தருவது. மரங்களின் கால்களைத் தழுவிக் கொண்டு மெல்ல மெல்லத் தண்ணீர் குதித்தும் நெளிந்தும் ஓடுவதைக் கவனித்தால் அதை விட அழகு வேறு தெரியாது. சிலவேளை நிற்கிற மரங்களை ஓடுகின்ற நீர் கால் கழுவுவதைப்போலப் படும். இந்தக் காட்சியைத்தான் பகலில் பார்த்துக் கொண்டு நடந்தேன்.

இரவி்ல் காட்சியை விட ஒலிதான் அதிகம். ஒலியைக் கூர்ந்து கேட்பதே காட்டை அறியவும் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் உள்ள ஒரே வழி. இதை நாங்களும் செய்கிறோம். கசிப்புக் காய்ச்சுவோரும் செய்கிறார்கள். கள்ளமரம் வெட்டுவோரும் செய்கிறார்கள். ஏன் படையினரும் கூடச்செய்வார்கள். என்ன வேறு பாடென்றால் ஆளாளுக்கு நோக்கங்கள் வேறு படும். அவ்வளவுதான்.

சாப்பிட்டு விட்டு ஆற்று மேட்டில் ஏறி வலது பக்கமாகத் திரும்பி நடந்தோம். அது இன்னொரு பொட்டல் வெளி. இந்த மோட்டையில் தங்கலாம் என்றார் குரு அண்ணை. மோட்டையின் ஓரத்தில் சென்றியைப் போட்டு விட்டுத் தூங்கினோம். அவ்வளவு நேரமும் களைப்பாகவும் தூக்கக் கலக்கமாகவும் இருந்த எனக்கு அப்போது தூக்கம் வரவில்லை. காட்டைக் கூர்ந்து கேட்டபடியே படுத்திருந்தேன். படுக்கவும் அலுப்பாக இருந்தது. எழுந்து இருந்தேன். அப்பொழுதும் அலுப்பாக இருந்தது. சத்தமில்லாமல் மரம் ஒன்றில் ஏறினேன். ஏற ஏற உயரத்திற்கு ஏற வேண்டும் போல ஒரு உந்தல். ஏறிக் கொண்டேயிருந்தேன். ஏறி வெளியைப் பார்த்தேன்.

எங்கும் ஒரு கருமை.

வானம், காடு, வெளி எல்லாமே கருமை. மழை, குளிர், இரவு எல்லாமே கருமை. என் வாழ்வில் அப்படியொரு கருமையை, குளிரான கருமையைக் கண்டதேயில்லை.

அப்படியொரு கருமையைக் கடந்த 21.12.2018 அன்றிரவும் கண்டேன். ஆனால், அது காட்டில் அல்ல. ஊரின் ஒதுக்குப் புறத்தில். வயற்காவலுக்கு காவற் கொட்டிலில் படுத்திருந்தபோது மழை ஆரம்பித்தது. மழை பெய்யத் தொடங்கி விட்டால் அது முதலில் செய்யும்வேலை நம்முடைய நினைவுகளை முளைக்கச் செய்வதே. மண்ணில் உள்ள விதைகளை முளைக்கச் செய்வதைப்போல.

நினைவுகளின் வழி நடந்து வயலில் இருந்து வெளியேறி மழையைப் பார்த்து விடலாம் என்ற ஆர்வத்தோடு ஆற்றங்கரைக்கு வந்திருந்தேன். இது நெத்தலியாற்றங்கரை. ஆறு பெருகிக் கொண்டிருந்தது. ஆறு பெருகினால் அது பேய்க்குச் சமம் என்பார் ஐயா. பேயுடன் பழகுவது கடினம். எச்சரிக்கை வேணும் அதற்கு. அந்த இரவு எதற்காக இந்தப் பேயுடன் நமக்கு வம்பு என்று திரும்பினேன். வழியில் தங்கமுத்து எதிர்ப்பட்டார். வயலில் இருந்து வெளிக்கிட்டு வந்து கொண்டிருந்தார். ஆனால் அவர் வீ்ட்டுக்குப் போகப் பிரியப்படவில்லை. வேறு எங்கே போகப்போகிறாய்? என்று கேட்டேன்.

பேசாமல் வா அல்லது போ என்றார்.

அவர் கூடப் பேசாமல் போனேன்.

நெத்தலியாற்றங்கரைக்கு மேலே, தணிந்த நெருப்பில் வேகிக் கொண்டிருந்தது கசிப்பு. அதைச் சுற்றி ஏழெட்டுப்பேர்.

யாருக்கும் பயமில்லை என்ற மாதிரி சாவகாசமாக இருந்து கசிப்பை வடித்துக் கொண்டிருந்தார்கள். தங்கமுத்துவைப் போன்ற வாடிக்கையாளர்கள் அதைக் குடித்துக் கொண்டிருந்தனர். என்னைக் கண்டதும் இரண்டு பேர் எழுந்து நின்றார்கள்.

முன்னுக்குச் செல்வதா, பின் வாங்குவதா? – எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

நெத்தலியாற்றங்கரையிலுள்ள அந்தக் கசிப்புக் கிடங்கிற்கும் தருமபுரத்திலுள்ள காவலர்களின் இடத்திற்கும் இடையில் அதிக தூரமில்லை.

ஆனாலும் என்னவெல்லாமோ  நடந்து கொண்டிருக்கிறது.

00

Share:

Author: theneeweb