கொழும்பை சூழ்ந்துள்ள கருமேகங்கள்!

எமக்கு வாழ்வதற்கு தூய்மையான வாயு, நீர், உணவு அத்தியாவசியமாகும். இதில் நீரையும் உணவையும் சிறிது தாமதமாகப் பெற்றுக் கொள்ள முடிமென்றாலும் காற்றை சுவாசிக்காமல் ஐந்து நிமிடங்கள் கூட உயிர் வாழ முடியாது.

இன்று எமது நாட்டில் நிகழும் மோசமான காற்று மாசடைதல் காரணமாக எதிர்காலத்தில் எம்மால் சுவாசிக்க தூய காற்றை பெறுவது மிகவும் சிரமமாக இருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுக்கின்றார்கள். ஒருவருக்கு சாதாரணமாக ஒரு நாளைக்கு சுவாசிக்க ஒட்சிசன் 500 லீற்றர் தேவைப்படுகின்றது. அந்த 500 லீற்றர் ஒட்சிசனுக்கு 40,000 ஆயிரம் ரூபா தேவைப்படும். ஆனால் நமக்கு காற்று இலவசமாகக் கிடைப்பதால் நாம் தூயகாற்றின் பெறுமதியை மதிப்பதில்லை.

கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம், தேசியக் கட்டட ஆய்வுகள் அமைப்பு கூறுவது போன்று நாட்டில் காணப்படும் வாயு மாசானது உலக சுகாதார அமைப்பின் வளியில் காணப்படக் கூடிய வாயு மாசடைவு தர மட்டத்தை விட அதிக வீதத்தில் காணப்படுகின்றது என்பதாகும். அதன்படி சரியான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் எமது நாட்டுக்கும் ஒட்சிசனை போத்தல்களில் இறக்குமதி செய்ய நேரிடுமென மேற்குறிப்பிடப்பட்ட ஆய்வு நிறுவனங்களின் சிரேஷ்ட ஆய்வு விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டுகின்றார்கள்.

இது பற்றிய விடயங்களைத் தெரிவித்த தேசியக் கட்டட ஆய்வு அமைப்பின் சிரேஷ்ட ஆய்வு விஞ்ஞானி எச்.டீ.எஸ்.பிரேமசிறி “கொழும்பு நகரில் கொழும்பு கோட்டை, புகையிரத நிலைய பிரதேசம், பொரளை சந்தி, மருதானை மற்றும் பேலியகொட பிரதேசங்களில் வார நாட்களில் வளி மாசமடையும் அளவு உலக சுகாதார அமைச்சின் வளிமாசடைதல் தொடர்பான சுட்டியின் அளவிலும் அதிகரித்த மட்டத்தில் உள்ளதாக காணப்படுகின்றது.

அதைத் தவிர கண்டியிலே பிரதான இரண்டு பஸ் நிறுத்தும் இடங்களுக்கிடையிலும் கெட்டம்பே விஹாரைக்கு அருகிலும் கண்டியின் பிரதான தபால் காரியாலயத்துக்கு அருகிலும் வாயு துகள்களில் நைட்ரஜன் டயொக்சைட், சல்பர் டயொக்சைட் மற்றும் காபன் மொனொக்சைட் வீதம் உலக சுகாதார அமைப்பின் தரத்திற்கும் அதிகரித்தளவில் காணப்படுகிறது” என்று சுட்டிக்காட்டினார். இதைத் தவிர ஹொரண நகரில் வாயு மாசடைதல் அதிகரித்துள்ளது. தெஹிவளை நகரிலும் வாயு மாசடைதல் அதிகரித்த மட்டத்திலுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகாரசபை மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் மேற்குறிப்பிடப்பட்ட நகரங்களில் வாயு துணிக்கைகளின் மாசு 2014ம் ஆண்டு தொடக்கம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதைத் தவிர கொழும்பு நகரில் வாயுமாசடைதல் வடமேற்கு பருவ காலத்தில் அதிகரிப்பதாகவும் தென் மேற்கு பருவ காலத்தில் குறைவாக உள்ளதாகவும் ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

2018 டிசம்பர் 2 – 19 வரையான காலப் பகுதியில் கொழும்பு நகரில் 50000 அடிக்கு கீழான பகுதியில் கரும் புகை மண்டலம் உள்ளதாக தேசிய கட்டட ஆய்வு அமைப்பின் விஞ்ஞானிகளுக்கு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட காலப் பகுதியில் காலை நேரங்களில் தேசிய கட்டட ஆய்வு அமைப்பின் சிரேஷ்ட விஞ்ஞானி பிரேமசிறி மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த கரும்புகை மண்டலம் அவதானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரிலுள்ள நுண்வாயு துணிக்கைகளின் அளவும் மற்றும் வாயு மாசுக்களும் அதிகரித்துள்ளதால் இந்த புகைமண்டலம் ஏற்பட்டுள்ளதென தெளிவாகியுள்ளது.

இது தொடர்பாக எடுக்கப்பட்ட நுண்ணிய புகைப்படங்கள் மூலம் தெரியவருவது என்னவென்றால் கொழும்பு நகரம் வாயுவால் மாசமடைந்துள்ளது என்பதாகும். எமது நாட்டின் வாயு மாசமடைதல் தொடர்பான தகவல்களை அறிவதற்கு APP ஒன்று தற்போது மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் தேசிய கட்டட ஆய்வு மத்திய நிலையம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலைமையின் கீழ் நாம் எமது நாட்டின் வாயு மாசடைதலை குறைப்பதற்கு அரச மட்டத்திலும் மற்றும் தனியார் மட்டத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இதற்காக அரசாங்கத்தின் பங்களிப்பும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் குறைவாகவே உள்ளதாக போக்குவரத்து பொருளாதார மற்றும் நிதிப் பகுப்பாய்வாளர் கலாநிதி டீ. எஸ். ஜயவீர தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் எமது நாட்டில் வாயு மாசடைவதை குறைக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 2003ம் ஆண்டிலிருந்து ஈயம் கலந்த பெற்றோல் இறக்குமதியை தடை செய்துள்ளது. மேலும் (2 Stroke) முச்சக்கர வண்டிகளின் இறக்குமதியையும் நிறுத்தியுள்ளதுடன் சல்பர் குறைந்த டீசலை இந்நாட்டிற்குக் கொண்டிவர நடவடிக்கை எடுத்துள்ளது.

பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் கியோடோ ஒப்பந்தங்களுக்கு அமைய அரசாங்கமும் சுற்றாடல் அமைச்சும் இந்நாட்டில் காற்று மாசடைதலைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.

எமது எதிர்கால பரம்பரைப்பு நிம்மதியாக மூச்சுவிடக் கூடிய சுற்றாடலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது எமது கடமை என்பதை மறக்கலாகாது.

நிஹால் பீ. அபேசிங்க
(சிலுமின)   – தமிழில் தினகரன்

 

Share:

Author: theneeweb