என்றென்றும் எங்கள் லெனின்…!

===சீத்தாராம் யெச்சூரி===

திருநெல்வேலியில் மாமேதை லெனின் சிலையைத் திறந்து வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். அற்புதமான இந்தச் சிலை திருநெல்வேலியில் அமைந்திருப்பது பொருத்தமானது. இங்கே இப்படியொரு அற்புதமான சிலையை வடிவமைத்ததற்காக இந்திய நாடு முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட்டுகளின் சார்பாக என்னுடைய பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மகாகவி பாரதி பிறந்த மண்ணில்…

திருநெல்வேலியில் தான் விடுதலைப்போராட்டத்தின் முக்கியமான தலைவர்கள் இருந்தார்கள். இந்த மண்ணில் விடுதலைப் போராட்ட வீரர்கள் மட்டுமல்ல, உண்மையிலேயே உணர்வுப்பூர்வமாக ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியையும் அதற்கு தலைமை வகித்த லெனினையும் போற்றிப் பாடிய மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த மண்ணில் லெனின் சிலை அமைக்கப்பட்டிருப்பது மிக மிகப் பொருத்தமானதாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாட்டை உலகம் முழுவதும் எடுத்துச்செல்வது மட்டுமல்ல, லெனின் சிலையைத் திறப்பதன் மூலம் இந்தியாவை ஆளும் வர்க்கத்திற்கு, உங்களை ஒழிக்க வந்திருக்கும் பாட்டாளி வர்க்கத்தின் படைத் தளபதிகள், லெனின் லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடியவர்கள் இங்கே கூடியிருக்கிறோம் என பிரகடனம் செய்கிறோம்.

மார்க்சியத்தை இந்த நாடு முழுவதும் கொண்டுசெல்ல இருக்கிறோம்; அதன் மூலம் நாட்டிலே சோசலிசப் புரட்சியை முன்னெடுத்துச் செல்லக்கூடிய பணியை மேற்கொள்ள இருக்கிறோம் என்பதை நாட்டிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே பறைசாற்றும் நிகழ்ச்சியாக இதைப் பார்க்கிறோம்.

எக்காலத்திற்கும் பொருந்தும் மார்க்சிய – லெனினியம்

அன்றைக்கு சில நண்பர்கள் கேள்வியெழுப்பினார்கள். ரஷ்யப் புரட்சி நடந்து 100 ஆண்டுகள் கடந்துவிட்டன; லெனின் காலம் முடிந்து 94 ஆண்டுகள் ஆகிவிட்டன; இந்த நிலையிலும் கூட நீங்கள் ஏன் மீண்டும் மீண்டும் லெனினைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள். மீண்டும் ஏன் லெனின் சிலையை நிறுவுகிறீர்கள் என்று கேட்கின்றனர். லெனின் சிலையைத் திறப்பதை பெருமையாகவே நாங்கள் கருதுகிறோம். இதில் சித்தாந்த ரீதியான பொருத்தப்பாடு மட்டுமல்ல, வரலாற்று ரீதியான பொருத்தப்பாடும் இருக்கிறது. மார்க்ஸ் குறிப்பிட்டதைப் போல, தத்துவ ஞானிகள் வரலாற்றை வியாக்கியானம் செய்கிறார்கள். ஆனால், லெனினோ அல்லது மார்க்சிஸ்ட்டுகளோ வரலாற்றை வியாக்கியானம் செய்பவர்கள் மட்டுமல்ல, வரலாற்றை சிருஷ்டிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். ஆகவேதான் தத்துவார்த்த ரீதியாகப் பார்த்தாலும் சரி, வரலாற்று ரீதியாகப் பார்த்தாலும் சரி லெனின் பாத்திரம் என்பது மிக மிக முக்கியமானது. எந்தக் காலத்திற்கும் பொருத்தமானது.

லெனின் என்றைக்கும் கம்யூனிஸ்ட்டுகளை உத்வேகப்படுத்தக் கூடியவராக இருக்கிறார். மீண்டும் மீண்டும் உலகத்தில் ஏற்படுகிற சூழ்நிலைகளை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார். இன்றைக்கு உலகத்தில் எப்படிப்பட்ட மாற்றத்தை நிகழ்த்தமுடியும்; எப்படிப்பட்ட வரலாற்றை சிருஷ்டிக்க முடியும்; சுரண்டலற்ற சமூகத்தை எவ்வாறு உருவாக்கமுடியும் என்பதற்கான வரலாற்று ரீதியான உண்மைகளை எடுத்துச்சொல்கிறவராகத்தான் லெனின் நம்முன்னால் நின்றுகொண்டிருக்கிறார்.

எந்த ஒரு புரட்சியானாலும் சரி, அது ஒரு சுரண்டலற்ற சமூகத்தை உருவாக்க வேண்டுமென்றாலோ, உழைப்பாளி மக்களைச் சுரண்டலிலிருந்து விடுவிக்க வேண்டுமென்றாலோ ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நிலைபாட்டை எடுக்காமல் அது சாத்தியமாகாது. ஏனென்றால் ஏகாதிபத்தியம் உழைக்கும் மக்களுக்கு எதிரான ஒன்று. எந்த ஒரு அரசாக இருந்தாலும், அந்த அரசாங்கம் அவர்களுக்கு அனுசரணையாக இல்லையென்றால், சுரண்டலை அனுமதிக்கவில்லையென்றால், அவர்கள் தங்கள் கொள்ளை லாபத்திற்கு உடந்தையாக இல்லையென்றால் அந்த அரசாங்கங்கள் நீடிப்பதற்கு ஏகாதிபத்தியம் அனுமதிப்பதில்லை. சுரண்டலுக்கு எதிராகவும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் முதலாளித்துவத்திற்கு எதிராகவும் எத்தனை முற்போக்கு இயக்கங்கள் தலைதூக்கினாலும் அந்த இயக்கங்களை அழித்தொழிப்பதில் அவர்கள் முனைப்பாக இருப்பார்கள். காரணம், முற்போக்கு இயக்கங்கள், கொள்ளை லாபத்திற்கு முடிவுகட்டிவிடும் காரணத்தினாலே அத்தகைய நிலைபாட்டை அவர்கள் எடுக்கிறார்கள். உழைப்பாளி மக்கள் விடுதலை பெறவேண்டுமென்றால் முதலில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உணர்வை மக்கள் மத்தியில் ஊட்டியாக வேண்டுமென்று லெனின் குறிப்பிட்டுள்ளார்.

ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாக மோடி
இன்றைக்கு மோடி அரசின் கீழ் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை மக்கள் நன்கறிவார்கள். இந்த நாட்டில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாக அது செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியமும் அந்நிய மூலதனமும் மிகப்பெரிய அளவில் இந்தியாவில் ஊடுருவுவதற்கான நடவடிக்கைகளைத்தான் மோடி அரசு செய்துவருகிறது. இதன் விளைவாக உலக அளவில் இந்திய மக்களின் வாழ்க்கை மிக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான ஒரு புள்ளி விபரம் என்ன கூறுகிறதென்றால் இந்தியாவில் இருக்கக் கூடிய 19 பெரும் பணக்காரர்களின் செல்வம் 50 சதவீத மக்களின் ஒட்டு மொத்த செல்வத்தை விட அதிகமாக இருக்கிறது. அந்தளவிற்கு செல்வத்தைப் பெருக்கும், கொள்ளை லாபத்தை பெருக்கும் வாய்ப்பை மோடி அரசு முதலாளிகளுக்கு வழங்கியுள்ளது.

2018-ஆம் ஆண்டு வெளியான புள்ளி விபரத்தைப் பார்த்தால் இந்தியாவிலுள்ள பெரும் கோடீஸ்வரர்கள் நாளொன்றுக்கு ஈட்டுகிற லாபம் மட்டும் ரூ.2.200 கோடி ரூபாய். வருடத்தில் 365 நாட்களும் அவர்கள் கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

மோடியின் நெருங்கிய நண்பர்கள்

நாடு ஆளும் வர்க்கத்தின் கொள்ளைக் கூடாரமாக மாறியுள்ளது. ரபேல் விமான ஊழலால் நாடே நாறிப் போயுள்ளது. நாட்டின் பெரும் பணக்காரர்கள் இரண்டு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு அந்தக் கடனில் ஒரு பைசா கூட திரும்பச் செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடி விடுகிறார்கள். அரசின் துணையோடு நாட்டிலிருந்து பறந்து சென்றுவிட்டார்கள்.

மோடியின் நெருங்கிய நண்பரான மெகுல் சோக்சி ஏராளமான பணத்தை வங்கிகளிலிருந்து கடனாகப் பெற்றுவிட்டு நாட்டைவிட்டு பறந்துசென்றுவிட்டார். அவர் தன்னுடைய பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட்டு நான் இனி மேல் இந்திய நாட்டின் குடிமகனல்ல என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டார். இதன் நோக்கம் என்னவென்றால், இனி இந்திய அரசால் எந்த கிரிமினல் சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதுதான். இது மோடி அரசின் நடவடிக்கைகளால் சுரண்டல் கூட்டம் தைரியம் பெற்றிருக்கிறது என்பதையே காட்டுகிறது. மக்களைச் சுரண்டிக் கொழுப்பதை தைரியமாக செய்து வருகிறது. இதற்கு வெளிநாட்டுச் சக்திகளும் உதவி செய்கின்றன.

எனவே லெனின் காட்டிய வழியிலே இப்படிப்பட்ட சுரண்டலை ஒழிக்க வேண்டுமென்றால் புரட்சிகரமான சக்திகள் தங்களது செயல்பாட்டை மேலும் மேலும் கூர்மைப்படுத்தவேண்டும். சுரண்டல் வர்க்கங்களிடையே ஏற்பட்டிருக்கக் கூடிய முரண்பாடுகளை நாம் கூர்மைப்படுத்த வேண்டும். லெனின் தத்துவத்தின்அடிப்படையில் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

முதலாளித்துவம் தானாக ஒழியாது

மார்க்சினால் முன் மொழியப்பட்டு லெனினால் வழிமொழியப்பட்டது என்னவென்றால் முதலாளித்துவம் எவ்வளவு கொடூரமானதாக இருந்தாலும் அது தானாகவே சிதறிப்போகாது. முதலாளித்துவம் தானாகவே ஒழிந்து போய்விடாது. 1917-ஆம் ஆண்டு தொடங்கிய மகத்தான ரஷ்யப் புரட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்றால் முதலாளித்துவத்தை நாம் கட்டாயம் ஒழித்துக்கட்ட வேண்டும். அதற்கு மாற்றாக சோசலிச சமூக அமைப்பைக் கொண்டுவர வேண்டும். சுரண்டும் வர்க்கங்களின் பிரதிநிதியாக இருக்கக்கூடிய மோடி அரசு ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட வேண்டுமென்றால் அது தொழிலாளி வர்க்கத்தின் போராட்டம் மூலமே சாத்தியமாகும். சுரண்டலை ஒழித்து முதலாளித்துவ சமூகத்தை தூக்கியெறிந்துவிட்டு சோசலிச அமைப்பை உருவாக்குவது எப்படி என்ற நிலையை லெனின் நமக்கு போதித்துள்ளார்.

தொழிலாளி வர்க்கமும் விவசாய வர்க்கமும் ஒன்றிணைந்து மிகப் பிரம்மாண்டமான பேரணியை தில்லியில் நடத்தின. மும்பையில் விவசாயிகள் திரண்டு அந்த நகரத்தை நோக்கி பேரணியாகச் சென்ற காட்சியையும் பார்த்தோம். மத்தியப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் விவசாயிகள் மகத்தான பல இயக்கங்களை நடத்தி வெற்றி கண்டுள்ளனர். கடந்த ஜன. 8, 9 தேதிகளில் நாடு தழுவிய பிரம்மாண்ட வேலை நிறுத்தம் நடைபெற்றது. இப்படிப்பட்ட பிரம்மாண்டமான போராட்டங்கள் அரசுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்தப் போராட்டங்களெல்லாம் நாட்டின் உழைப்பாளி மக்களை சுரண்டலிருந்து விடுவித்து அவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக நடைபெற்ற போராட்டங்கள். எல்லா வளங்களும் நிறைந்த நாட்டில் மக்கள் வாழ்க்கையோ சீரழிந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டுமென்றால் தொழிலாளி வர்க்கமும் விவசாய வர்க்கமும் ஒன்றுபட்டுப் போராட வேண்டிய தேவையிருக்கிறது என்ற அடிப்படையில் தான் லெனின் தொழிலாளர்களே, விவசாயிகளே ஒன்றுபடுங்கள், ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுங்கள் என அன்றைக்கு விடுத்த அறை கூவல் நமது நாட்டிற்கு மிக மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.

சூழ்ச்சிகள் நிறைந்த முதலாளித்துவம்

வாழ்நிலையை மேம்படுத்த உழைப்பாளி மக்கள் ஒன்றுபடும்போது அவர்களை எவ்வாறு பிளவுபடுத்துவதென்ற முனைப்பிலே முதலாளித்துவம் உலகம் முழுவதும் இன்று செயல்படுகிறது. உலகத்தின் பல்வேறு நாடுகளைப் பார்த்தால், குறிப்பாக முன்னேறிய முதலாளித்துவ நாடுகளைப் பார்த்தால் அவை மக்களின் ஒற்றுமையைச் சிதைப்பதற்காகவும் தங்களது சுரண்டல் அமைப்பை பாதுகாப்பதற்காகவும் வலதுசாரி திருப்பத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் மக்களை பிளவுபடுத்துகின்ற பல்வேறு காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நடவடிக்கை அங்குள்ள மக்கள் ஒற்றுமையை சிதைப்பதற்காக அங்கு இனப்பிரச்சனையை எழுப்புகிறார். இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரச்சனையை எழுப்புகிறார். பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் வலதுசாரி சக்திகள் மக்களை பிளவுபடுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதுபோல இந்தியாவில் ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை மதச்சார்பற்ற ஜனநாயக அமைப்பை சிதைப்பதற்கு இந்துத்துவா, பாசிச சக்திகளை வலுப்படுத்த பல்வேறு முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுகிறார்கள். அவர்களது நோக்கமெல்லாம் மக்களை பிளவுபடுத்துவதுதான். பசு பாதுகாப்பு என்ற பெயரில் பசுக் குண்டர்களை ஏவி இஸ்லாமியர்களையும், தலித் மக்களையும் நாடு முழுவதும் தாக்குகிறார்கள். நீங்கள் என்ன உடுக்க வேண்டும். என்ன உண்ண வேண்டுமென்பதை தீர்மானிக்க முடியாது. நாங்கள் தீர்மானிப்போம். நாங்கள் சொல்கிற அடிப்படையில் தான் உண்ணவும் வேண்டும். உடுக்கவும் வேண்டுமென நிர்ப்பந்திக்கின்றனர்.

பெண்களுக்கு எதிராக வன்முறைகள் நாட்டில் அதிகரித்து வருகின்றன. பாலியல் பலாத்காரம் மட்டுமல்ல; பெண்கள் வன்கொலையும் செய்யப்படுகிறார்கள். கொலையாளிகளை பாஜக அரசாங்கங்கள் பாதுகாத்து வருகின்றன. இது போன்ற நடவடிக்கைகள் மூலம் மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தி, பாசிச இந்து ராஷ்டிரம் என்ற முழக்கத்தை நிறைவேற்ற முனைப்போடு செயல்படுகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாற்றம் ஏற்படவேண்டுமென்றால், ஏகாதிபத்தியத்திற்கு வீழ்ச்சி ஏற்படவேண்டுமென்றால், பாசிச சக்திகளை முறியடித்தே தீர வேண்டும்.

கவுரவர்களின் பெயர் தெரியுமா?

போராட்டங்களை முன்னெடுக்கும் போது நாங்கள் தான் பெரிய கட்சி என பாஜக கூறுகிறது. ராவணனை ஒழித்தது போல் போராடும் மக்களை ஒழித்துவிடுவோம் என்கிறது பாஜக. மகாபாரதத்தில் 100 கௌரவர்கள் இருந்தார்கள். அவர்களின் அனைவரின் பெயரும் யாருக்கும் தெரியாது. துரியோதனன், துச்சாதனன் பெயர் மட்டுமே தெரியும். அது போலத்தான் மோடி, அமித்ஷா பெயரைத் தவிர பாஜகவில் வேறு யார் பெயரும் தெரியாது.
ஏகாதிபத்தியத்தை முறியடிப்பதற்காக பாண்டவர்கள் போல் ஐந்து விரல்களை ஒன்றிணைத்து முஷ்டி உயர்த்துகிறோம். தோழர் லெனின் அவர்களே உங்களுக்கு செவ்வணக்கம். புரட்சி ஓங்குக; மக்களின் ஒற்றுமை ஓங்குக என்று ஒன்றிணைகிற போது பாஜக என்ற கவுரவப்படை ஒழித்துக்கட்டப்படும் என்பதில் சந்தேகமில்லை.

திராவிட இயக்கங்கள்

தேர்தல் நெருங்கும் நேரத்தில் தமிழகத்தில் ஒரு கூட்டாளியை பிடித்து தம்முடைய வெற்றியை உறுதிப்படுத்தவேண்டும் என்ற முயற்சியில் பாஜக இறங்கிக் கொண்டிருக்கிறது. திராவிட இயக்கங்களைப் பொறுத்த மட்டில் தமிழகத்தில் அவர்களுக்கு முக்கியமான பாத்திரம் உள்ளது. குறிப்பாக இந்த சமூகத்தில் பிளவுகள் மேம்படாமல் வேற்றுமையில் ஒற்றுமையை உருவாக்குவதிலே முக்கியமான பாத்திரங்களில் திராவிட இயக்கங்கள் செயல்பட்டுள்ளன. அது மட்டுமல்ல, நாட்டில் சமூக நீதியை நிலை நாட்டுவதிலும் திராவிட இயக்கங்களுக்கு முக்கியப் பங்குண்டு. அதற்காகத்தான் அவர்கள் இராமயணத்திற்கு எதிராக இராவண காவியம் படைத்தார்கள். அதில் எந்தவொரு கதாநாயகனும் இல்லை. எந்தவொரு வில்லனும் இல்லை.இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

தேர்தல் நெருங்க நெருங்க மோடி ஏராளமான புதிய புதிய வாக்குறுதிகளைத் தருகிறார். கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளைக் கூட அவர் நிறைவேற்றவில்லை. இதைச் சொல்கிற போது எங்கள் பகுதியில் சொல்லக் கூடிய கதை நினைவுக்கு வருகிறது. பிக்பாக்கெட்டை பற்றிய கதை.

ஒரு பஸ் சென்று கொண்டிருக்கிறது. அந்த பஸ்சிலே ஒரு விவசாயத் தொழிலாளி வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறார். பஸ் கண்டக்டர் வந்து அவரிடம் டிக்கெட்டுக்கு காசு கேட்கிறார். அந்த விவசாயி பாக்கெட்டில் கையை விட்டுப் பார்த்துள்ளார். அவருடைய பணத்தை யாரோ திருடி விட்டார்கள். விவசாயி கண்டக்டரைப் பார்த்து என்னிடமிருந்த பணத்தை யாரோ திருடிவிட்டார்கள். டிக்கெட் எடுக்க காசில்லை. என்னுடைய குழந்தைகள், மனைவி ஆகியோர் பசியும் பட்டினியுமாக உள்ளார்கள். நான் போய் தான் ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும். ஆகவே என்னை எனது ஊர் வரை அழைத்துச் செல்லுங்கள் எனக் கூறுகிறார்.

கண்டக்டரோ அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. காசு கொடுத்து டிக்கெட் எடு. இல்லையென்றால் பஸ்சை விட்டு இறங்கு என்று சொல்லி விசிலடித்து வண்டியை எடுக்கச் சொல்கிறார். கண்டக்டருக்கும் விவசாயிக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. பயணிகள் எல்லாம் அவரைப் பார்த்து உன்னால் நாங்கள் போகமுடியவில்லை. பஸ்சை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். காசு கொடு அல்லது பஸ்சை விட்டு இறங்கு எனச்சொல்லி நிர்ப்பந்திக்கிறார்கள். இவர் என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்கிறார். உடனே ஒருவர் நீங்களெல்லாம் சத்தம் போட வேண்டாம். அந்த விவசாயத் தொழிலாளி டிக்கெட்டிற்கான பணத்தை நான் தருகிறேன் என்று கூறி பணத்தைக் கொடுத்து டிக்கெட் எடுத்துத் தருகிறார். எவன் பணத்தைத் திருடினானோ அவன் தான் அந்த விவசாயத் தொழிலாளிக்கு டிக்கெட் எடுத்துக் கொடுக்கிறான். அந்தத் திருடன் பெரிய மகாபுருசனைப் போல் நாடகமாடுகிறான்.

இன்றைக்கு இந்தியாவிலும் அது தான் நடக்கிறது. நாட்டிலுள்ள மக்களிடம் கொள்ளையடித்த மோடி அரசு அதில் ஒரு சிறு பகுதியை உங்களுக்குத் தருகிறோம் என்று இப்போது சொல்கிறது.எப்போதும் ஒரு திருடன் என்பவன் தனியாக வர மாட்டான். அவனுக்கு துப்புக் கொடுப்பதற்கும் மக்களின் கவனத்தை திருப்புவதற்கும் ஒருவன் உதவியாக இருப்பான். அவன் திருடனின் துணைவனாக இருப்பான். அவனுடைய உதவியுடன் தான் திருட்டு நடக்கும்.
அது போல் தமிழகத்திலும் பாஜக அரசுக்கு துணை புரிந்துகொண்டு இந்த கொள்ளையை நடத்துவதற்கு உதவிகரமாக இருந்து கொண்டிருக்கும் நபர்கள் யார் என்பது மக்களுக்குத் தெரியும்.

மோடி அரசாங்கத்தை மட்டுமல்ல. அவர்களுக்கு துணையாக இருக்கக்கூடியவர்களையும் கட்டாயம் முறியடிக்கவேண்டும். அப்படி முறியடிப்பதன் மூலம் தான் தமிழகத்திலும், இந்தியாவிலும் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.அவரது ஆங்கில உரையை மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது தமிழாக்கம் செய்தார்.லெனின் சிலை திறப்பு விழாவில் பாளையங்கோட்டை தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.பி.எம்.மைதீன்கான், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மதிமுக மாவட்டச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருநெல்வேலியில் செவ்வாயன்று நடைபெற்ற மாமேதை லெனினின் சிலை திறப்பு விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்  சீத்தாராம் யெச்சூரி ஆற்றிய உரையிலிருந்து…

தமிழில்: எஸ்.நூர்முகமது

தொகுப்பு: ச.நல்லேந்திரன், படங்கள்: ஜெ.பொன்மாறன்

Share:

Author: theneeweb