ஸ்ரீலங்கா ஏன் தோல்வியடைந்த ஒரு நாடாக உள்ளது

(பகுதி – 1)

ஒலிவர் ஏ.இலுப்பெரும —-

ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருகிறது மற்றும் சாதாரண குடிமக்களுக்கு நுகர் பொருட்கள், எரிபொருள் மற்றும் சேவைகள் போன்றவற்றுக்கு விதிக்கப்படும் வரி உச்சத்தை அடைந்துள்ளது. அதே நேரத்தில் சாதாரண குடிமகனிடம் இருந்து கசக்கிப்பிழியப்படுவது வெளிநாட்டில் வசிக்கும் சக்தி வாய்ந்த அரசியல்வாதிகளின் உற்றார் உறவினர்களின் செலவுகளைப் பராமரிக்க உதவுகிறது.

கடந்த வருடம் ஜனாதிபதி நியுயார்க்கிற்கு மேற்கொண்ட பயணம் சுட்டிக்காட்டத்தக்க ஒன்று, இதில் 63 பேர்கள் அவரை மகிழ்விப்பதற்காக இந்தப் பயணத்தின்போது உடன் சென்றார்கள். இதற்கு முரண்பாடாக நியுசிலாந்து பிரதமரின் கணவர் புதிதாகப் பிறந்த தங்கள் குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்காக பிரதமருடன் கூடச் செல்லும்போது அந்தப் பயணத்துக்கான செலவை தனது சொந்தப் பணத்தில் கொடுத்துள்ளார். நமது பிரதமரும் இதற்கு விதிவிலக்கல்ல,

ஜேவிபி தலைவர் அனுரகுமார திசாநாயக்காவின் கூற்றுப்படி அவர் ரூபா 590 மில்லியன் பெறுமானமுள்ள இரண்டு குண்டு துளைக்காத மோட்டார் வாகனங்களை வாங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார். கஷ்டப்பட்டு உழைக்கும் சாதாரண பொதுமகனின் பணம் இதற்குத்தான் வரியாக அறவிடப்படுகிறதா? எனது சொந்த அனுபவத்தில் கூட, பல்கலைக்கழகத்தில் 44 வருடங்கள் சேவையாற்றிய பின்னர் எனது சேமிப்பான ஊழியர் சேமலாபநிதிக்கு இப்போது வரி விதிக்கப் பட்டுள்ளது. இந்த வரிகள் ஆபத்தான நிலையிலுள்ள பாலங்களை திருத்துவதற்கோ அல்லது நீண்டகால சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள் அனுராதபுர மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு சுத்தமான நீரை வழங்குவதற்கு சென்றால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியும் ஆனால் அமைச்சர்களினதும் மற்றும் ஏனைய பாராளுமன்ற அங்கத்தவர்களினதும் ஆடம்பரச் செலவுகளுக்கு செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

முந்தைய ஆட்சிக் காலத்தின்போது ஊழல் தலைவிரித்தாடியது அங்கு பெருந்தொகையான பணம் அரசியல்வாதிகளின் உபயோகமற்ற பெரிய திட்டங்களான அம்பாந்தோட்ட துறைமுகம், மட்டல விமானநிலையம், சூரியவெவ கிரிக்கட் மைதானம் போன்றவற்றிற்குச் சென்றது. அதற்கு மேலதிகமாக வேறும் பல வீணான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன, உதாரணத்துக்கு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தை விடப் பெரியதான மாநாட்டு மண்டபம் ஒன்று அம்பாந்தோட்டயில் அமைக்கப்பட்டு இப்போது தூசு படிந்து கொண்டிருக்கிறது மற்றும் ஒரு பல்கலைக்கழகம் இல்லாமல் ஒரு பல்கலைக்கழக விடுதியும் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய மாபெரும் வீணடிப்புகள் புதிய அரசாங்கத்தில் இடம்பெறாது என்கிற நம்பிக்கையில்தான் மக்கள் யகபாலன அரசாங்கத்துக்கு வாக்களித்தார்கள். எனினும் எந்த வழியிலாவது நாட்டு மக்களின் பணத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்ற நோக்கோடு செயலாற்றும் முன்னரைவிட மிக மோசமான திருட்டுக்கூட்டத்தினால் நாட்டு மக்கள் திரும்பவும் ஏமாற்றப் பட்டுள்ளார்கள்.

88 கி.மீற்றர் தூரத்துக்கு இடைப்பட்ட குருநாகல்லுக்கும் மற்றும் ஹபரணவிற்கும் மிகப் பெரிய தொகையான 151,000 மில்லியன் ரூபா செலவில் ஒரு தொடரூந்துப் பாதை அமைக்கும் யோசனை ஒன்று கொண்டுவரப்பட்டது, இருப்பினும் பலத்த விமர்சனங்கள் காரணமாக அது பின்னர் திரும்பப் பெறப்பட்டதாகத் தெரிகிறது. ஏற்கனவே மாகோ வழியாக ஹபரணவிற்கு 113 கி.மீ தூரத்தில் ஒரு தொடரூந்துப் பாதை உள்ளது, முன்மொழியப்பட்ட இந்த புதிய பாதை 25 கி.மீ தூரத்தையே சேமிக்கிறது. குறைவான தேவையின் காரணமாக ஒரு நாளைக்கு இரண்டு பயணிகள் தொடரூந்து மட்டுமே இந்தப் பாதையால் பயணம் செய்கிறது மற்றும் எந்தவொரு ஏற்றுமதி வலயமும் ஹபரணவில் வரப்போவதற்கான அறிகுறி எதுவும் இல்லை அத்துடன் அங்கு வாழும் மக்கள் தொகை சுமார்; 10,000 அளவிலேயே உள்ளது. அரசியல்வாதிகள் நாட்டின் தேவைகளைப் பற்றிக் கவலைப் படுவதில்லை இப்படியான தேவையற்ற பெரிய திட்டங்களைக் கொண்டுவந்து கையூட்டு பெறுவதிலேயே ஆர்வமாக உள்ளார்கள். ஆட்சியாளர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் ஆகக் குறைந்தது 10 வீத தரகுப் பணம் பெறலாம என முடிவு செய்தாலே மிகப் பெரிய தொகையான 15000 மில்லியன் ரூபாய்களை அவர்களால் அறுவடை செய்ய முடியும். இறுதியில் சாதாரண மக்கள் அதிகரிக்கப்பட்ட மிக அதிகமான வரித்தொகையை செலுத்துவதற்கு அதிக சிரமப்படவேண்டும் மற்றும் இதை அவதானித்தால் உலகத்திலேயே அதிகமான தற்கொலை மரணங்கள் ஏன் ஸ்ரீலங்காவில் நிகழ்கிறது என்பது பற்றி ஆச்சரியப் படவேண்டிய தேவையில்லை.

எங்களிடம் ஒரு ஜனநாயக அரசாங்கம் உள்ளது இங்கு மக்கள் தங்கள் பிரதிநிதிகளை பாராளுமன்றிற்குத் தெரிவு செய்கிறார்கள். ஜனநாயகம் பற்றி ஆபிரஹாம் லிங்கன் பின்வருமாறு வரையறை செய்துள்ளார் “மக்களால் உருவாக்கப்படும் ஒரு அரசாங்கம், மக்களுக்காக மக்களால் உருவாக்கப்பட்டது”. ஸ்ரீலங்காவைப் பொறுத்தவரை இந்த விளக்கம் மாற்றப்பட வேண்டும் “சில பேர்களினால் உருவாக்கப்படும் அரசாங்கம் சில பேருக்காக சிலபேரினால் உருவாக்கப்பட்டது”. எங்களது தற்போதைய அரசாங்கத்தின் பரிதாப நிலையை நாங்கள் கவனத்தில் கொள்வோம்.

2016ல் பாராளுமன்றம் அமைச்சர்களுக்கும் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கும் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக 1.6 பில்லியன் ரூபாக்களை அனுமதித்தது, அவற்றில் சிலவற்றின் பெறுமதி 70 மில்லியன் ரூபாக்குளுக்கும் அதிகமாகும். ஒரு ஊடகப் பேச்சாளருக்கு அவர்கள் தங்கள் தொகுதிகளுக்குச் செல்வதற்கு சிறப்பான வாகனங்கள் தேவைப்படுகிறது என்று சொல்லும் தைரியம் இருந்தது, அதேவேளை அவர்கள் இப்பொழுதும் சொகுசு பென்ஸ், ஆர்எம்டபிள்யு போன்ற வாகனங்களையே அத்தகைய பயணங்களுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். மக்கள் இதைத்தான் பாராளுமன்ற அங்கத்தவர்களிடம் எதிர்பார்த்தார்களா?

ஒரு நாள் பாராளுமன்ற அமர்வு ஸ்ரீலங்காவில் வரி செலுத்துவோருக்கு சுமார் 4.6 மில்லியன் ரூபாய் செலவினை ஏற்படுத்துகிறது, இருந்தும் முக்கியமான கொள்கை முடிவுகளை பாராளுமன்றில் மேற்கொள்ளும்போது ஒரு கையளவு எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர்களே அங்கு பிரசன்னமாகி இருக்கிறார்கள். இந்த பரிதாபகரமான நிலமையைப்பற்றி சபாநாயகர் கரு ஜயசூரியா புலம்பியுள்ளார், பாராளுமன்றில் ஒரு துணை வாக்கெடுப்பு விவாதம் நடைபெற்றபோது 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 62 பேர் மட்டுமே அங்கு பிரசன்னமாகி இருந்தார்கள். பெரும்பாலான அங்கத்தவர்கள் பத்தினி திரைப்படத்தின் ஆரம்ப திரையீட்டு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டார்கள்! அப்படியான பாராளுமன்ற அங்கத்தவர்களைத் தெரிவு செய்தது மக்களின் சாபக்கேடு, எங்கள் அரசியல்வாதிகளின் இத்தகைய அதிர்ச்சியானதும் மற்றும் அருவருப்பானதுமான நடத்தையை நிறுத்தும் சக்தி அந்த மக்களுக்கு இல்லை. நாளொன்றுக்கான பாராளுமன்ற அமர்வுக்கான படியை அரசாங்கம் 500 ரூபாவிலிருந்து 2500 ரூபாவாக உயர்த்திய பின்னும் பொதுவான ஒரு விதியாக 50 வீதத்துக்கும் குறைவான உறுப்பினர்களே பாராளுமன்றத்துக்கு சமூகமளிக்கிறார்கள்.

எங்கள் பாராளுமன்றத்தின் இந்த மோசமான தோல்விக்கு என்ன தீர்வு? தனிப்பட்ட முறையில் பாராளுமன்றத்தையும் அதன் முரட்டுத்தனமான பிரமாண்டமான அமைச்சரவையையும் நீக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். மிகச் சில நாடுகள் மட்டுமே பாராளுமன்ற ஜனநாயகத்தினூடாக முன்னேற்றம் அடைந்துள்ளன. லீ குவான் யு மற்றும் மகாதீர் மொகமட் போன்ற வலிமைமயான மனிதர்கள் மட்டுமே தங்கள் பொருளாதாரத்தை சாம்பலில் இருந்து கட்டியெழுப்பியவர்கள். தாய்லாந்து; மற்றும் ஐரோப்பாவின் பெரும்பகுதி போன்ற ஏனைய நாடுகளில் மன்னராட்சி உள்ளது தங்கள் நாட்டின் நலனுக்கான ஒட்டுமொத்த பொறுப்பையும் அவர்களே கொண்டுள்ளார்கள். இங்கிலாந்து கூட அரசர்களின் சர்வாதிகாரத்துக்குப் பிறகும் செழிப்பாக மாறியுள்ளது. மக்கள் போதுமான அறிவுள்ளவர்களாகவும் மற்றும் நாடு கணிசமானளவு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்திருந்தால் மட்டுமே, மக்கள் தங்கள் பாராளுமன்றத:துக்கான பிரதிநிதியை தேர்ந்தெடுப்பதற்கு ஜனநாயகத்தை செயற்படுத்த முடியும். யாரை பாராளுமன்றத்துக்கு அனுப்புவது என்பதை தேர்ந்தெடுப்பதற்குரிய போதுமான அறிவை மக்கள் கொண்டுள்ளார்களா? இதற்கான உறுதியான பதில் இல்லை என்பதே. அவர்கள் போதைமருந்து பிரபுக்கள், நடிகர்கள், மற்றும் நடிகைகள் போன்ற சாதாரண மனிதனின் துயரங்களைப் பற்றிய உணர்வுகள் அற்றவர்களையே நிச்சயம் தெரிவு செய்வார்கள். விருப்ப வாக்குமுறை அதை மேலும் மோசமாக்கியுள்ளது, மாவட்டம் முழுவதும் ஏராளமான பணத்தைச் செலவு செய்யக்கூடியவரால் மட்டுமே இந்த முறை மூலம் ஒரு ஆசனத்தை வெல்ல முடியும். சேவைகளுக்கு மிகப்பெரும் இழுக்கைத் தேடித் தந்தவரான ஜேஆர்.ஜெயவர்தனா விருப்பு வாக்கு முறை மற்றும் சர்வ பலம் வாய்ந்த ஒரு ஜனாதிபதியின் உருவாக்கம் என்பனவற்றைக் கொண்ட ஒரு புதிய அரசியலமைப்பை சட்டமாக்கியதின் மூலம் இதைச் செய்தார்.

மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அரசாங்கமாக இருந்தால் அனைத்து மக்களும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை அது உறுதி செய்ய வேண்டும் அதுதான் ஜனநாயகம். இதோ மீண்டும் ஒரு சில மக்கள் மட்டும் குறிப்பாக ஆளுங்கட்சிக்கு சொந்தமானவர்கள் அரசாங்க துறைகளுக்கு இலாபகரமான மற்றும் இலாபகரமற்ற வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறார்கள். பல்கலைக்கழக முறையில் எனக்குள்ள தனிப்பட்ட அனுபவத்தைக் கொண்டு ஒரு பேராசிரியரை நியமிக்க முடியும் ஆனால் ஒரு தொழிலாளியின் நியமனத்தைக்கூட உயர்கல்வி அமைச்சரினால் வழங்கப்படும் ஒரு பட்டியலில் இருந்துதான் நியமிக்க முடியும். ஒருக்கால் நியமித்துவிட்டால் அவர்களின் ஆட்களாக இருப்பதினால் இந்த அடியாட்களை கட்டுப்படுத்துவது வெகு சிரமம். பெரும்பாலான அமைச்சர்களினால் நியமிக்கப்படும் ஆட்களின் விடயத்தில் எல்லா இடத்திலும் இது அநேகமாக உண்மையாகவே உள்ளது. ஸ்ரீலங்காவில் ஜனநாயகம் வேலை செய்வது மிகவும் அருவருப்பான இந்த வழி மூலமே. ஜேவிபியின் இரண்டாவது கிளர்ச்சிக்குப் பின்னர் பிரேமதாஸ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட இளைஞர் ஆணையகத்தின் பரிந்துரையின் விளைவாக அரசாங்கத் துறைகளுக்கான சகல நியமனங்களும் பகிரங்க விளம்பரம் செய்யப்பட்டு போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் வழங்கப்பட்டன. அதன்பின் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் வசதிபோல இந்த செயல்முறையை மறந்துவிட்டன மற்றும் மாறாக கட்சி விசுவாசிகள் மற்றும் நண்பர்களுக்குமே அரசாங்கத்துறையில் உள்ள அனைத்து வேலைகளும் வழங்கப்பட்டன.

அமைச்சரவையில் அமைச்சர்களைப் பராமரிப்பதற்கு குறைந்தது மாதாந்தம் ஒரு மில்லியன் ரூபா செலவு ஏற்படுகிறது, அவர்களின் வாகனங்களின் செலவுகள், ஒருங்கிணைப்பு மற்றும் தனியார் செயலாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் போன்றவற்றைக் கருதும்போது இது போன்ற செலவு ஏற்படுகிறது. என்ன தேவைப்படுகிறது என்றால் பாராபட்சமற்ற மற்றும் நியாயமான முறையில் நேர்மையான ஒருவரை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்து அவர் மூலமாக பாராளுமன்றத்தை குறைந்தது ஐந்து வருடங்களுக்காவது இடைநிறுத்தி மற்றும் மக்களுக்;கு நட்பான ஒரு அரசியலமைப்பை வரைவு செய்யவேண்டும். இது ஒரு அழகான பரிந்துரை ஆனால் அது ஒரு தொலைதூரக் கனவு. எனினும் நாங்கள் நினைவில் கொள்ள வேண்டியது “கனவு காணப்பட வேண்டும், இல்லையெனில் மக்கள் அழிந்து போவார்கள்” (பழமொழிகள்: 29.18). ஒருக்கால் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டதின் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைத்து அரசாங்க மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த தொழில் நிபுணர்களைக் கொண்ட ஒரு காபந்து அமைச்சரவையை நியமித்து அமைச்சரவையை நடத்தலாம் ஆனால் அரசியல்வாதிகள் அதில் இடம்பெறக்கூடாது. குறைந்தது ஐந்து வருடங்களுக்காவது நாடு பாராளுமன்றம் இன்றி நடக்குமானால் பின்னர் தற்போதைய நாளில் உள்ள பிரச்சினைகளில் அதிகமானவற்றை தீர்க்கமுடியும்.

2010 தேர்தலின் பின்னர் பெல்ஜியத்தில் உள்ள இரண்டு பிரதான கட்சிகளும் ஒரு ஒருமித்த கருத்துக்கு வரத்தவறியதால் நாடு 589 நாட்கள் ஒரு அரசாங்கம் இன்றி நடந்தது, இது ஒரு உலக சாதனை. ஒரு பிரதமர் மற்றும் 11 அமைச்சரவை அமைச்சர்களைக் கொண்ட ஒரு காபந்து அரசாங்கத்தில், அரசாங்க அதிகாரிகள் நாட்டைக் கொண்டு நடத்தினார்கள் மற்றும் வருடாந்த வளர்ச்சி வீதம் 2.5 வீதத்தில் இருந்து 3.3 விகிதமாக அதிகரித்தது. பின்லாந்து போன்ற மற்றைய நாடுகளில் 11 அமைச்சர்கள் மட்டுமே உள்ளார்கள் மற்றும் ஹோலந்தில் 14 அமைச்சர்கள் உள்ளார்கள். இருந்தும் அவர்களது பொருளாதாரம் பல்கிப் பெருகுகிறது மற்றும் குடிமக்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள். ஸ்ரீலங்காவின் வரிசெலுத்துவோர், 30 அமைச்சர்கள் அத்துடன் சேர்ந்து ராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் என பிரமாண்டமான இந்த அமைச்சரவைக்கு ஆதரவு நல்கவேண்டியுள்ளதினால் நமது அற்ப நிதி வளங்கள் வடிகட்டப்படுகின்றன.

நமது தேசிய பொருளாதாரத்தில் உள்ள மற்றுமொரு பெரிய வடிகட்டல் மாகாணசபை முறைமை, அது பயனுள்ள நோக்கம் எதையும் செய்யவில்லை ஆனால் மக்களுக்கு நிருவாகச் சுமைகளை ஏற்படுத்தும் அதிகாரத்துவத்தை ஊதிப் பெருப்பிக்கிறது. இது ஜேஆர்.ஜெயவர்தனா நமது தேசிய நலன்களைக் கருத்தில் கொள்ளாமல் கையெழுத்திட்ட இந்தோ – ஸ்ரீலங்கா ஒப்பந்தத்தினால் எழுந்த முறை. இந்தியா இந்த முறையை எமது கழுத்தைப் பிடித்து நிர்ப்பந்தித்தது என்று யாராவது சொல்லக்கூடும். ஆனால் இந்த வெள்ளையானையை தவிர்க்கும் விதத்தில் ஜேஆர்.ஜெயவர்தனா புத்திசாலித்தனமாக நடந்திருக்கலாம். காந்தி குடும்பத்தை அவமானித்து அவர் இந்தியாவை எதிரியாக மாற்றினார், மற்றும் இதன் விளைவாக இந்தியா எல்.ரீ.ரீ.ஈ பயிற்சி முகாம்களை இந்தியாவில் நிறுவியது. அவரது மகன் ராஜீவ் காந்தி இந்த விரோதத்தை மனதில் கொண்டு ஜேஆர்.ஜெயவர்தனாவை இந்த பயனற்ற மாகாணசபை முறைமையை ஏற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார். அது வடக்கு மற்றும் கிழக்குக்கு அதிகாரத்தை பரவலாக்குவதை கருத்தில் கொண்டிருந்தாலும் இறுதியில் அது முழு நாட்டையுமே சூழந்துகொண்டது.

மக்கள் இந்த அரசாங்கத்துக்கு; ஆணை வழங்கியது ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கும் அரசியலமைப்பை மறுசீரமைப்பதற்கும் குறிப்பாக சாபக்கேடான விருப்பு வாக்கு முறையை அகற்றுவதற்குமே. இதை அடைவதற்கு பாராளுமன்றில் உள்ள மூன்று அங்கத்தவர்களையும் மற்றும் வெளியில் இருந்து ஏழு அங்கத்தவர்களையும் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டது. எனினும் எங்கள் பாராளுமன்ற அங்கத்தவர்கள் தாங்கள்தான் அதிபுத்திசாலிகள் என்று நினைத்ததால் பாராளுமன்றில் இருந்து ஏழு பேரையும் வெளியில் இருந்து மூன்று பேரையும் நியமிக்கவேண்டும் என்று முடிவு செய்தார்கள். இது கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு முன் நடந்தது மற்றும் உறுதியான விளைவு எதையும் அடைவதில் இந்தக் குழு வெற்றி பெறவில்லை.; “உங்களால் நாளை செய்யக்கூடிய ஒன்றை ஏன் இன்றே செய்யவேண்டும்” என்கிற கொள்கையின்படி அந்தக் குழு செயலாற்றுகிறது ஆனால் நாளை என்பது ஒருபோதும் வராது.

(தொடரும்)

Share:

Author: theneeweb