அகவை தொண்ணூறு காணும் கவிஞர் அம்பி.

ஆசி கந்தராஜா—

 

ழத்து கவிஞர்களுள் மிக முக்கியமானவராகக் கருதப்படும் அம்பி இவ்வாண்டு (17.2.2019) சிட்னியில் அகவை தொண்ணூறை அடைகிறார். இவரது இயற்பெயர் இராமலிங்கம் அம்பிகைபாகர்.கவிஞர் அம்பி சம்புகுண்டம், நான் கரதண்டம். அதாவது இருவரும் அயல் கிராமங்களான நாவற்குழியையும் கைதடியையும் சேர்ந்தவர்கள். சுற்றி வளைத்துப் பார்த்தால் உறவினர்களும்கூட. இருந்தாலும் நாங்கள் சந்தித்துக் கொண்டது 8725 கிலோ மீட்டருக்கு அப்பால், அதுவும் சிட்னியில், 2002ம் ஆண்டு.

அம்பி தனது ஆரம்பக் கல்வியை நாவற்குழி, கிறீஸ்தவ மிசன் பாடசாலையிலும் பின்னர் உயர் கல்வியை யாழ்.பரியோவான் கல்லூரியிலும் தொடர்ந்தவர். அறிவியல் மற்றும் கணித ஆசிரியராக தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் நீண்ட காலம் பணியாற்றியவர்.

கவிஞர் அம்பி

1981ல் பாப்புவா நியூகினி நாட்டிற்கு பணிநிமித்தம் சென்றவர் 1992ஆம் ஆண்டு அங்கிருந்து அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து இப்பொழுது நிரந்தரமாக சிட்னியில், தனது குடும்பத்துடன் வாழ்கிறார்.

பூமிப் பந்தெங்கும் தமிழர்கள் பல்வேறு நிர்ப்பந்த காரணிகளால் புலம் பெயரந்தபோது, அவுஸ்திரேலியாவுக்கும் பலர் குடி புகுந்தார்கள். இவர்களுள் பெரும்பாலானோர் கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய ஹகொமிஷன் அதிகாரிகளால் வடிகட்டி அனுப்பப்பட்டவர்கள், ஒரளவு கல்விப் பின்புலம் கொண்டவர்கள். சிலர் ஆப்பிரிக்க ஐரோப்பிய நாடுகளில் திரவியம் தேடிய பின், அவுஸ்திரேலியாவுக்கு குடிபுகுந்தவர்கள். இன்னும் சிலர் படகு மூலம் அகதிகளாக வந்தவர்கள்.இந்தவகையில் மாறுபட்ட சூழலில் வாழ்ந்த தமிழர்கள், திடீரென புலம்பெயர்ந்தபோது அவர்களின் மனங்களை வருத்திய விஷயங்கள் பல. அவற்றுள் மிக முக்கியமானது அந்நிய மொழிச்சூழலில் வளரும் தமது பிள்ளைகளின் தமிழ் மொழியறிவும் தமிழக்கலாசாரமுமே.

அவுஸ்திரேலியாவில் சங்கமித்த தமிழ் குழந்தைகள் மூன்று வகையினர்.

  1. தமிழ்ச் சூழலில் பிறந்து சிலகாலம் தமிழ் கற்றவர்கள்,
  2. தமிழ் சூழல் அல்லாத வேறு நாடுகளில் வாழ்ந்த தமிழ்ப் பெற்றோர்களுக்குப் பிறந்தவர்கள்,
  3. அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ்ப்பெற்றோர்களுக்குப் பிறந்தவர்கள்.

இவ்வாறு வேறுபட்ட வகையிலும் மாறுபட்ட பின்னணியிலும் வாழ்ந்த தமிழ்க் குழந்தைகளை ஒன்று படுத்தி, தமிழ் மொழி கற்க ஆரம்பிப்பவர்களுக்கும் முன்னைய தமிழ் அறிவை விருத்தி செய்ய முனைபவர்களுக்கும் அந்நிய சூழலில் தமிழ் கற்பிப்பதுபெரும் சவாலாக அமைந்தது. இதனால் புலம்பெயர் சூழலுக்கு ஏற்றவகையில் பாடத்திட்டமும் பாடநூல்களும் எழுதவேண்டிய தேவை உணரப்பட்டது. இதற்கு முற்றிலும் தகுதியானவராக அப்போது இனம் காணப்பட்டவர் அம்பி அவர்கள். இவர் தனது  ஆசிரியப்பணி   காலத்திலேயே  குழந்தை இலக்கியம்   படைத்தவர்.   இலங்கை கல்வித் திணைக்கழகத் தமிழ் மொழி பாடநூலாக்கக் குழுவில் அங்கம் வகித்தவர். அந்த வகையில் நியூசவுத்வேல்ஸ் தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பின் சார்பில் பாடநூலாக்கம் கருதி அவரைச் சந்தித்தேன்.

அவுஸ்திரேலியாவில் வாழும் பிள்ளைகள் ஆங்கில மொழிச் சூழலுக்குள் அமிழ்ந்திருக்கின்றார்கள். போகுமிடமெல்லாம் ஆங்கிலம். படிப்பது ஆங்கிலத்தில். வீட்டிலே, தொலைக்காட்சியிலே ஆங்கிலம். தங்கள் சொந்த சமூகத்துப் பிள்ளைகளோடு விழையாடும் போதும் கதைக்கும் போதும் ஆங்கிலம். ஆங்கிலத்தில் பேசுவதும் சிந்திப்பதும் பிள்ளைகளுக்கு வசதியானதாகவும் இயல்பாகவும் இருக்கிறது. கருத்துப் பரிமாற்றத்திற்காக பெற்றோர்கள்பலரும்பிள்ளைகளுடன் ஆங்கிலத்தில் உரையாடும்படியாகிறது. இந்த நிலையில் தமிழ் கற்பித்தல்  அவுஸ்திரேலியாவில் வெற்றிகரமாக அமையுமா? என அம்பி அவர்களிடம் கேட்டேன்.

எந்த மனிதனுக்கும் நான் யார் என்ற கேள்வி உளவியல் ரீதியாக மிகவும் முக்கியம் வாய்ந்தது. அடையாளம் தெரியாதவர்களாக எமது பிள்ளைகள் புலம்பெயர் சூழலில் வாழ்வது சஞ்சலமானது. ‘எனது’ என்ற அடையாளத்தை எங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கக்கூடியது தமிழ். இதனால்தான் தமிழ் அறியாது, தமிழ்க் கலாசாரம் அறியாது வாழும் நமது பிள்ளைகள் பல்வேறு வரழ்க்கைச் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளுகிறார்கள். பெரும்பான்மையாக வாழும் வெள்ளையர்களுடன் நாம் இரண்டறக் கலந்துவிடலாம் என்ற எண்ணம் சாத்தியமானதல்ல, என்றார் அம்பி.

புலம் பெயர் சூழலில் பதின் பருவத்துச் சிறார்களின் உலகம் வேறுபட்டது. அவர்கள் பெரும்பாலும் எமது மொழி, நமது அடையாளம் என்பனவற்றை ஏற்றுக் கொள்வதில்லை.  இந்நிலையில் தமிழ், எமது மொழி என்பதற்கு அப்பால் தமிழ் மொழியைக் கற்பதற்கு வேறு ஏதாவது நியாயம் உண்டா? என்ற என் ஐயப்பாட்டை அவர் முன் வைத்தேன்.

தாயகத்தில் நாம் ஆங்கில மொழியைக் கற்றதன் காரணம், அது தொடர்பு மொழியாகவும் தொழிற்பாட்டு மொழியாகவும் இருந்த காரணத்தால். அவுஸ்திரேலியாவில் உள்ள சீன, கொரிய நிறுவனங்கள் பல தங்கள் மொழியையே அங்கு அலுவலக மொழியாக வைத்திருக்கிறார்கள். இதே வேளை வாடிக்கையாளர்களுடன் ஆங்கிலத்தில் பேசிக் கொள்கிறார்கள். பல இனங்கள் வாழும் அவுஸ்திரேலியாவில், இனங்களின் கலாசார இயல்புகளை மதிக்கவும் அவற்றை வெளிப்படுத்தவும் அரசு மானியம் வழங்கி ஊக்கப்படுத்துகிறது. எனவே தமிழர்களாகிய நாங்கள்   புலம்பெயர் சூழலில் தமிழ்மொழியின் தேவையை ஏற்படுத்த வேண்டும். அதன் அவசியத்தை உணரச்செய்ய வேண்டும், என விளக்கம் தந்தார்.

அம்பி அவர்கள் பேச்சோடு நிற்பவரல்ல. அடுத்த வாரமே அந்நிய மொழிச் சூழலில் வாழும் தமிழ்க் குழந்தைகளின் அறிவுவிருத்தி, செயல்திறன் விருத்தி, மனப்பாங்கு விருத்தி ஆகியனவற்றைக் கருத்தில் கொண்டு விரிவான பாடவிதானத்தை எழுதித்தந்தார். இதனை அடிப்படையாக வைத்து அவரின் பெரும் பங்களிப்புடன் தமிழ்ப் பாடநூல்களும் பயிற்ச்சி நூல்களும் எழுதப்பட்டன. அவை மிகுந்த வரவேற்பைப் பெற்றன. இந்த முயற்சில் அவருடன் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றியதைப் பெரும் வாய்ப்பாகக் கருதுகிறேன்.

கவிஞர் அம்பி அவர்கள் தமிழ் நாட்டில் அண்ணாதுரை முதலமைச்சராகவிருந்த காலப்பகுதியில் அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டினை முன்னிட்டு நடாத்தப்பட்ட கவிதைப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர். ஈழத்தின் தேசிக விநாயகம்பிள்ளையாக, சுபமங்களா இதழால் வர்ணிக்கப்பட்டவர். இலங்கை சாகித்திய விருது உட்பட உலகளாவிய ரீதியில் பல விருதுகள் பெற்றவர். அம்பி பாடல் வேதாளம் சொன்ன கதை, கொஞ்சும் தமிழ் சிறுவர் பாடல்கள், அந்தச் சிரிப்பு, யாதும் ஊரே…! ஒரு யாத்திரை, அம்பி கவிதைகள், மருத்துவத் தமிழ் முன்னோடி, பாலர் பைந்தமிழ், கிறீனின் அடிச்சுவடு ஆகியவை அவரால் எழுதப்பட்ட நூல்களுள் சில.

இவர் தமிழுக்குச் செய்த அரும்பணிகளில் இன்னுமொன்று மருத்துவத் தமிழ் முன்னோடி, டாக்டர் சாமுவேல் கிறீனை தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்தியதுடன் கிறீனுக்கு இலங்கை அரசு முத்திரை வெளியிடுவதற்கு ஆக்கபூர்வமாக உழைத்தது.

டாக்டர் கிறீனை நீங்கள் முன்னிலைப் படுத்தியதன் காரணம் என்ன? என அம்பியிடம் பிறிதொரு சந்தர்ப்பத்தில் கேட்டேன்.

சாமுவேல் கிறீன் என்பவர் அமெரிக்க வைத்தியரும் கிறிஸ்தவ மத ஊழியருமாவார். இவர் 1847ஆம் ஆண்டிற்கும் 1872ஆம் ஆண்டிற்கும் இடப்பட்ட காலத்திலே, மேனாட்டு மருத்துவக்கலை, அமெரிக்க மிஷன் உதவியுடன்யாழ்ப்பாணத்திலே தமிழில் வளர்க்கப்படுவதற்கு அச்சாணியாக இருந்தவர் எனச் சொல்லி நிறுத்தியவரிடம், சாமுவேல் கிறீன் ஏன் யாழ்ப்பாணத்தைத் தேர்ந்தெடுத்தார்? எனக்கேட்டு உரையாடலைத் தொடரவைத்தேன்.

யாழ்ப்பாணத்திலே தமது மிஷனரிச் சேவையை ஸ்திரப்படித்திய அமெரிக்க மிஷன், மருத்துவ சேவையையும் துவங்குவதென தீர்மானித்தது. இதற்காக 1848இலே மானிப்பாயில் ஒரு மருத்துவ நிலையத்தை நிறுவினார்கள். இம்மருத்துவ மனை இன்று மானிப்பாய் கிறீன் ஞாபகார்த்த மருத்துவமனை என அழைக்கப்படுகின்றது. அங்கு பணியாற்ற வந்தவர்தான், நியூ யோர்க் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்த, சாமுவேல் கிறீன். இவர், வைத்தியர்கள் தமது சொந்தக் கிராமங்களிலே சேவையாற்றல் வேண்டும், தமது கிராமங்களிலே சொந்த மொழி பேசி வாழ்ந்து மக்கட் பணியாற்ற வேண்டும், என்ற எண்ணம் கொண்டவர். இதனால் மருத்துவ மனை அருகே மருத்துவக் கல்லூரி ஒன்றை ஆரம்பித்து தமிழில் மருத்துவம் கற்பித்தார்.

ஓஹோ!

தமிழ்மொழி மூலம் 33 வைத்தியரைக் கற்பித்த பின்பே, கிறீன் அமெரிக்கா திரும்பினார். அங்கிருந்தும் அவர் பல தமிழ் நூல்களை வெளியிடும் பணியைத் தொடர்ந்தார், என நான் அறிந்திராத பல விஷயங்களைச் சொன்ன கவிஞர் அம்பி, சாமுவேல் கிறீனிடம்1850களில் தமிழ் மூலம்மருத்துவம் கற்றவர்களின் விபரம் தெரியவில்லை என வருத்தப்பட்டார்.

மனித வாழ்வில் தொண்ணூறு வயது முதுமை என்பது சற்று சிரமமானது. அனாலும் அவர் ஆண்டவனால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஸ்டசாலி என்றே சொல்ல வேண்டும். அதற்கு காரணம் அவரது ஒரே மகன் திருக்குமார். தனது தந்தையை இன்றுவரை அவர் தன்னுடன் வைத்து, சகல பணிவிடைகளையும் சிறப்பாகச் செய்து பராமரிக்கின்றார். இக்காலத்தில் இது மிக அரிது. தொடர்ந்தும் அவர் சுகமே வாழ வாழ்த்துக்கள்.நன்றி தினக்குரல் (27 1 2019)

Share:

Author: theneeweb