தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி கிளிநொச்சி போராட்டம்

தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி கிளிநொச்சியில் சமத்துவம் சமூக நிதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் இன்று 23-01-2019 காலை பத்து மணிக்கு மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மலையக தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபா கூலி கேட்டு தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொண்டு வருகின்றனனர். எனவே இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தோட்டத் தொழிலாளர்களுக்கு வலுச் சேர்க்கும் வகையில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

உழைப்பாளிகளுக்கே இந்த உலகம் என்றால்

உழைக்கும் தொழிலாளர்களுக்கு ஏனிந்த அவலம்?,1000 ரூபாய் கேட்பது குற்றமா? 1000 ரூபா தொழிலாளர்களுக்கு வழங்குவது நட்டமா?, மலைகளை விடவும் தொழிலாளர்களின் துயரம் பெரிது மலைகளில் கொழுந்து பறித்து வாழ்வது கொடிதினும் கொடிது,தொழிலாளர் உழைப்புக்கே ஊதியம் கேட்கின்றனர்.

முதலாளிகளின் உழைப்பில் அல்ல, நாட்டுக்காக உழைப்பவர்களின் வீட்டுத்துயரை போக்கிட உதவுங்கள்,

கேட்பது ஆயிரம் ரூபா சம்பளத்தையே மலைகளையோ தோட்டங்களையோ அல்ல ,வழங்கிடுவோம் வழங்கிடுவோம் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு வழங்கிடுவோம், ஆயிரம் ரூபா பெறுவதற்கு உதவிடுவோம்மழை பனி வெயில் குளிரில் உழைக்கும் தொழிலாளர்களுக்கு நீதியான கூலியை கொடுங்கள்
உழைப்புக்கு நியாயமான ஊதியத்தைக் கொடு

உழைப்பாளிகளின் உரிமையை மதித்திடு, நல்லாட்சி அரசு என்ற முகமூடிக்குள் ஒழியாதே நம்மவர்களுக்கான நீதியை வழங்கப் பின்னிற்காதே… போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

 

இதன் போது இங்கு கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார். வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தங்களின் உரிமைகளுக்காக போராடிய போது மலையக மக்கள் அந்தப் போராட்டத்திற்கு தங்களின் தார்மீக ஆதரவை வழங்கியிருந்தார்கள். அதற்காக உயிர்த்தியாகங்கள் கூட செய்திருந்தார்கள். அதுமாத்திரமன்றி அவ்வவ் போது எங்களின் துயரங்களிலும் பங்குகொண்டனர்.

 

எனவே தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைக்கு நாம் எமது தார்மீக ஆதரவினை வழங்கி நிற்கின்றோம். அவர்களது ஆயிரம் ரூபா சம்பள உயர்வை இந்த நல்லாட்சி அரசு வழங்க வேண்டும். தற்போதைய வாழ்க்கை செலவு அதிகரிப்புக்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் கூட போதுமானது அல்ல ஆனால் அந்த ஆயிரம் ரூபாவை கூட இந்த அரசு வழங்காது முதலாளிமார்களின் நலன்களோடு ஒட்டிச் செல்கிறது.

 

நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிகள பங்களிப்புச் செய்கின்ற தோட்டத் தொழிலாளர்கள் உழைப்புக்கேற்ற ஊதியத்தையே கோட்கின்றனர். அதனை அவர்களுக்கு வழங்குவதனால் எவருக்கும் எந்த நட்டமும் ஏற்பட போவதில்லை எனத்தெரிவித்த அவர் தோட்டத் தொழிலாளர்கள் தோடர்ச்சியாக சுரண்டப்படுவதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது அவர்களின் உரிமைகள், நியாயமான கோரிக்கைகள் மதிக்கப்பட வேண்டும் அதுவரைக்கும் நாம் அந்த மக்களோடு உறுதுணையாக நிற்போம் என்றார்.

Share:

Author: theneeweb