மலேசியப் பாடம்

—பேராசிரியர். அமீர் அலி —-

காலனித்துவ காலத்துக்குப் பின்னான பரந்த வரலாற்றில்; இருந்து மலேசியாவுக்கும் மற்றும் ஸ்ரீலங்காவுக்கும் இடையே உள்ள அதிக எண்ணிக்கையிலான சமாந்தரமான பல விஷயங்களை ஒருவரால் பகுத்துணர்ந்து கொள்ள முடியம். உதாரணமாக, மக்கள்தொகையின் அளவு, வளர்ச்சி மற்றும் அதன் பன்முகத்தன்மை, அரசாங்கத்தின் வகை மற்றும் சுதந்திரத்துக்கான போராட்டம் , இனம் சார்ந்த தேசியவாதத்தை ஊக்கப்படுத்தல், அரசியல் இலாபம் அடைவதற்காக மதத்தை பயன்படுத்தல் போன்று வித்தியாசத்தைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான ஒற்றுமைகள் இரு நாடுகளுக்கும் இடையே உள்ளன. பண்டிதர்கள் இந்த விவரங்களை மறுதலிக்கக் கூடும், ஆனால் அதன் விரிவான படத்தை மறுக்க முடியாது.

எனினும் இரு நாடுகளிலும் உள்ள அரசாங்கங்கள் அரசியல் சுதந்திரத்தை வழிநடத்துவது தொடர்பான விடயத்தில் அவற்றைக் கையாள்வதற்காக பின்பற்றிய ஒரே மாதிரியான அணுகுமுறைகளில் அவதானிக்கக் கூடியதாக குறிப்பிடத்தக்க ஒரு ஒற்றுமை இருந்தது. இரு நாடுகளிலும் இருந்த பெரும்பான்மை சமூகம் ஸ்ரீலங்காவில் பௌத்த சிங்களவர்கள் மற்றும் மலேசியாவின் மலாயர்கள் ஆவர், சமூக பொருளாதார நீதியை பின்பற்றுவது தொடர்பில் விகிதாசாரமற்ற முறையில் அனுகூலமற்ற தன்மை அங்கு காணப்பட்டது,அதேவேளை மலேசியாவில் உள்ள சீனச் சிறுபான்மையினர் ஒப்பீட்டளவில் மலேயர்களைக் காட்டிலும் பொருளாதார முன்னேற்றங்களில் வெகுதூரம் முன்னணியில் இருந்தார்கள், ஸ்ரீலங்காவிலும் இதே மாதிரியான ஒரு ஏற்றத்தாழ்வு கல்வி மற்றும் தொழில் திறமை போன்ற துறைகளில் சிறுபான்மை தமிழர்களுக்கும் மற்றும் பௌத்த சிங்களவர்களுக்கும் இடையே நிலவியது. பிரித்தானிய ஏகாதிபத்தியவதிகள் இருநாடுகளிலும் பிரித்து அரசாளும் தந்திரத்தைப் பின்பற்றினார்கள், பாரபட்சமான வளர்ச்சியை வேண்டுமென்றே ஊக்குவித்தார்கள். இயல்பாகேவே சுதந்திரத்துக்குப் பின்வந்த புதிய ஆட்சியாளர்கள் காலனித்துவ ஏற்றத்தாழ்வுகளை மறுசீரமைக்க தீர்வுகளை மேற்கொண்டார்கள்.

இரு நாடுகளிலும் பெரும்பான்மையினரின் அரசியல் கருவிகளினால் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் வேண்டுமென்றே சிறுபான்மையினரின் இழப்பினை இலக்குவைத்து பெரும்பான்மையினர் ஆதாயம் அடையும் வகையான கொள்கைகளை அறிமுகப்படுத்தி அவற்றை நடைமுறைப்படுத்தின. இரண்டு இனக்கலவரங்கள் ஒன்று ஸ்ரீலங்காவில் 1957ல் தமிழர்களுக்கு எதிராகவும் (அதைப் பின்தொடர்ந்து மற்றவைகளும் இடம்பெற்றன, 1983 படுகொலைகள் இதன் உச்சக்கட்டம்) மற்றும் அடுத்தது சீனர்களுக்கு எதிராக 1969ல் மலேசியாவிலும் இடம்பெற்றன, இரண்டு நாடுகளும் பிரிவினைவாத அரசியல் சமுக பொருளாதார மறு பொறியியல் என்கிற சமாந்தரப் பாதையில் நடைபோட்டன.

1971 ல் பிரதமர் மகாதீர் மொகமட் அவர்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பொருளாதார கொள்கை சமூக பொருளாதார மறுசீரமைப்பின் அடிப்படையில் மலாய்காரர்களுக்கு நன்மை வழங்கியது, இதேபோல ஸ்ரீலங்காவில் பிரதமர் எஸ்டபிள்யுஆர்டி பண்டாரநாயக்காவினால் அறிமுகப் படுத்தப்பட்ட சிங்களம் மட்டும் மசோதா, அதைத்தொடர்ந்து தனியார் கல்லூரிகளை தேசியமயமாக்கல் மற்றும் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்படுத்தல் என்பன சிங்களவர்களுக்கு நிபுணத்துவம் பெற உதவியது. மலேசியாவில் அறிமுகப் படுத்தப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை, செல்வத்தை மீள் வழங்கல் செய்யும் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட அதேவேளை ஸ்ரீலங்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட மொழி மற்றும் பல்கலைக்கழக கொள்கை என்பன அதே இலக்குகளை அணுகும் நோக்கத்தைக் கொண்டிருந்தன, ஆனால் மறைமுகமாக கல்வி வாய்ப்புகளின் வழியாக அது மேற்கொள்ளப்பட்டது. ஸ்ரீலங்காவைப் போலவே 1969ல் மலேசியாவும் அதே நோக்கத்துடன் மலாய் மொழியை உத்தியோகபூர்வ மொழியாக மாற்றியது.

 

இரண்டு நாடுகளிலும் இந்த நடவடிக்கைகளில் உள்ள நன்மை தீமைகளைப் பற்றிய விபரங்கள் விவாதிக்கப்படவில்லை, இதில் உள்ள ஒரு பொதுத் தன்மையைப் பற்றி இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் அது என்னவென்றால் மலேசியத் தீர்வு ஸ்ரீலங்காவுக்கு ஒன்று அல்லது இரண்டு பாடங்களை கற்பிக்கும். பெரும்பான்மையினரின் இன தேசிய வாதத்தின்மீது நிறுவப்பட்ட சமூக மறுசீரமைப்பு பொறிமுறை அதன் சொந்த வரம்புகளைக் கொண்டுள்ளது. மலேசியாவில் ஏற்கனவே திரட்டியிருந்த செல்வத்தை மீள் வழங்கல் செய்தபின்னர், பெரும்பான்மையினரின் அரசியல் கட்டமைப்புக்குள் அதிக செல்வத்தை உருவாக்குவது ஒரு பிரச்சினையாக உருவெடுத்தது. ஒருக்கால் பெரும்பான்மை இனத்தவர்களின் ஆட்சி ஐக்கிய மலாய் தேசிய அமைப்பினூடாக (யுஎம்என்ஓ)

Najib Razak
Najib Razak

உறுதிப்படுத்தப்பட்டதும், அது அரசியல் சமன்பாட்டிலிருந்து சீனர்களை வெளியேற்றிய அதேவேளை மலேசியன் இந்திய காங்கிரசின் வழியாக இந்தியர்களை உள்ளிளுக்கத் தொடங்கியது, இதன் காரணமாக பெரும்பான்மை சமூகத்தினுள்; உட்கட்சிப்பூசல்கள் தோன்றுவது தவிர்க்கமுடியாததாகியது. அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் மலேசிய பூமி புத்திரர்களுக்கு நன்மையளித்ததினால், விரைவிலேயே புதிய பணக்கார வர்க்கம் ஒன்று உருவானது, அவர்கள் புதிதாகத் திரட்டிய செல்வத்தை அரசியல் அதிகாரம் மற்றும் செல்வாக்கு என்பனவற்றுடன் போட்டியிடுவதற்கு பயன்படுத்தலாயினர். கோஷ்டிப் பிளவுகள் மற்றும் பண அரசியல் என்பன ஊழலை அறிமுகப்படுத்தின அது புற்றுநோயைப் போல அரசாங்க நிருவாகம்,பொதுநிறுவனங்கள் நீதித்துறை மற்றும் தனியார் வியாபாரங்களில் கூடப் பரவத் தொடங்கிற்று, பிரதமர் நஜிப் ரசாக்கின் காலத்தின்போது ஊழல் அதன் உச்சக்கட்டத்தை அடைந்தது. அதிகம் ஆட்களை உள்வாங்குவதற்காக கல்வியின் தரம் கூடத் தியாகம் செய்யப்பட்டதால் வேலையற்ற மலாய் மொழி மூலப் பட்டதாரிகளுக்கான கடைசிப் புகலிடமாக அரசாங்க சேவை மாறியது.உயர் மட்ட ஊழல் தளர்வான நிருவாகம் மற்றும் இனவாத தேசியம் என்பனவற்றின் உதவியால், பொருளாதார அழிவு மற்றும் சமூக சமநிலையற்ற ஒரு சாலையில் மலேசியா வேகமாகப் பயணம் செய்ய ஆரம்பித்தது.

 

1950ன் களின்; நடுப்பகுதி முதல் ஸ்ரீலங்காவும் இதே சமாந்தரப் பாதையிலேயே பயணம் செய்யத் தொடங்கியது. ஒருக்கால் தமிழர்கள் கூட்டாட்சி என்கிற பெயரில் தமிழ் மாநிலம் என்கிற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அரசியல் சமன்பாட்டில் இருந்து ஒதுங்கியதும் பெரும்பான்மையினரின் ஆட்சி முஸ்லிம்களின் ஆதரவுடன் சிங்களவர்களுக்கு உறுதியானது. 1960 களில் ஒரு குறுகிய காலம் தமிழரசுக்கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியாக இருந்தததைத் தவிர, தமிழ் தலைமைகள் தொடர்ச்சியாக நாட்டின் ஆட்சி வட்டத்திற்கு வெளியிலேயே இருந்து வருகிறது. மலேசியாவில் மலேசியன் இந்தியன் காங்கிரசின் கீழ் இந்தியர்கள் ஆளும் அரசாங்கங்களுக்கு பின்துணை நல்குவதுபோல ஸ்ரீலங்காவில் முஸ்லிம்களும் நிச்சயமாக இதே பங்கினை வகித்தார்கள். ஐக்கிய மலாய் தேசிய அமைப்பிற்கு ( யுஎம்என்ஓ) சமமாக இல்லாமல்,ஸ்ரீலங்காவில் ஒவ்வொரு பொதுத் தேர்தலின் பின்பும் சிங்களவர்களின் வாக்கு வங்கியுடன் சேர்ந்த முஸ்லிம்களின் ஆதரவு சிங்களப் பெரும்பான்மை அரசாங்கத்துக்கு உத்தரவாதம் வழங்குவதற்குப் தேவையானளவு போதுமானதாக இருந்தது. தமிழர்களின் ஒதுங்கிப்போகும் முட்டாள்தனத்தினால் அவர்கள் அரசாங்கத்தைச் சிங்களவர்களின் கைகளில் ஒப்படைத்தார்கள். மலேசிய சமூக பொருளாதார மறுசீரமைப்பு பொறிமுறையில் உள்ளதுபோல இல்லாமல் ஸ்ரீலங்காவில் சிங்களவர்கள் பல ஆண்டுகளாக அரசியல் அதிகாரத்தையும் மற்றும் செல்வாக்கiனையும் அடைவதற்காக முதலாளித்து வர்க்கத்தின் விரிவாக்கம் ஒன்றினை தம்மிடையே உருவாக்கினார்கள்.

சிங்கள மொழி மூல பட்டதாரிகள் பொதுத்துறைகளில் அளவுக்குமீறி நியமிக்கப்பட்டார்கள் மற்றும் நிருவாகத்தின் தரம் சரிவடைந்தது. மலேசியாவைப் போலவே பெரும்பான்மை அரசியல் ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்திலும் அதன் தாக்கத்தைச் செலுத்தியது. இருக்கும் செல்வத்தை; மீள வழங்கியதின் பின்னர் ஒரு செல்வம் படைத்த முதலாளித்துவத்தின் உயரும் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கான செல்வத்தை தேடும் முயற்சி இனவாத அரசியல் மற்றும் மத தேசியவாதம் என்பனவற்றால் ஊக்குவிக்கப்பட்டது.சிங்களவர்கள் இடையே தோன்றிய கோஷ்டி பூசல்கள் இரண்டு வகையான பிரதான அரசியல் கட்சிகளாக வடிவம் பெற்றன, ஒவ்வொரு கட்சியும் முதலாளித்துவத்தின் பிரிவுகளுக்கு ஆதரவு வழங்கியது. விரைவிலேயெ பணம் அரசியலுக்குள் நுழைந்தது ராஜபக்ஸவின் ஆட்சிக் காலம் ஊழல் அதன் உச்சத்தை நெருங்க உறுதியளித்தது.

 MAHATHIR MOHAMAD
MAHATHIR MOHAMAD

இரண்டு நாடுகளிலும் கீழ்நோக்கிச் சுழலும் பாதைகள் சமாந்தரமான மாற்றத்தைக் கோரின. மலேசியாவின் பரம்பரையை மிக நெருக்கமாக அவதானித்தால், பூமிபுத்திரக் கொள்கைகளின் பிரதான வடிவமைப்பாளராக இருந்தவர் மகதீர் மொகமட் மற்றும்; 2003ல் ஓய்வு பெறுவதற்கு முன்பு மலேசியாவை ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகிவற்றின் கலங்கரை விளக்கமாக மாற்றியமைத்தார். மலேசிய அரசியலின் கோட்டையாக விளங்கும் ஐக்கிய மலாய் தேசிய அமைப்பை உருவாக்கியவர் இவர்தான், அந்தக் கோட்டையின் தூண்களாக விளங்கும் தேசிய முன்னணி என அழைக்கப்படும் ‘பரிசான் நஷனல்’ , மலேசியாவை இடைவிடாது தொடர்ச்சியாக அறுபது ஆண்டுகள் ஆட்சி செய்தது. ஐக்கிய மலாய் தேசிய அமைப்பின் (யுஎம்என்ஓ) ஆதரவு மற்றும் மகாதீர் ஆட்சியின் அரசியல் செல்வாக்கு காரணமாக அவருக்குப் பின்வரும் பிரதமர்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போனால்கூட அவர்களின் தேர்தலில் வெற்றி உறுதியானது என்கிற தவறான நம்பிக்கை இருப்பதாக கணிக்கப்பட்டது. குறிப்பாக நஜிப் ரஸாக்கினது அரசாங்கம் அதன் அனைத்து பிரமாண்டமான நிதி மற்றும் நிருவாக ஊழல்கள் மற்றும் பொது நிதிகளின் கையாடல்கள் போன்றவைகளை இந்த நம்பிக்கையின் காரணமாகவே மேற்கொள்ளப்பட்டன. தேசப்பற்று சற்றும் குறையாத தொண்ணூறு வயதையும் தாண்டிய மகாதீர் மொகமட் பெரும்பான்மையின அரசியலின் சரிவடையும் வரம்புகளை மட்டுமன்றி இன – மத – தேசியவாதத்தில் ஏற்பட்டிருந்த தேசிய ஆபத்தையும் உணர்ந்து கொண்டார். அதன்காரணமாக இந்த கீழ்நோக்கிய சரிவைத் திருத்தவேண்டும் என்று முடிவு செய்த அவர் அதற்காக தனது ஓய்விலிருந்து மீண்டும் எழுச்சிபெற முடிவுசெய்தார்.

1960களில் மலேசியா மலாயர்களுக்கே என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்த அவர். இப்போது மலேசியா மலேசியர்களுக்கே என்று கோஷமிட்டார். தனது கடந்தகால சாதனைகளின் பதிவுகளொடு மகாதீர் மொகமட், ரஸாக் அரசாங்கத்தின் மகத்தான தோல்விகள் மற்றும் ஊழல்களையும் முறையாக வெளிப்படுத்தலானார் மற்றும் குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைத்து அவர்களை நீதியின் முன் நிறுத்துவதாக மலேசியர்களிடம் வாக்குறுதி வழங்கினார். நாட்டைவிட்டு தப்பியோட முயன்ற நஜீப் ரஸாக் விமான நிலையத்தில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டார், இப்போது அவர் பல வகையான ஊழல் குற்றச்சாட்டுகளையும் மற்றும் திருட்டுக் குற்றங்களையும் எதிர்கொண்டுள்ளார். மற்றும் அவருடைய சகபாடிகள் அவர்களது பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். கையாடல் செய்யப்பட்ட பணத்தின் ஒரு பகுதி ஏற்கனவே மீட்கப்பட்டுள்ளது. மீதி இப்போது வரலாறாக மாறியுள்ளது. 1960களில் இருந்த மகாதீர் மொகமட், ஒரு சீனரை நிதி அமைச்சராகவும் மற்றும் ஒரு சீக்கியரை தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சராகவும் நியமிப்பது வெறும் கற்பனையாக மட்டுமே இருந்திருக்கும். ஆனால் இப்போது அவர் அதைச் செய்திருக்கிறார். இதேபோன்ற மாற்றங்கள் அரசாங்கத்தின் உயர் பதவிகளிலும் மேற்கொள்ளப் பட்டுள்ளது,அங்கு இன ரீதியாக இல்லாமல் தகுதியின் படி நியமனம் செய்வது இப்போது வெற்றி பெற்றுள்ளது.

மகாதீருக்குச் சமமான ஒருவரை ஸ்ரீலங்கா கொண்டிருக்கவில்லை ஆகவே அங்கு நாட்டை அனைத்து ஸ்ரீலங்காவாசிகளின் நலன்களுக்காகவும் வழிநடத்தக்கூடிய ஒரு புதிய ஞ}னமுள்ள அரசியல் தலைமை உடனடியாகத் தேவைப்படுகிறது. தகுதிசார் ஆளுமையின் நலன்களுக்காக பெரும்பான்மையினரின் ஜனநாயகம் கைவிடப்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் மற்றும் மக்களின் நம்பிக்கைக்கு துரோகமிழைத்த முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் நிருவாகிகள் பொறுப்புக்கூற வைக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். 2015ல் இதைச் செய்வதாக வாக்குறுதி வழங்கியவர்கள் அதிகார மோகத்தினால் ஈர்க்கப்பட்டு அதை நீடிக்க வைக்கும் கலைக்கு அடிமையாகி விட்டார்கள். அதிகமாக பிரபலமான யகபாலன மற்றொரு வெற்று வாய்வீச்சாக மட்டுமேயுள்ளது. நாட்டுக்கு ஒரு தூய்மையான அரசாங்கம் தேவை மற்றும் நீதி,நியாயம் என்பனவற்றைத் தியாகம் செய்யாமல் செல்வத்தை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு சமூகத்தினரையும் சமமாக நடத்தி, தகுதிப்படி வெகுமதிகளை வழங்கி மற்றும் நடுநிலை தவறாமல் நடக்கும்; ஒரு அரசாங்கத்தினாலேயே இதைச் செய்ய முடியும். அதன் மக்களைத் தவிர இயற்கைவளங்கள் எதுவும் இல்லாத பன்முகத்தன்மையுள்ள நாடான சிங்கப்பூர் அந்தக் கொள்கையின்படி ஆரம்பித்து தேசிய அபிவிருத்தியின் ஒவ்வொரு அம்சத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. ஏராளமான இயற்கை வளங்களைக் கொண்ட மலேசியா, இன – தேசியவாத பாதையை தேர்ந்தெடுத்ததால் அதன் வரம்புகளை உணர்ந்துகொண்டது மற்றும் இப்போது அதை மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளது. இங்கும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக ஸ்ரீலங்காவுக்கு மலேசியாவிடம் இருந்து படிப்பதற்கு ஒரு பாடம் உள்ளது. இந்தச் சவாலை ஏற்றுக்கொள்வதற்கான ஒரு தலைமை ஸ்ரீலங்காவில் உள்ளதா?

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

 

Share:

Author: theneeweb