கண்டல்காட்டில் ஏற்பட்ட முறுகலில் 12 படையினர் காயம் –

திருகோணமலை கிண்ணியா, கண்டல்காடு பகுதியில் மஹாவலி ஆற்றுப் படுகையில் சட்டவிரோதமாக மணல் அகழ்கின்றவர்களுக்கும், பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையில் இன்று முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.

குறித்த பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுகின்றவர்களை கைது செய்வதற்காக கடற்படையினரும், விசேட அதிரடிப்படையினரும் சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுகின்றவர்களும், பிரதேசவாசிகளும், படையினர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாக கடற்படை ஊடகப்பேச்சாளர் லெஃபட்டினன் கமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் படையினர் கூட்டத்தை எச்சரிப்பதற்காக வான்நோக்கி துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

எனினும் பிரதேச வாசிகளும் மணல் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றவர்களும், படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் 12 படைத்தரப்பினர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 4 பேர் திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது ஆற்றில் பாய்ந்து தப்பிச் செல்ல முற்பட்டதாக கூறப்படும் 3 பேரில் ஒருவர் உயிரிழந்தார்.

கண்டல்காடு பகுதியைச் சேர்ந்த 22 வயனதான நபர் ஒருவரே உயிரிழந்தார்.

ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், மற்றுமொருவர் காணாமல் போயுள்ளார்.

அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த பகுதியில் நேற்றும் இன்றும் மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்புகளின் போது,7 பேர் சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Author: theneeweb