நாடாளுமன்றில் – மலையக மக்களின் ஏழ்மையை எடுத்துரைத்த அனுரகுமார திசாநாயக்க

மலையகத்தில் வறுமை தலைதூக்கியுள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை நாடாளுமன்றில் முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நான்கு பேர் கொண்ட குடும்பமொன்று அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டு வாழ்வதற்கு 54 ஆயிரத்து 990 ரூபா அவசியம் என அரச புள்ளிவிபரங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

எனினும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இந்த தொகையில் இரண்டிலொரு பங்கே கிடைக்கின்றது.

இதை கொண்டு அவர்கள் எவ்வாறு வாழ்கையை நடத்துவது.

மொத்த வருமானத்தில் ஏனைய மக்கள் 35 சதவீதத்தை உணவுக்காக செலவிடும் நிலையில் பெருந்தோட்ட மக்கள் 51 சதவீதத்தை அதற்காக செலவிடுகின்றனர்.

அந்த மக்களுக்காக ஏனைய சலுகைகள் எதுவும் இல்லை.

மந்தபோசனையுடன் குழந்தைகள் பிறக்கின்றன.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் பல பிரச்சினைகள் உள்ளன.

பெருந்தோட்டங்களில் வாழ்பவர்களில் 47 வீதமானோர் கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை எழுதவில்லை.

12.8 வீதமானோரே உயர்தரம் பயின்றுள்ளனர்.

2 வீதமானோரே பல்கலைக்கழகம் செல்கின்றனர்.

வருடாந்தம் சுமார் 28 ஆயிரத்து 700 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுகின்ற நிலையில் தோட்டப் பகுதிகளிலிருந்து 120 மற்றும் 150 மாணவர்களே பல்கலைக்கழகம் செல்கின்றனர்.

இதனையடுத்து, உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், பெருந்தோட்ட தொழில்துறை இனரீதியான பாகுபாட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

சிங்கள மக்கள் சிறு தேயிலை உற்பத்தியில் ஈடுபடுகின்றவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பெருந்தோட்டங்களில் பணியாற்றுகின்றவர்கள் தமிழ் மக்களாக உள்ளனர்.

எனவே ஆயிரம் ரூபாய் கோரி தமிழில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் யாருக்கும் கிடைப்பதில்லை.

70 சதவீத தேயிலை உற்பத்தி செய்யப்படுகின்ற பெருந்தோட்டங்களில் 30 சதவீத வருவாய் மாத்திரமே ஈட்டப்படுகின்ற அளவிற்கு பெருந்தோட்டத்துறை வீழ்ச்சி கண்டுள்ளது.

1992 ஆம் ஆண்டு பெருந்தோட்டங்கள் தனியார்மயப்படுத்தப்பட்ட போது இரண்டு பிரதான நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.

அதில் ஒன்று பெருந்தோட்டத்துறை முகாமைத்துவ கண்காணிப்பு பிரிவாகும்.

இந்த நிறுவனம் பெருந்தோட்டத்துறையின் முகாமை பராமரிப்பு தொடர்பில் மேற்பார்வை செய்தல் வேண்டும்.
எனினும் தற்போது பெருந்தோட்ட தொழிற்துறை பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளது.

1992 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 6 லட்சம் பேராக இருந்த பெருந்தோட்ட மலையக தொழிலாளர் எண்ணிக்கை தற்போது ஒருலட்சமாக வீழ்ச்சி கண்டுள்ளது.

தேயிலை நிலப்பரப்பு பாரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளது.

தேயிலை தொழிற்துறைய இன்று இலங்கையின் பிரதான வருவாய் துறையாக இல்லை.

மாறாக பெருந்தோட்டங்கள் வாழ்கின்ற பெண்கள் வெளிநாடுகளுக்கு சென்று ஈட்டுகின்ற பணமே இலங்கையின் பிரதான வருவாயாக உள்ளது.

1992 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் பெருந்தோட்ட மனிதவள ஸ்தாபனம் உருவாக்கப்பட்டது.

இதில் பெருந்தோட்ட மக்களின் நலன்சார் விடயங்கள் கையாளப்படுகின்றன.

குறித்த ஸ்தாபனத்திற்கு பெருந்தோட்ட நிறுவனங்களால் மாதாந்தம் குறிப்பிட்ட தொகை நிதி வழங்கப்பட வேண்டும்.

எனினும் குறித்த நிறுவனங்களால் அந்த நிதி செலுத்தப்படுவதில்லை.

அவ்வாறு செலுத்தப்படாத நிதி 400 மில்லியன் ரூபாவாகும்.

இந்த நிதியை செலுத்தினாலே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வேதனத்தை வழங்க முடியும்.

கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் பிரதானமாக வேதனம் குறித்தே பேசப்படுகின்றது.

எனினும் உடன்படிக்கையில் உள்ள வெளி வேலையாளர் முறைமை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பாரிய அளவில் அநீதிக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.

அவர்களது ஊழியர் சேமலாப நிதி சூறையாடப்படுகின்றது.

இந்த சரத்துகளுக்கு உடன்படிக்கையில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் இணக்கம் வெளியிட்டுள்ளன.

எனவே தற்போது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உள்ள பிரச்சினை வேதனம் எவ்வளவு என்பதில் மாத்திரம் அல்ல.

தனியார் துறையினருக்கு பெருந்தோட்டங்கள் எதன் அடிப்படையில் கையளிக்கப்பட்டுள்ளன என்பதை ஆராய வேண்டும்.

அவ்வாறு கையளிக்கப்பட்டுள்ள முறைமையில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.

இலங்கையில் மக்களுக்கு அடிப்படை வேதனமாக குறைந்த பட்சம் 400 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் அங்கீரித்துள்ளது.

இதனை அடிப்படையாக கொண்டு தாங்கள் 100 ரூபாய் அதிகமாக வழங்குவதாக பெருந்தோட்ட நிறுவனங்கள் தர்கங்களை முன்வைத்துள்ளன.

எனவே நாடாளுமன்றத்தில் அடிப்படை வேதனமாக குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினால் பெருந்தோட்ட நிறுவனங்கள் நிச்சயமாக ஆயிரம் ரூபாய் வேதனத்தை வழங்க வேண்டிய நிலைக்கு உட்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர், உரையாற்றிய தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர் ரவிந்திர சமரவீர, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன பிரச்சினை தொடர்பில் இந்த மாத இறுதிக்குள் இறுதியான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படாதபட்சத்தில், தொழில் அமைச்சர் என்ற ரீதியில் தாங்கள் சில கடுமையான தீர்மானங்களை மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிற்துறையுடன் தொடர்புபட்ட ஒருவராக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனத்தை ஆயிரத்து ஐநூறு ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்பது தமது நிலைப்பாடு.

தொழிற்சங்கங்களுடனும், பெருந்தோட்ட நிறுவனங்களுடனும் பல்வேறுமட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளது.

நாளைய தினம் தொழில் அமைச்சுக்கும், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுக்கும், தொழிற்சங்கங்களுக்கும், பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

இதன்போது விசேட விடயம் ஒன்றை தொழில் அமைச்சு முன்வைக்கவுள்ளது.

இன்னும் சில நாட்களில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன விடயத்தில் இணக்கத்திற்கு வர முடியாவிட்டால், இந்த மாத இறுதிக்குள் தொழில் அமைச்சினால் இறுதித் தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும் என்ற அறிவிப்பு பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நீதியை நிலைநாட்டும் வகையில் அந்த தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் தொழில் அமைச்சர் ரவீந்திர சமரவீர குறிப்பிட்டார்.

இதேவேளை, சிறு தோட்டங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதை போன்று பெருந்தோட்டங்கள் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என அமைச்சர் பழனி திகாம்பரம் தமது நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டர்.

அவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டு சலுகைகள் வழங்கப்பட்டால் மட்டுமே பெருந்தோட்டத் துறையை பாதுகாக்க முடியும்.

இதன் மூலம் அரசாங்கத்திற்கு வருவாய் ஈட்ட முடியும்.

அவ்வாறு இல்லாவிட்டால் இன்னும் 20 வருடங்களில் பெருந்தோட்டத் துறையில் இருந்து மக்கள் வெளியேறிவிடுவார்கள் என்பதை பெருந்தோட்டத்தில் பிறந்தவன் என்ற முறையில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, பெருந்தோட்ட தனியார் நிறுவனங்கள் 22 உம், 3 அரச நிறுவனங்களும் இணைந்த 25 நிறுவனங்களும் இந்த நாட்டின் ஒரு தேசிய இனத்தை ஒடுக்கி வைத்திருக்கின்றது என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் குற்றம் சுமத்தினார்.

இதனால் இந்த நாட்டுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் எந்த பயனும் இல்லாத நிலை தோன்றியுள்ளது.

அத்துடன் இந்த கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் ஒரு மக்கள் சமூகம் மீண்டும் மீண்டும் நெருக்கடிக்கு உட்படுத்துகின்ற ஒரு நிலையே உருவாக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பை வழங்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீதியில் இறங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே வலியுறுத்தினார்.

இதேவேளை, சுமார் இரண்டு வருடங்களின் பின்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான், ஆயிரம் ரூபாவுக்கு குறைவான தொகைக்கு கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட மாட்டாது என குறிப்பிட்டார்.

Share:

Author: theneeweb