ஆயிரம் ரூபாய் அடிப்படை வேதனம் : கூட்டு ஒப்பந்த கைச்சாத்திற்கு கடும் கண்டனம்

கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக இன்றைய தினமும் நுவரெலியா, ஹட்டன், பொகவந்தலாவ, மஸ்கெலியா, நோர்வூட், புசல்லாவ, டயகம, அக்கரப்பதனை, திம்புள்ள, போகாவத்தை, தலவாக்கலை, லிந்துலை, வெலிமடை, பதுளை – வெவஸ்ஸ, கலாபொக்க ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

கூட்டு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையி,ல் அதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இன்று கொழும்பில் ஊடக சந்திப்பை நடத்திய ஒருமீ உள்ளிட்ட சிவில் சமூக அமைப்புக்களின் பொது இயக்கமான ஆயிரம் இயக்கம் வெறும் 20 ரூபாய் அதிகரிப்பை வழங்கிய கூட்டு ஒப்பந்தத்தை ஏற்று கொள்ள முடியாது என அறிவித்துள்ளது.

ஆயிரம் இயக்கத்தின் சார்பில் உரையாற்றிய அருட்தந்தை மா.சக்திவேல் அடிகளார் இதனை தெரிவித்தார்.

இதேவேளை, புதிய கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக அதனோடு சம்பந்தப்பட்ட தொழிற்சங்க தலைவர்கள் மக்களை ஏமாற்றியிருப்பதாக இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் எஸ்.சதாசிவம் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ஆயிரம் ரூபாய் அடிப்படை வேதனம் கோரி நடத்தப்பட்ட போராட்டங்களை தொழிற்சங்கங்கள் கொச்சைப்படுத்தியிருப்பதாக அமைச்சர் பழனி திகாம்பரம் குற்றம் சுமத்தினார்.

இதேவேளை, கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக ஜே.வீ.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

இந்நிலையில் 27 பேச்சுவார்தைகளின் பின்னர் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக நியாயமான வேதனத்தை பெற்று கொடுத்திருப்பதாக ராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

கொள்ளுப்பிட்டியில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய வடிவேல் சுரேஷ் இதனை கூறினார்.

இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், சந்தாபணத்தை அதிகரிக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என குறிப்பிட்டார்.

Share:

Author: theneeweb