இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு ஐ.நா செயலாளர் கவலை

மாலி நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை மீது நடத்திய தாக்குதலில் இரண்டு இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டமைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் செயலாளர் அண்டோனியா குட்டேரஸ் கவலை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான தாக்குதல்களை சர்வதேச சட்டத்தின் கீழ் யுத்த குற்றங்களாக கருத முடியும் என்றும், தாக்குதலுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் கொண்டுவருவதற்கு மாலி நாட்டின் அதிகாரிகளிடம் வேண்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டேரஸ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையை கண்டறிவதற்காக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வேண்டிக் கொண்டுள்ளார்.

மாலி நாட்டின் டொவ்ன்ஸா பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவ வாகனம் மீது நேற்று காலை 06.30 மணியளவில் இடம் பெற்ற பாரிய குண்டுத் தாக்குதலில் இலங்கை இராணுவத்தின் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர்.

இலங்கை இராணுவத்தின் 11 ஆவது இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்தவரும் பொலன்னறுவையை பிறப்பிடமாக கொண்ட கெப்டன் எச்.டப்ள்யூ.டீ ஜயவவிக்ர அவர்களும், 1 ஆவது பொறிமுறை காலாட் படையணியைச் சேர்ந்தவரும் தலகொலவெவ பொல்பிடிகமையை பிறப்பிடமாக கொண்ட கோப்ரல் எஸ்.எஸ். விஜயகுமார அவர்கள் உயிரிழந்ததாக இலங்கை இராணுவம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

மேலும் மூன்று படையினர் காயமடைந்து அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த இராணுவத்தினர் மாலி பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சமயத்தில் இந்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர் .

மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மாலியில் உள்ள ஐக்கிய நாட்டு கண்காணிப்பு தலைமையகத்தின் மூலம் விசாரனைகள் மேற் கொண்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share:

Author: theneeweb