யகபாலன ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பின்னரான அரசியல் பொருளாதாரம்

கலாநிதி.அமீர் அலி—–

கடந்த வருடம் ஒக்ரோபர் 26ல் ஜனாதிபதி சிறிசேன பிரதம மந்திரி; விக்கிரமசிங்காவை பதவி நீக்கம் செய்தது முதல் 52 நாட்களாக நாடு கடும் துன்பத்தை அனுபவித்தது, இது நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகப் பெரியளவு சேதத்தை ஏற்படுத்தியது. மூலதன வெளியேற்றம், ரூபாயின் மதிப்பிறக்கம், சுற்றுலாப் பயணிகளின் வருகையில் சரிவு மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக முதலீட்டாளர்களின் நிச்சயமற்ற தன்மை மற்றும் வெளியக நம்பிக்கை என்பன சிறிசேனவின் மூர்க்கத்தனமான அரசியலமைப்புக்கு மாறான செயற்பாட்டின் நேரடி விளைவுகளாகும். விக்கிரமசிங்காவின் அரசாங்கம் மீளமைக்கப்பட்ட போதிலும், அரசியல் சூழ்நிலை வழமைக்குத் திரும்பவில்லை. தொடர்ச்சியான கொந்தளிப்பு மற்றும் சிறிசேனவுக்கு அவரது அரசியலமைப்பு தவறுதலால் ஏற்பட்ட தோல்வியினால் ஏற்பட்டுள்ள வடு மற்றும் அதன் காரணமாக அவருக்கு பொதுமக்கள் முன் எழுந்துள்ள அவமானம் போன்றவை தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் சுமுகமாகச்; செயற்படுவதை தொடர்ந்தும் குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது. அதே சமயம் ராஜபக்ஸ வம்சம் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பனவற்றால் வழிநடத்தப்படும் எதிர்க்கட்சியினர் எந்த விலை கொடுத்தும் அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கும் ஆசையினால் எரிகின்ற நெருப்புக்கு எண்ணெய் வார்த்து வருகிறார்கள். இந்த அதிகார விளையாட்டுக்கு இறுதியில் இரையாகியிருப்பது தேசத்தின் பொருளாதாரமே. இந்தப் பாதிப்பைப் பற்றி யாருமே கவலைப்படவில்லை என்றே தோன்றுகிறது.

ஷேக்ஸ்பியரின் ஹம்லட்டில் “கடன் வாங்கியவர் கடன் கொடுப்பவராக இருக்கமாட்டார்” என்று பொலோனியஸ் சொன்னான். தமிழ் கவியமான கம்ப ரமாயணத்தில் ஒரு கட்டத்தில் இலங்கை மன்னன் ராவணன் அனுபவிக்கும் வேதனையை ஒரு கடன் தொல்லையில் உள்ள ஒருவனது நிலையுடன் ஒப்பிடப்படுகிறது. ஒரு இராவணனுக்கு மாறாக இன்று ஸ்ரீலங்காவே தனது அனைத்து உற்பத்தியின் மதிப்பின் 70 விகிதத்துக்கும் மேலான கடன் சுமையில் அகப்பட்டு வேதனை அனுபவிக்கிறது. நிதி அமைச்சர் மங்கள சமரவீர சிலசமயம் அதிகரித்து வரும் தேசியக் கடன் மற்றும் மெதுவாக நகரும் பொருளாதாரம் என்பனவற்றின் காரணமாக நவீன கால இராவணனாக மாறியிருக்கலாம். ஒரு கருத்தில் இந்தக் கடன் சுமை பெரும்பாலும் முந்தைய அரசாங்கங்களில் இருந்து மரபுவழியாக அவருக்கு கிடைத்திருக்கலாம், ஆனால் அவரது அரசாங்கமும் இதற்கு ஒரு நியாயமான பங்கை வழங்கியிருக்கிறது. ஏற்கனவே குறைந்தபடசம் கடன் கொடுத்த ஒருவர் நாட்டின் சொத்துக்களில் ஒன்றான அம்பாந்தோட்ட துறைமுகத்தை வெளிப்படையாக 99 வருடக் குத்தைகயின் அடிப்படையில் தனது கடனுக்காகக் கோரிப் பெற்றுள்ளார். இந்தச் சொத்து திரும்பவும் ஸ்ரீலங்காவுக்கு கிடைக்குமா? தன்மீது சூழ்ந்துள்ள பெரும் கடன்சுசுமையில் இருந்து தன்னை ஸ்ரீலங்கா விடுவித்துக் கொள்ளாவிட்டால் இது போன்ற கையகப்படுத்தல்கள் இன்னும் நடைபெறாது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது. அமைச்சர் தற்போது மற்றொரு கடனளிப்பவரான சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எப்) இரஞ்சுகிறார், தற்போதுள்ள கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான நிபந்தனைகளை மீள்பரிசீலனை செய்வதற்கு கருணைகாட்டும் படியும்;; அதேவேளை இன்னும் அதிக கடனைத் தந்துதவ வேண்டும் என ஐஎம்எப் இடம் வேண்டிநிற்கிறார்.

ஒரு தனிநபரிடமிருந்தோ,நிறுவனத்திடமிருந்தோ, கூட்டுத்தாபனத்திடமிருந்தோ அல்லது தேசத்திடமிருந்தோ கொடுக்கல் வாங்கல் செய்வது நவீன வாழ்வியலில் ஒரு சாதாரண பொருளாதார நிலை. எனினும் ஒருவர் கடன்வாங்க விரும்பும்போது அவர் முதலில் யோசிக்க வேண்டியது கடன் வாங்குவதற்குரிய காரணம் மற்றும் அந்தக் கடனை திருப்பிச் செலுத்துவதற்குரிய வழிமுறைகளைப் பற்றியே. அரசாங்கம் மற்றும் தனியார்துறைகளின் பற்றாக்குறையின் பின்னால் பொருளாதாரம் செல்லாதபோது, அரசாங்கம் கடன்வாங்குவது அதன் நிதி நிலமைகளில் உள்ள தற்காலிக சமநிலையின்மையை ஈடு செய்ய அல்லது எதிர்காலத்தில் அதிக வருவாயைப் பெருக்குவதற்காக தேசத்தின் உற்பத்தித் திறன்களை அதிகரிப்பதற்கான குறிப்பிட்ட அபிவிருத்தி திட்டங்களை தொடங்குவதற்காக என்று ஒருவர் எளிதாகச் சொல்லிவிடலாம். அதிக வெளிநாட்டு முதலீட்டை கவருவது, அவரது கம்பெரலிய அபிவிருத்தி திட்டங்கள் போன்றவற்றுக்கு செலவு செய்தல்,வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை குறைத்தல், மற்றும் தனியார் துறைகளுக்கு அதிக ஊக்கத் தொகைளை வழங்குவதன் மூலமும், அதேவேளை துன்பப்படும் ஸ்ரீலங்காவாசிகளின் வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் போன்றவற்றால் நோய்வாய் பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை சுகப்படுத்தி விடலாம் என சமரவீர நம்புகிறார். இது கடின பிரயத்தனத்துக்கு சற்றும் குறைவானதல்ல மற்றும் தனது எண்ணத்தைப் பூர்த்தி செய்வதற்கான தெரிவுகள் உள்நாட்டு அரசியல் யதார்த்தங்கள் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு பொருளாதாரமும் அதன் அரசியல் சூழலில் சுயமாக இயங்க முடியாது.

அமைச்சர் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினை, உலக நாணய நிதியத்தின் கண்காணிப்பாளர்களை திருப்திபடுத்தும் வகையிலான வரி ஒருங்கிணைப்பை அடைவதுதான். செலவினங்களைக் குறைத்து வரிவருவாயை அதிகரிப்பதின் மூலம் இதனை அடைய வேண்டும். உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்காக வெளிநாட்டு முதலீட்டு பாய்ச்சலை அதிகரிப்பது எப்படியாயினும் பலன் தருவதற்கு நடுத்தர மற்றும் நீண்டகாலம் எடுக்கும் ஒரு தெரிவாகும், திட்டமிட்ட செலவினங்கள் தவிர்க்கப்பட முடியாதவையாகும். கேள்வி என்னவென்றால் அவரது அரசாங்கம் இன்னும் ஒரு வருடத்துக்குள்; பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருப்பதினால் வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையை அவர் எப்படிக் குறைக்கப் போகிறார்? குறிப்பாக விரைவிலேயே தேர்தலை எதிர்கொள்ளப் போகும் ஒரு அரசாங்த்துக்கு எந்தச் செலவினங்களைக் குறைப்பது மற்றும் யார் வரிகட்டுவது என்பதைத் தீர்மானிப்பது உணர்வுபூர்வமான ஒரு விடயமாகும். சமயோசித அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு வரப்போகும் வரவு செலவுத் திட்டத்தில் நிச்சயமாக அளவுக்கு மீறிய பொருளாதார பகுத்தறிவு இருக்கும்.

அமைச்சரின் பணியை இன்னும் கடினமாக்கும் வகையில் சிறிசேன, விக்கிரமசிங்கா மீதும் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் அதிகாரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் அவரது ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் மீதும் பழிவாங்கத் தீர்மானித்துள்ளார். அதேசமயம் 2015ல் சிறிசேன பதவியேற்றபோது மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் நடந்தவற்றை விசாரணை செய்ய ஒரு ஆணைக்குழு அமைப்பதாய் பொதுமக்களுக்கு அவர் வழங்கிய வாக்குறுதியை தவிர்த்து, 2015 – 2018 க்கு இடைப்பட்ட காலத்தில் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து ஆராய ஒரு ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்கும் சிறிசேனவின் முடிவு, வேண்டுமென்றே விக்கிரமசிங்காவின் மதிப்பை களங்கப்படுத்தும் ஒரு சூழ்ச்சியாகும். அத்துடன் விக்கிரமசிங்காவின் அரசாங்கத்தின் கவனத்தை சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பனவற்றின் அரசியல் தந்தரோபாயங்களை எதிர்ப்பதில் கவனத்தை திருப்பிவிடும் செயலாகும்.

முன்பு கூறியதைப் போன்று திட்டமிட்ட அரசியல் ஸ்திரமற்ற நிலையினால் மற்றும் விக்கிரமசிங்கா, சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்ஸ போன்ற முக்கிய போட்டியாளர்களின் இடையேயுள்ள அதிகாரத்திற்கான பொறுப்பற்ற போட்டியினால் இங்கு பெரிதும் பாதிக்கப் பட்டிருப்பது நமது பொருளாதாரமே. கோட்டபாய ராஜபக்ஸப் பற்றி இங்கு குறிப்பிடவில்லை தனது முறை வரும்வரைக்கும் அவரும் காத்திருக்கிறார். தற்சமயம் ஒன்றில் சிறிசேனவோ அல்லது மகிந்தவோ பொருளாதாரம் பற்றிக் கலைப்படவில்லை என்றே தெரிகிறது அதேபோலத்தான் அவர்களது கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன என்பனவற்றிடம் எதிர்காலத்தில் நாட்டிற்குத் தேவையான பொருளாதார வரைபடமும் அவர்கள் வசம் கிடையாது.

பொருளாதார வளர்ச்சி விகிதம் கிட்டத்தட்ட 3 விகிதமாக இருக்கும்போது நாடு அதன் கடன் சுமையில் இருந்து உடனடியாகவோ அல்லது நடுத்தர காலப் பகுதியிலோ விடுதலை பெற்றுவிட முடியாது. தற்போதுள்ள உறுதியற்ற அரசியல் யதார்த்த நிலையில் மற்றும் அரசாங்க ஆட்சியில் உள்ள உள்ளாந்த ஊழல் மற்றும் கொடூரவாதம் என்பனவற்றால் அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றால்கூட சாதாரண ஸ்ரீலங்காவாசிக்கு பொருளாதார துயரத்தில் இருந்து எந்தவொரு மீட்சியும் கிடைக்கப் போவதில்லை. மூன்றாவதாக ஒரு மாற்றம் இந்த நாட்டுக்குத் தேவை.

Share:

Author: theneeweb