51நாள் நெருக்கடி: வெற்றிகரமான தோல்வி

5

–     கருணாகரன்

2015 ஜனவரியில் ஆரம்பமாகிய “மாற்றத்துக்கான கூட்டரசியலின்” நம்பிக்கை வேர் பழுதடைந்து விட்டது. மகிழ்ச்சிக்கான சகிக்ஞை விளக்குகள் ஒளியிழந்துள்ளன. கூட்டரசாங்கத்தின் மூன்றாண்டுச்சாதனை என்றால் 19 ஆவது திருத்தம் மட்டும்தான்.

அதாவது ஜனாதிபதியின் அதிகாரம் சற்றுக் குறைக்கப்பட்டிருக்கிறது. இதைக்கூட நீதிமன்றத்துக்குப் போய்த்தான்  நிரூபிக்க வேண்டியிருந்தது. ஆனாலும் இலங்கை அரசியலைப் பொறுத்து, இது பெரிய விசயமே.

ஆனால், வெற்றிகரமாக அமைந்திருக்க வேண்டிய “இணைந்த அரசியல் பயணம்” தொடர்ந்து நகர முடியாமல் முரண்பாட்டுச் சுவரில் மோதி நிற்கிறது. இதனால் மூன்றாண்டுகளுள் குழப்பம், பிணக்கு, தேக்கம், பின்னடைவு என்ற வேதாளங்கள் பழையபடி முருங்கையில் ஏறி விட்டன. இதைச் சரியாகச் சொன்னால் தேவனைச் சபையேற்றுவதற்குப் பதிலாக சாத்தானைத் தூக்கிப் பீடத்தில் வைத்திருக்கிறார்கள் எல்லோரும்.

இதற்கான காரணத்தை அறிவதற்கு பெரிய விஞ்ஞானமெல்லாம் தேவையில்லை.

தேசத்தைப் பற்றியும் மக்களைப் பற்றியும் சிந்திப்பதற்குப் பதிலாக அவரவர் தத்தமது  அரசியல் எதிர்காலம், தாம் சார்ந்த கட்சியின் எதிர்காலம் எனக் குறுகிச் சிந்தித்ததன் விளைவே இந்தப் பின்னடைவும் பதற்றங்களுமாகும்.

கட்சி நலன், கட்சித் தலைமை என்பதற்கு அப்பால் தேச நலன், மக்களின் எதிர்காலம் என்று யாரும் சிந்திக்கவில்லை. அப்படிச் சிந்தித்திருந்தால் எவ்வளவோ பிரச்சினைகளைத் தீர்த்திருக்க முடியும்.

ஒரு கணம் பின்னோடி 2014 பின்னிறுதியாண்டில் 100 நாள் வேலைத்திட்டம், 2105 ஜனாதிபதித்தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் போன்றவற்றின்போது மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை எடுத்து அவர்களே இப்பொழுது படித்துப் பார்க்க வேண்டும்.

மனச்சாட்சியும் பொறுப்புணர்வும் இருக்குமானால் இந்த வாக்குறுதிகளையிட்டு இன்று ஒவ்வொருவரும் தலைகுனிவர்.

கண்கள் நிச்சயம் கசியும்.

பதிலாக அவை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருந்தால் இன்று ஒவ்வொருவருடைய தலையையும் நெஞ்சையும் நிமிர்த்தியிருக்கும். நாடும் நிமிர்ந்திருக்கும்.

பதிலாக இன்று யாரும் நிமிர்ந்து நிற்க முடியாத அளவுக்கே நாட்டின் நிலைமைகள் உள்ளன. 51 நாள் நெருக்கடி தணிந்து, புதிய அரசாங்கம் (ரணில் தலைமையில்) மீள ஆரம்பித்து விட்டதாகத் தோன்றலாம்.

ஆனால், நாட்டு மக்களுக்குப் பெரிய நம்பிக்கையை அளித்திருந்த இணைந்த அரசாங்கத்தின் முறிவு அல்லது தோல்வி  சமனிலையை ஈடு செய்து விடப்போவதில்லை. புதிய நம்பிக்கைகளைத் தந்து விடாது.
 

நம்பிக்கையூட்டிய இணைந்த அரசாங்கத்தின் தோல்வி 2018 ஒக்ரோபர் 26 வெள்ளிக்கிழமை முன்னிரவோடு பகிரங்கமானது.

இதற்குக் காரணம் வேறொன்றுமில்லை. மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பை ஒவ்வொரு  தரப்பும் விசுவாகமாக முன்னெடுக்கவில்லை என்பதேயாகும். அதாவது அவரவர் தத்தமது நலனை நோக்கிச் செயற்பட முனைந்த சுருங்கிய சிந்தனையாகும்.

தேச நலனுக்கான ஒருங்கிணைந்த ஆட்சி என்ற மகத்தான விரிந்த எண்ணங்கள் படிப்படியாகச் சிறுத்துச் சுருங்கிய சிந்தனை.

இது மரணக்குழியில் வீழ்வதற்குச் சமம்.

இதற்கான காரணங்கள் என்ன? இந்தக் காரணங்கள் எதன் நிமித்தமானவை? “புதிய அறிவிப்புகளும் பழைய நிலைப்பாடுகளும்“ என்ற அரசியல் வழிமுறையன்றி வேறென்ன?

அளவுக்கதிகமான கட்சி நலனே!

கட்சிக்கான செல்வாக்கை உருவாக்க முற்பட்டது!!

இதுதான். இவ்வளவுதான்.

கட்சியை சேவைக்கான இயக்கமாக நோக்காமல்,  தமது நலன்களுக்கான கொம்பனிகளாகக் கருதியதன் விளைவு.

ஆகவே, கட்சி நலனைப் பாதுகாக்க வேணும் என்றால், அதற்கான (குறுகிய வழி) அரசியலைச் செய்ய வேணும் என்ற தவறான புரிதலாகும்.

கட்சி நலனைப் பாதுகாப்பதொன்றும் தவறில்லை. அதை எப்படிச் செய்வது என்பதே கவனிக்க வேண்டியது.

உண்மையில் அதற்கான (கட்சி நலனுக்கான) அரசியல் என்பது என்ன?

பிரச்சினைகளுக்கான தீர்வை எட்டி, அந்த வெற்றியை மக்களுடன் பகிர்வது.

இதுவே தேசத்தையும் கட்சியையும் உயர்த்தும். அதனுடைய தலைமையின் மாண்பையும் உயர்த்தும். இதைச் செய்திருந்தால் பின்வந்த எந்த நெருக்கடிகளும் ஏற்பட்டிருக்காது. இன்றைய பதட்டங்களுக்கும் அவசியமில்லை.

ஆனால், இந்த வழிமுறையில் பிரச்சினைகளுக்கான தீர்வை எட்ட முற்படும்போது எதிர்த்தரப்பு அதை எதிர்நிலையில் (மக்களுக்குத் தவறான சேதிகளைச் சொல்லி) பயன்படுத்த விளைகின்றது என்ற சாட்டுகளை – அச்சத்தையே ஒவ்வொரு தரப்பும் முன்வைத்துத் தப்புவதற்கு முயற்சிக்கின்றன. 

தீர்வுக்கான முன்னெடுப்புகளை நாட்டைப் பிரிவிடுதலுக்கானதாகவும் பொருளாதாரச் சீர்குலைவுக்கானதுமாக எதிர்த்தரப்புகள் மக்களிடம் சித்திரித்து விடும் என்ற அச்சம். 

இது மிகப் பழைய சங்கதி. பழைய வழிமுறைகள்.

இதை முறியடிப்பதே புதிய அரசியல். இதுவே தேவையானது. இதை இலகுவாக முறியடித்திருக்கவும் முடியும்.

ஏற்றுக்கொண்ட – வாக்குறுதியளித்த விடயங்களை தாமதிக்காமல் – இழுத்தடிக்காமல் வேகமாகச் செய்திருந்தால் எதிர்த்தரப்புகள் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பிருந்திருக்காது.

ஆனால் அதற்கான வாய்ப்புகள் கிட்டியும் துரதிருஷ்டவசமாக அது செய்யப்படவில்லை.

பதிலாக பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் (சுத்திகரிக்கப்படாமல்) குட்டையாகவே வைத்திருக்கப்பட்டன. இது தவறே. குற்றமே.

பிரச்சினைகளின் குட்டைக்குள் கிடந்து ஊறுவது என்பது நோயுடன், பிணியுடன் வாழ்வதற்குச் சமம்.

இதன் தெளிவான சித்திரமே இன்றைய காட்சிகள்.

பிரதமர் பற்றிய நெருக்கடி, அமைச்சரவைச் சர்ச்சைகள் போன்றவற்றுக்கு நீதிமன்றப்படிகளில் ஏறித் தீர்வு கண்டாலும் புதிய நெருக்கடியாக எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற சிக்கல் புதிதாக வந்திருக்கிறது.

நாளை இதைப்போல இன்னொரு கனதியான பிரச்சினை இப்படி வரும். இப்படியே புதிய புதிய நெருக்கடிகள் வரப்போகின்றன. வந்து கொண்டேயிருக்கும்.

சரியான – தெளிவான அரசியல் முன்னெடுப்புகளை – பகிரங்கமாகச் செய்யவில்லை என்றால் இந்தப் பின்னிழுப்புகள் நிகழ்ந்தே தீரும்.

தெளிவான – சரியான அரசியல் தீர்மானங்களைப் பகிரங்கமாக எடுப்பதற்குத் துணிச்சல் அவசியம். அந்தத்துணிச்சலைக் கொண்டிருப்பவருக்கு கட்சி நலன் என்ற குறுகிய நோக்கிலான பின்னிழுப்புகள், அழுத்தங்கள் எல்லாவற்றையும் கடந்து மேலெழுவதற்கான விசையைக் கொடுக்கும்.

அரசியல் தலைமை என்பது தெளிந்த சிந்தனையோடெழும் துணிச்சலின் வடிவமேயாகும். அந்தத் துணிச்சல் பெரு விசையை உடையது. அந்த விசை எல்லாவற்றையும் தகர்த்து முன்னேறும். எல்லாப் பின்னிழுப்புகளையும் முன்னிழுத்துச் செல்லும்.

அவ்வாறான தலைமைகளே மகத்தான தலைமைகளாக – தேசத்தின் தலைமைகளாக மாறுவதுண்டு. காந்தி அப்படியான ஒரு தலைமைச் சித்திரம். மண்டேலா இன்னொரு அடையாளம். காமராஜர் இன்னொரு சான்று. இப்படி உலகெங்கும் ஏராளமான ஆளுமைகளைக் காணலாம்.

இத்தகையவர்களே நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்கான அரசியலை முன்னடத்தியவர்கள்.

இவர்கள் உருவாக்கிய அரசியல் சாதனைகளே இன்றுவரை அந்தந்த நாடுகளை வழிநடத்திச் செல்கின்றன. பின்வந்தவர்கள் விட்ட, விட்டுக்கொண்டிருக்கிற அத்தனை தவறுகளுக்கு மத்தியிலும் இந்த நாடுகள் தாக்குப்பிடித்து நிற்கின்றன என்றால் அது இந்த மகத்தான சிந்தனையும் துணிச்சலும் அதற்கான அர்ப்பணிப்புமேயாகும்.

இலங்கையிலும் இத்தகைய அரசியல் சரிகளைத் துணிச்சலாக முன்னெடுத்துச் செயற்படுத்தக் கூடிய தலைமைகள் தேவை. தேச நலன், மக்கள் முன்னேற்றம் என்பதை மனதில் கொண்ட தலைமைகளாக.

நாடும் வரலாறும் இதையே எதிர்பார்த்து நிற்கிறது.

நாட்டினதும் வரலாற்றினதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே தலைகளின் பொறுப்பு. அதுவே அரசியல். இதில் கூட்டிணைந்து செயலாற்றுவதே கட்சிகளின் பணி. இதற்குத்  தயாராகுவதே இன்றைய தேவை.

Share:

Author: theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *