பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அடிப்படை வேதன உயர்வை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் போராட்டங்கள்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளாவிய ரீதியில் இன்று கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஒருமீ என்ற சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியமும், ஏனைய சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து ஆயிரம் இயக்கம் என்ற பொது பெயரில் இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.

ஹட்டன், பொகவந்தலவை, ஹப்புத்தலை, கந்தப்பளை, ஹைபொரஸ்ட் உள்ளிட்ட பல தோட்டங்களை சேர்ந்த மக்கள் இன்று ஆயிரம் இயக்கத்தின் போராட்டத்திற்கு ஆதரவாக அடையாள பணிப்புரக்கணிப்பை மேற்கொண்டனர்.

கேகாலை, பதுளை, தெமோதரை, எட்டம்பிட்டிய, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மாத்தளை, கண்டி, மத்துகம, மட்டக்களப்பு, பதுரலிய, தலவாக்கலை, ராகல, நுவரெலியா, தெல்தோட்டை, இரத்தினபுரி முதலான இடங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தின் முன்னாலும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இதேநேரம், இன்றைய நாடுதழுவிய போராட்டத்தின் பிரதான எதிர்ப்பு பேரணி சகல பொதுநல அமைப்புக்களதும் பங்களிப்புடன் கொழும்பு ஐந்துலாம்பு சந்தியில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் ஆரம்பமானது.

இதன்போது அங்கிருந்து பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள், புறக்கோட்டை அரசமர சந்திவரை சென்று அங்கு பொதுக் கூட்டமொன்றையும் நடத்தினர்.

Share:

Author: theneeweb