வெனிசுலாவுக்கு ஆதரவாக குரல் எழுப்புக : பிரதமருக்கு யெச்சூரி கடிதம்…!

வெனிசுலாவில் நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சிக்கு எதிராக, ஒட்டுமொத்த சர்வதேச எதிர்ப்புகளையும் விதிமுறைகளையும் மீறி, அமெரிக்க ஏகாதிபத்தியம் மிகவும் இழிவான முறையில் போட்டி அரசாங்கத்தை உருவாக்க முயற்சி மேற்கொண்டுள்ளது; இதன் மூலமாக வெனிசுலாவின் இறையாண்மையையும், சுதந்திரத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது; மதுரோவை ஆட்சியிலிருந்து அகற்றுவது, முடிந்தால் அவரை படுகொலை செய்வது என்ற கெடு நோக்கத்துடன் அரசியல் கலகத்தை தூண்டிவிட்டுள்ளது.டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இத்தகைய அட்டூழியத்திற்கு ஒட்டுமொத்த உலகமும் கண்டனம் தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

“வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, பொலிவாரிய வெனிசுலா குடியரசின் ஜனாதிபதியாக 2018 மே 20 அன்று நடைபெற்ற தேர்தலில் மீண்டும் பெருவாரியான மக்களின் பேராதரவுடன் ஜனநாயகப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்; இந்த தேர்தல் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெற்றது என்று பல்வேறு நாடுகளிலிருந்து தேர்தலை கண்காணிக்க வந்திருந்த பார்வையாளர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனாலும் கூட ஜனநாயகப்பூர்வமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மதுரோவின் ஆட்சியை கவிழ்ப்பதற்கும் அங்கு மிகப்பெரும் வன்முறை வெறியாட்டத்தை நடத்துவதற்கும் முற்றிலும் இழிவான வேலைகளில் அமெரிக்க ஏகாதிபத்தியம் இறங்கியுள்ளது” என்று அரசியல் தலைமைக்குழு சாடியுள்ளது.

வெனிசுலாவில் நிக்கோலஸ் மதுரோ, 2018 மே மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 67.7சதவீதம் வாக்குகளைப் பெற்று மிகப்பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் மகத்தான வெற்றிபெற்றார். தேர்தலுக்கு முன்பும் பின்பும் மதுரோ ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சி என்ற பெயரில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள் வரலாறு காணாத வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்தையும் செயல்திறனுடன் எதிர்கொண்டது மதுரோ அரசு. இந்நிலையில் 2019 ஜனவரி துவக்கத்தில் மீண்டும் ஜனாதிபதியாக மதுரோ பதவியேற்றார். இந்நிலையில் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக வெனிசுலாவில் வன்முறை வெறியாட்டங்களை தூண்டிவிட்டுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம், ஜனாதிபதித் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டு படுதோல்வி அடைந்த வலதுசாரி பிற்போக்குவாத அமெரிக்க கைக்கூலி அமைப்பின் தலைவரான ஜூவான் குவாய்டோ என்பவரை கலகம் செய்யுமாறு தூண்டிவிட்டுள்ளது.

அவர், வெனிசுலாவின் ஜனாதிபதி நானே என்று திடீரென தன்னைத்தானே நியமித்துக் கொண்டு அறிவித்திருக்கிறார். அடுத்த நிமிடமே அவரை வெனிசுலாவின் ஜனாதிபதியாக அங்கீகரிப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. நிக்கோலஸ் மதுரோ சட்டவிரோதமானவர் என்றும் வெள்ளை மாளிகை, சர்வதேச விதிகள் அனைத்தையும் காலில் போட்டு மிதிக்கும் வகையில் அறிவித்துள்ளது. இதன்மூலம் வெனிசுலாவில் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது.

மதுரோ பதிலடி
இந்நிலையில் டிரம்ப் நிர்வாகத்தின் கொடூரத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக, அமெரிக்காவில் உள்ள வெனிசுலாவின் அனைத்து தூதரகங்களையும் மூடுவதாக ஜனாதிபதி மதுரோ அறிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள வெனிசுலா தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் வெனிசுலாவுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள ராஜீய உறவை மதுரோ துண்டித்துள்ளார். இதன் பொருள் என்னவென்றால், வெனிசுலாவின் இறையாண்மையில் தலையிடும் அமெரிக்காவை வெனிசுலா அங்கீகரிக்கவில்லை என்பதே ஆகும். ஆனால், வெனிசுலாவில் தனது கைக்கூலி ஒருவரை ஜனாதிபதி என்று டிரம்ப் நிர்வாகம் அறிவித்திருப்பதால், வெனிசுலாவின் தூதரகங்களை மூட அனுமதிக்க முடியாது என்றும் அதை மீறி வெனிசுலா தூதர்கள் வெளியேற முயன்றால் விளைவு கடுமையாக இருக்கும் என்றும் டிரம்ப் அரசின் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ மிரட்டல் விடுத்துள்ளார்.இதனிடையே இப்பிரச்சனை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் சனிக்கிழமை எழுப்பப்படுகிறது. பாதுகாப்புக் கவுன்சிலில் அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் சீனாவும் தங்களது தடை அதிகாரத்தை பிரயோகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இத்தகைய அத்துமீறிய ஆக்கிரமிப்பை வன்மையாகக் கண்டித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தொடரும் கொடூரங்களுக்கு எதிராக ஜனநாயகத்தையும் அமைதியையும் விரும்பும் வெனிசுலா மக்கள் நடத்தி வரும் மிகப்பெரும் போராட்டத்திற்கு முழு ஆதரவை தெரிவித்துள்ளது. அமைதியை நேசிக்கும் ஒட்டுமொத்த உலக மக்களும் வெனிசுலாவுக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மோடிக்கு சீத்தாராம் யெச்சூரி கடிதம்
மேலும், வெனிசுலாவுக்கு ஆதரவாக இந்தியா குரல் எழுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கடிதம் எழுதியுள்ளார்.
ஜனநாயகத்தையும், இறையாண்மையையும் என்றென்றும் உயர்த்திப் பிடிக்கும் விதத்தில் இந்தியா தனது உறுதிப்பாட்டை உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும், தாங்கள் தேர்ந்தெடுத்த தங்களது சொந்த அரசாங்கத்தை பாதுகாக்கும் உரிமை வெனிசுலா மக்களுக்கு உண்டு என உலக அரங்கில் இந்திய அரசு உரத்து முழங்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் சீத்தாராம் யெச்சூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share:

Author: theneeweb