ஒரே கட்சியை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாகவும், மற்றொருவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்க முடியுமா

எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து நாடாளுமன்றில் கருத்துக்கள்
எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து இன்றைய தினமும் நாடாளுமன்றத்தில் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தற்போதும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவதாக குறிப்பிட்டார்.

இந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷ அந்தக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சந்தர்ப்பத்தில், அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டதாக சம்பந்தன் சுட்டிக்காட்டியதுடன், இந்த நிலைமையை தாங்கள் விளங்கிக்கொள்வீர்கள் என்றும் சபாநாயகரிடம் குறிப்பிட்டார்.

இதேநேரம், எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் கருத்து வெளியிட்ட சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அரசாங்கத்தின் தலைவராகவும், அந்தக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார் என சுட்டிக்காட்டினார்.

ஒரே கட்சியை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாகவும், மற்றொருவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்க முடியுமா என்ற பிரச்சினையே இந்த நாடாளுமன்றத்தினால் தீர்க்கப்பட வேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Share:

Author: theneeweb