நம்பிக்கை தரும் ஒரு இளையதலைமுறை

— கருணாகரன்—

பேர்லினிலிருந்து வந்திருந்த நண்பர் பத்மநாதன், “மகாரம்பைக்குளத்துக்குப் போறன். நீங்களும் வாறீங்களா?” என்று கேட்டார்.

மகாரம்பைக்குளத்தில் உள்ள ஒரு குடும்பத்தின் பிள்ளைகளுக்குச் சைக்கிளை வாங்கிக் கொடுப்பதே பத்மநாதனின் திட்டம். படிக்கிற பிள்ளைகள். நீண்ட தொலைவுக்கு தினமும் நடந்தே செல்ல வேண்டியுள்ளது என்று மத்திய கிழக்கில் வேலை செய்யும் சாம் வரதனுக்கு யாரோ சொல்லியிருக்கிறார்கள். சாம் வரதன், ஊருக்கு வரும் பத்மநாதனிடம் விவரம் சொல்லி ஏற்பாடு செய்திருக்கிறார். அந்த ஏற்பாட்டின்படிதான் இந்தப் பயணம்.

கிளிநொச்சியிலிருந்து புறப்படும்போது உயர் தரத்தில் படிக்கும் இரண்டு மாணவர்களின் கல்விக்காக ஒரு தொகைப் பணத்தை அவர்களின் வீட்டுக்குச் சென்று கொடுத்தார் பத்மநாதன். அந்த உதவி அவரோடு வேறு சில நண்பர்களும் இணைந்து செய்வது. ஊர் கூடி இழுத்தால் தேரசையும். நாலுபேர் சேர்ந்து செய்தால் நல்லது சுலமாக நடக்கும் என்று சொன்னதெல்லாம் அனுபவச் சாறு.

இதை முடித்துக் கொண்டு செல்லும் வழியில் மாங்குளத்தில் பெண்களால் நடத்தப்படும் உணவகத்தில் தேநீர் குடித்து விட்டுச் செல்லலாம் என்று வண்டியை நிறுத்தினோம்.

நல்ல காற்றோட்டம் உள்ள விசாலமான இடம். சீமெந்தாலான இருக்கைகளும் மேசைகளும். ஆறுதலாக இருந்து வேலைகளைக் கவனித்தபடியே ஒரு தேநீரைக் குடிக்கவோ தேநீரைக் குடித்துக் கொண்டு வேலைகளைக் கவனிக்கவோ ஏற்றமாதிரியான அமைப்பு. குளிரூட்டியோ காற்றாடிகளோ இல்லாமலே இதமான காற்று வீசியது. அங்கே இருக்கும்போது மனம் குதூகலத்தில் ஆடிக் களித்தது.

“இந்த மாதிரியான விசாலமான அமைப்பிலதான் தமிழ்ப்பகுதிகளில் உள்ள சாப்பாட்டுக்கடைகளை அமைக்க வேணும். அதுதான் எங்கட வெப்பச் சூழலுக்குப் பொருத்தமாக இருக்கும். ஒரு இடத்தில வந்து சுதந்திரமாக இருந்து தன்னுடைய காரியத்தைப் பார்த்துக் கொள்ளக் கூடிய நிலை இருக்கிறதுதான் உண்மையான சுதந்திரமாகும். எல்லாத்துக்கும் அப்பால் நல்ல சுத்தமான கழிப்பறை இருக்க வேணும். அதைத் தேடி வந்து சேருவார்கள் வாடிக்கையாளர்கள்” என்றார் கூடவே பயணித்த சுகு.

“அது இப்போதைக்குச் சாத்தியமில்லை” என்று உறுதியாகச் சொன்னேன்.

தமிழ்ச் சாப்பாட்டுக் கடைகளை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.

காதுகளைப் பிளக்கும் பாட்டு. சிலசமயம் தலையே பிளப்பதைப்போலிருக்கும். கடைக்குள் சாதாரணமாகப் போக முடியாது. ஓரங்கட்டி, பக்கவாட்டிலேயே நுழைய வேணும். அந்தளவுக்கு நெருக்கமாக – இறுக்கமாக உணவுப் பொருட்களைக் காட்சிப் படுத்தும் பெட்டியையும் (ஸோக்கேஸ்) கல்லாப் பெட்டியையும் வைத்திருப்பார்கள்.

கேட்டால், இதை மீறிச் சற்று வெளிப்பாக கடையை விரிவாக்குவதற்கு சுகாதாரத் திணைக்களத்தின் அனுமதி கிடையாது என்பார்கள். வற்புறுத்திக்கேட்டால் அதற்கு ஏதோ பொருந்தாத காரணமெல்லாம் சொல்வார்கள். அப்படி என்னதான் சட்டமோ விதியோ தெரியாது. அப்படியொரு (மன) இறுக்கம்.

இதை எப்படி மாற்றியமைக்கலாம் என்று பேசிக்கொண்டிருக்கும்போது அங்கே வந்தார் மாங்குளம் மகா வித்தியாலய அதிபர். அவரை அறிமுகப்படுத்திப் பேசிக் கொண்டிருக்கும்போது தன்னுடைய பாடசாலை பக்கத்திலேதான் உள்ளது. அங்கே ஒரு தடவை அங்கே வந்து, பாடசாலையைப் பார்த்துச் செல்ல முடியுமா? என்று கேட்டார்.

நேரப்பற்றாக்குறையாக இருந்தாலும் அதிபருடைய விருப்பத்தை மறுதலிக்காமல், ஒரு ஐந்து நிமிடம் மட்டும் நிற்போம் என்று சொல்லி  அங்கே சென்றோம். நாங்கள் பாடசாலைக்குச் செல்லும்போது நான்கு மணியை நெருங்கிக் கெண்டிருந்தது நேரம். மாலை நேர வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. அதிபரின் பணிமனையில் இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அறுபது, எழுபது மாணவர்களுக்கு மேல் அங்கே அப்பொழுது நின்றனர்.

நாங்கள் நின்ற அந்த ஐந்து நிமிடத்திற்குள் அதிபர் பாடசாலையின் தேவைகள், மாணவர்களுடைய நிலை, ஆசிரியர்களின் பங்களிப்பு என எல்லாவற்றைப் பற்றியும் சொன்னார். போரிலே பெற்றோரை இழந்த பிள்ளைகள் அருகில் உள்ள நல்லாயன் என்ற கிறிஸ்தவ இல்லத்திலிருந்து வருகிறார்கள். இதை விட எழுபது பிள்ளைகளுக்கு மேல், தாயை அல்லது தந்தையை இழந்த பிள்ளைகள் படிக்கிறார்கள். மாலை நேர வகுப்புகள், இடைவிலகும் மாணவர்களைத் தொடர்ந்து படிக்க வைக்க வேண்டிய பொறுப்பு போன்றவற்றுக்கான சவால்களைப் பற்றியெல்லாம் விளக்கினார்.

இதையெல்லாம் கேட்ட பத்மநாதன் நெற்றியைச் சுருக்கினார்.

பாடசாலைக்கான தளபாடங்கள், கட்டிட வளங்கள் பிரச்சினையில்லை. அதை அரசாங்கம் ஓரளவுக்கு நிறைவாக்கியுள்ளது. ஏனைய தேவைகள்தான் நிறைவேற்றப்படாத நிலையில் உள்ளது என்பதால், தன்னால் முடிந்த உதவியைச் செய்வதாகச் சொன்னார் பத்மநாதன். ஆனால், அதை அவர் தன்னோடுள்ள ஏனைய தோழர்களுடன் கலந்தாலோசித்தே செய்ய வேண்டும் என்பதால் அடுத்த சில நாட்களுக்குள் உரிய ஒழுங்குகளைச் செய்து கொண்டு தொடர்பு கொள்வதாகச் சொல்லி விட்டு அங்கிருந்து பயணித்தோம்.

பாடசாலை நேரம் முடிந்த பிறகும் அர்ப்பணிப்போடு ஆசிரியர்களும் அதிபரும் பாடசாலையில் நின்று வேலை செய்வதைப்பற்றிய பேச்சாகவே இருந்தது வழியில்.

வன்னியின் சிறப்பே இதுதான். நேரகாலம் பார்க்காமல், லாப நட்டக்கணக்குக்கு அப்பால் பணியாற்றும் மனோபாவம் பொதுவாகவே பலரிடமும் உண்டு என்பது கவனத்திற்குரிய முக்கியமான விசயம். இதுதான் வளமும் வசதிகளும் குறைந்த நிலையிலிருக்கும் வன்னி மக்களை உயிர்த்துடிப்பாக இயக்கிக் கொண்டிருப்பதாகும்.

வவுனியாவுக்குள் நாங்கள் நுழைந்தபோது நான்கு மணிக்கு மேலாகி விட்டது.

வவுனியா ஆஸ்பத்திரிக்கு முன்பாக உள்ள வீதிச் சுற்றுவட்டச் சுவரில் (பெரிய கட்டவுட்டில்) நின்று அமைச்சர் றிஸாத் பதியுதீனும் பிரதமர் ரணில் விக்கிரமங்கவும் கையசைத்து வரவேற்றனர்.

நகரத்தில் சனங்களும் பரபரப்பும் இரைச்சலும்.

அதிலிருந்து ஒரு மூன்று கிலோ மீற்றருக்குள் பூந்தோட்டம் பகுதியால் மகாரம்பைக்குளம் பக்கமாக நுழைந்தால் தெருநீளம் மாடுகளும் புழுதியும் அமைதியும் உறைந்து போனதைப்போல இருக்கும் வீடுகளும் இயலாமையுமான நிலை.

நாங்கள் சென்ற வண்டி மிகப் பதிவானது. அதனால் அது அந்த வீதியில் போக முடியாமல் திணறியது. எங்களுடைய வீட்டுக்கு வரும்போதும் இந்தப் பிரச்சினைதான். ஆட்கள் இறங்கி முன்னால் நடக்க, வண்டி பின்னால் ஊர்ந்தே சில இடங்களைக் கடக்க வேண்டியிருந்தது.

அப்படியல்லாமல் சற்று வேகமெடுத்தால் நிலத்தில் பொறுத்து நின்று விடும். அந்தளவுக்கு படு மோசமான தெருகள். மகாரம்பைக்குளத்தின் தெருக்களும் ஒன்றும் குறைந்தவை அல்ல. குன்றும் குழியுமே வழி நீளம். இவ்வளவுக்கும் மகாரம்பைக்குளம், வவுனியான நகரிலிருந்து இரண்டரை மூன்று கிலோ மீற்றர் சுற்றளவுக்குள் உள்ள பகுதி. வவுனியா நகர்ப்பகுதியின் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்டது.

யாழ்ப்பாண இடப்பெயர்வுக்குக் காரணமான சூரியக் கதிர் இராணுவநடவடிக்கையின் விளைவாக உருவான ஊர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறி வவுனியாவுக்குச் சென்றவர்கள், பூந்தோட்டத்திலும் அதற்கு அப்பாலும் குடியேறத் தொடங்கினார்கள். அப்படிக் குடியேறி உருவாகியதே மகாரம்பைக்குளம்.

எந்த வீதியும் ஒழுங்கான முறையில் இல்லை. எந்த வளவும் அளவுப் பிரமாணத்தோடில்லை. அவரவர் தமக்குத் தமக்கு ஏற்ற மாதிரி காணியைப் பிடித்து வளவுகளாக்கி, வீடுகளைக் கட்டியிருக்கிறார்கள். அதுக்குத் தோதாக மனம் போன போக்கில் பாதைகளை அமைத்துள்ளனர். இப்பொழுது இதுதான் பாதை. நகரப் பகுதிக்கு அண்மையில் இருந்தாலும் இதிலே எந்த முன்னேற்றமும் இல்லை. பாதைகளும் அப்படி. ஊரில் பாதிக்கு மேற்பட்ட சனங்களும் அப்படித்தான். கற்காலத்தைப்போல.

நாங்கள் அங்கே சென்றபோது உழுந்து பூத்துள்ள, பிலவுக்கு நடுவே சரியாகக் கட்டி முடிக்கப்படாத வீட்டின் முன்னே எல்லோரும் நின்றார்கள். வீட்டுக்கு தெற்கே ஒதுக்குப் புறமாக ஒரு குழாய்க்கிணறு. அதில் தண்ணீர் உள்ளதா என்று தெரியவில்லை.

அங்கே வருவதற்கு எங்களுக்கு வழிகாட்டிக் கொண்டு வந்தவர் 24 வயதுடைய இளைஞர். தொழில் நுட்ப உத்தியோகத்தராக வவுனியாவில் வேலை செய்கிறார். அவர்தான் பத்மநாதனுக்கு உதவியாக சைக்கிளை வாங்கி வந்தவர். அவருக்கு இந்தப் பிள்ளைகளின் நிலைமையைச் சொன்னவர், இந்தப் பிள்ளைகளுக்குப் படிப்பிக்கிற ஆசிரியை. அவரும் அங்கே நின்றார். அவருடன் கூட அந்தப் பகுதியின் கிராம சேவகரும் உதவிப் பிரதேச செயலரும் நின்றனர்.

நாங்கள் சென்றபோது மாலை ஐந்து மணிக்கு மேலாகி விட்டது. பத்மநாதன் திட்டமிட்டது எப்படியும் நான்கரை மணிக்கு முன்பு அங்கே செல்வதாக. திட்டமிட்டவாறு கிளிநொச்சியிலிருந்து வவுனியாவுக்கு ஒன்றரை மணி நேரத்தில் சென்றாகி விட்டது. ஆனால், வவுனியாவிலிருந்து மகாரம்பைக்குளத்துக்குச் செல்வதற்கு மட்டும் அரை மணி நேரம் பிடித்தது. ஆனால், அந்த நேரத்திலும் இந்தக் குடும்பத்திற்காக இவர்கள் எல்லோரும் காத்துக் கொண்டு நின்றது ஆச்சரியம். அது தங்களுடைய கடமை என்றமாதிரியே அவ்வளவு பேரும் காத்திருந்தனர்.

ஒரு நலிந்த குடும்பத்திற்காக, கிராமமொன்றிலிருக்கும் அந்தக் குடும்பத்தின் முற்றத்தில் கால்கள் கடுக்க நீண்ட நேரமாக நிற்கும் உத்தியோகத்தர்களைக் காண்பது இந்த நாட்களில் அபூர்வம். அவர்கள் இருப்பதற்கு அந்த வீட்டில் கதிரைகள் கூட இல்லை. அம்மம்மாவுடன் பேசிக் கொண்டிருந்ததால் அவர்களுக்கு களைப்போல சலிப்போ வரவில்லைப்போலும். அப்பப்பா வெளியே எங்கேயோ போயிருந்தார்.

சைக்கிள் தேவைப்படும் பிள்ளைகளோ, இந்தியாவில் அகதிகளாக இருந்து அண்மையில்தான் ஊருக்குத்திரும்பியிருக்கிறார்கள். ஊருக்கென்ன, நாட்டுக்கே வந்திருக்கிறார்கள். மூன்று பிள்ளைகளுக்கும் வயது முறையே 12, 11, 08. இந்தியாவிலே பிறந்து வளர்ந்த ஈழமக்கள். ஈழச் செல்வங்கள்.

மூத்த பையன் மட்டும் சைக்கிள் ஓடுவான். இரண்டாவது பெண்ணுக்குப் பதினொரு வயதென்றாலும் வயதுக்குரிய தோற்றமில்லை. ஏழு அல்லது எட்டு வயதுத் தோற்றத்திலே இருந்தாள். படு அமைதியாக அம்மம்மாவின் நிழலில் நின்றாள். கடைக்குட்டிக்கு வாயில் இரண்டு பற்களில்லை. படு சுட்டி.

அப்பா கும்மிடிப்பூண்டியில் நோய்ப்பட்டு இறந்து விட்டார். அம்மா இன்னொரு திருமணமாகி, பிள்ளைகளை விட்டுச் சென்று விட்டாராம். கும்மிடிப்பூண்டியில் யாருமற்ற நிலையில் ஆதரவற்றோருக்கான இல்லமொன்றில் சேர்க்கப்பட்ட பிள்ளைகளை அப்பம்மாவும் அப்பப்பாவும் போய் அழைத்து வந்திருக்கிறார்கள். பிள்ளைகளை அழைத்து வந்தாலும் அவர்களை வைத்துப் பராமரிக்கக் கூடிய அளவுக்கு அவர்களிடம் வசதியோ வல்லமையோ இல்லை. ஏதோ ஒரு மனத் தைரியத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பத்மநாதனுக்குத் துக்கம் தாழவில்லை. இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்று ஒரே குழப்பம். அவருக்கு மட்டுமல்ல, நமக்கும்தான்.

இந்தச் சனங்களும் நம்பிக்கையோடு தேர்தல்களில் தவறாமல் வாக்களிக்கிறார்கள். இவர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் பாராளுமன்றத்திலும் மாகாணசபையிலும் நகரசபையிலும் இவர்களின் பேரால் அதிகாரத்தில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். வீதிகள் நடந்து செல்லவே கடினமான நிலையில் உள்ளன. வளவுகளில் காடும் புதரும் மண்டிக்கிடக்கிறது. ஒரு சைக்கிளுக்கே கதியில்லாத நிலையில்தான் இந்தப் பிள்ளைகள் உள்ளனர். இந்தியாவிலிருந்து எவ்வளவோ சிரமப்பட்டு வந்தவர்களை வரவேற்கவோ, அவர்களுடைய பிரச்சினைகளைக் கேட்டறிந்து அதற்கு உதவவோ பொறுப்பான மக்கள் பிரதிநிதிகள் இல்லை.

அரச உத்தியோகத்தர்களும் உள்ளுர் இளைஞர்களும்தான் தங்களின் ஆர்வத்தினால் எதையாவது இந்த மக்களுக்குச் செய்ய வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். இந்தக் குடும்பத்தைப்போல இன்னும் நான்கைந்து குடும்பங்கள் அக்கம் பக்கத்தில் உள்ளன. அவற்றுக்கும் உதவிகள் தேவைப்படுகின்றன. யாராவது அதைச் செய்ய முன்வந்தால் நல்லது என்று கேட்டார் உதவிப் பிரதேச செயலர். அவருடைய அந்தக் கோரிக்கை, அதற்குப் பின்னால் உள்ள மனித நேயம், அவருடைய சமூக அக்கறை எல்லாம் அவரை ஒரு கணம் திரும்பிப் பார்க்க வைத்தன. அங்கே நின்ற அத்தனை உத்தியோகத்தர்களும் இளைய வயதினர். எங்களை அழைத்துச் சென்றவர்களும் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்களே.

எனக்கு எங்களின் இருபதுகள் நினைவுக்கு வந்தது. 1980 களில் அன்றைய இளைய தலைமுறை (பத்மநாதன், சுகு, நான் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர்) இப்படித்தான் புதிய யுகம் நோக்கிப் பயணித்தது.

அதைப்போன்றதோர் தலைமுறை அங்கங்கே இப்படி முளைக்கிறது என்பதைக் காணும்போது மனதில் ஒரு மகிழ்வொளி.

Share:

Author: theneeweb