வடக்கின் நீர்வள மேம்பாடும் அவை எதிர்நோக்கும் பிரச்சனைகளும்

பேராசிரியர்.இரா.சிவசந்திரன்..—-

 

‘சமாதானத்திற்கான கனேடியர்கள் மற்றும் சம உரிமை இயக்கம்’ எனும் கனடியத் தமிழருக்கான அமைப்பின் ஏற்பாட்டில் ‘கனடா ஸ்காபரோ சிவிக் சென்றரில் வாழ்வும் அரசியலும்’எனும் தலைப்பில் இடம்பெற்ற கருத்திரங்கில் பேராசிரியர் இரா.சிவசந்திரன் ஆற்றிய உரை கட்டுரை வடிவில் இங்கு பிரசுரமாகின்றது.

 

ஈழத்தமிழர் தாயகம் வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பிரதேசமாகும். இது 17651 சதுர கிலோ மீற்றரை உள்ளடக்கியுள்ள பிரதேசமெனலாம் (வடக்கு 8290 ச.கி.மீற்றர் கிழக்கு 93612 ச.கி.மீற்றர்). 2015ஆம் ஆண்டு குடித்தொகை மதிப்பீட்டின் அடிப்படையில் இங்கு 27 இலட்சம் மக்கள் வாழ்கின்றார்கள். (வடக்கு 11 இல– கிழக்கு 16 இல)
தமிழர் தாயகப் பிரதேசத்தில் ஒப்பீட்டளவில் கிழக்கு மாகாணம் நீர்வளம் கொண்ட பகுதியாக விளங்குவதால், வடக்கு மாகாணத்தின் நீர்வள மேம்பாடு பற்றியும், அவை எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றியும் இக்கட்டுரை ஆய்வு செய்கின்றது.

இலங்கையை 75’’ மழைவீழ்ச்சிக் கோட்டை அடிப்படையாக்கொண்டுஈரவலயம், வரண்ட வலயம், என காலநிலை அடிப்படையில் வகைப்படுத்துவர். வரண்ட வலயத்தினுள் அடங்கும் வட மாகாணத்தின் சராசரி மழை வீழ்ச்சி 50’’ ஆகும். (1250 மி.மீ) இங்கு ஒக்டோபர் மாதம் முதல் பெப்பரவரி மாதம் வரை வடகீழ் பருவக்காற்றினாலும் சூறாவளி நடவடிக்கைகளினால் 70 வீதமான மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறுகிறது. கிடைக்கப்பெறும் மழைவீழ்ச்சியின் 20 -25 வீதம் கடலில் கலக்கின்றது. 40 – 45 வீதம் ஆவியாக்கத்திற்கு உட்படுகின்றது. மிகுதியே மக்களின் குடிநீர் தேவைக்காகவும், விவசாய செய்கைக்காகவும் பயன்படுத்தப்படுகின்றதென நுண்ணாய்வுகள் தெரிவிக்கின்றன. வடக்கின் நீர்வளத்தை நாம் இரு பிரிவாகப் பிரித்து நோக்கலாம்.
1. மேற்பரப்பு நீர்வளம் (ளரசகயஉந றயவநச சநளழரசஉநள) இதனைப் பொதுவாக வன்னிப் பிரதேசத்திற்குரிய நீர்வளப் பயன்பாடு என வகைப்படுத்தப்படலாம்.

2. தரைக்கீழ் நீர் வளம் (ரனெநசபசழரனெ றயவநச சநளழரசநஉநள) இதனை யாழ்ப்பாண குடாநாட்டிற்குரிய நீர் வளப்பயன்பாடாக கொள்ளலாம்.
இலங்கையின் வடக்கே புத்தளம் – பரந்தன் – முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களை இணைக்கும் கோட்டிற்கு வடக்காக உள்ள பிரதேசங்களும், யாழ்குடாநாடு முழுமையாக மயோசீன் காலச்சுண்ணாம்புப் பாறையை அடிப்படையாகக் கொண்ட பகுதிகளாகும். வன்னிப் பிரதேசத்தில் சுண்ணக்கற்பாறைகள் ஆழமாகவும், யாழ் குடாநாட்டில் ஆழமற்று மேற்பரப்புக்களை ஒட்டியும் காணப்படுகின்றன. மயோசீன் பாறைகள் தரைக்கீழ் நீரை உள்வாங்கிச் சேமித்து வைக்கும் ஆற்றல் கொண்டவை.

வன்னிப் பிரதேச மேற்பரப்பு நீர்வளம்

இலங்கையில் மொத்தமாக 102 ஆறுகள் உள்ளன. இவற்றுள் 61 ஆறுகள் வட கீழ் மாகாணத்தில் காணப்படுகின்றன. வடபகுதியில் 26 ஆறுகள் உள. இவற்றுள் மகாவலி கங்கையைத்தவிர ஏனையவை மாரிகாலத்தில் ஊற்றெடுக்கும் பருவகால ஆறுகளே.மேற்படி ஆறுகள் வரலாற்றுகாலம் முதலாக மனிதனால் உருவாக்கப்பட்ட பல குளங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளன.
பருவகாலத்தில் பெறப்படும் நீரால் இவை நிரப்பப்பட்டு மழையற்ற காலங்களில் விவசாயத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மகாவம்சம் கூறும் விஜயன், குவேனி கதையில் ‘குவேனி மாந்தையில் அமைந்திருந்த குளக்கட்டில் (கட்டுக்கரை குளம்) நூல் நூற்றுக் கொண்டிருந்தாள்’ என குறிப்பிடப்படுகின்றது. கிறிஸ்து காலத்திற்கு முன்பாகவே நீர் நாகரிகம் இப்பகுதிகளில் இருந்து வந்துள்ளதை இவ்வரலாற்றுக் குறிப்பு மூலம் அறிகின்றோம். ஆதிகால உலக நாகரிகங்கள் யாவும் நீர் நாகரிகங்களே. (ர்லுசுழு – ஊஐஏஐடுஐணுயுவுஐழுN)
பொதுவாக வன்னிப் பிரதேசத்தில் காணப்படும் குளங்களை 3 பிரிவாகப் பிரிக்கலாம்.

1. சிறுகுளங்கள் (200 ஏக்கர். பரப்புக்கு குறைந்தமை)
2. நடுத்தரக் குளங்கள் (200 – 1500 ஏக்கர் வரையானவை)
3. பாரிய குளங்கள் (1500 ஏக்கருக்கு மேற்பட்டவை)

வன்னிப் பிரதேச நிலத்தோற்றம் அலை வடிவாகக் காணப்படுவதால் ஆற்று ஓட்டம் தரையமைப்புக்கு ஏற்ப அமைவதோடு இலகுவாக குளங்களை உருவாக்கக் கூடிய சாதகமான தன்மை நிலவுகின்றது. மேலும் வடிநிலங்களை ஒன்றுடன் ஒன்றை இணைக்கக்கூடிய தன்மையையும் காணலாம். இங்கு 22 சிறுகுளங்கள் காணப்படுகின்றன. மேலும் 10 பாரிய குளங்களை இங்கு அடையாளப்படுத்தலாம்.

உதாரணம்:-

பறங்கியாறு வவுனியாவில் பிரதேசத்தில் ஊற்றெடுத்து மன்னார் இலுப்பைக்கடவை குளத்தை நிரப்புகின்றது. இரணைமடுக்குளம் முல்லைத்தீவு மாவட்ட எல்லைக்குள் அமைந்து கிளிநொச்சிப் பிரதேசத்தை வளப்படுத்துகின்றது. கனகராயன் ஆற்றை மறித்துக்கட்டி இரணைமடுக் குளம் உருவாக்கப்பட்டது. கனகராயன் ஆற்றின் கழிமுகம் ஆனையிறவுக்கடலில் கலக்கின்றது.

இரணைமடுக்குள அபிவிருத்தியும், நீர்வழங்கலும் தற்போது அரசியல் பிரச்சனையாக மாற்றப்பட்டு அதன் பூரண அபிவிருத்தி தடுக்கப்பட்டுள்ளது. ஐ.நாவின் அபிவிருத்தித் திட்டதித்தின் படி இரணைமடு அணையை 10 அடி உயர்த்திப் பின்னர் வன்னி விவசாய நிலங்களிற்கு பாசனத்தை அளிப்பதோடு, பூநகரி, யாழ். குடாநாட்டின் சில பகுதிகளுக்கு குடிநீர் வசதி செய்யும் நோக்கம் முன்வைக்கப்பட்டு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இதனால் யாழ்.குடாநாட்டின் நகரப்பகுதிகளுக்கும், தீவுப்பகுதிகளுக்கும், குடிநீர் வழங்கவும் நகரப்பகுதி திண்மக்கழிவு அகற்றும் செய்முறையை கொண்டுவரவும் திட்டமிடப்பட்டிருந்தது. இதுவே அரசியல் மயப்படுத்தப்பட்டு முழுமை பெறாத நிலை நீடித்து வருகின்றது.

யாழ்.குடாநாட்டின் தரைக்கீழ் நீர்வளமேம்பாடு

வடமாகாணத்தில் தற்போது வாழ்கின்ற (2015) 11 இலட்சம் மக்களில் 75 வீதத்தினர் யாழ். குடாநாட்டிலேயே வாழ்கின்றனர். 75வீத நிலப்பரப்பைக் கொண்ட வன்னியில் 25 வீதத்தினரே வாழ்கின்றனர். யாழ் குடாநாடு பழைமையான நாகரிகத்தை கொண்ட பிரதேசமாகும். இதன் ஆரம்ப கால நாகரிக வளர்ச்சிக்கு தரைக்கீழ் நீர்வளமே அடிப்படையாக அமைந்ததெனலாம்.
மழைநீர் சுண்ணக்கற்பாறை ஊடாகக் கசிந்து தரைக்கீழ் நீராகக் சேகரிக்கப்படுகின்றது. மக்கள் 100’– 120’ ஆழம் வரை கிணறு தோண்டி அந்த நீரை குடிநீராகவும், விவசாயச் செய்கைக்காகவும், பயன்படுத்தி வருகின்றனர். யாழ்குடாநாட்டு தரைகீழ் நீரை மேற்பரப்பு தரைகீழ் நீர் எனவும் ஆழமாகச் சேமிக்கப்படும் தரைகீழ் நீர் எனவும் அடையாளம் காணலாம்.
நிலாவரைக் கிணறு, குரும்பசிட்டி பேய்க்கிணறு போன்றன ஆழமாக நீரைச் சேமித்து குகைவழியூடாக நகர்ந்து செல்லும் நீராக உள்ளது. ஏறத்தாழ 100’ அடி ஆழத்தில் பெறப்படும் நீரே அதிக பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படுவதோடு பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளது. இப்பிரச்சனைகளுக்கு விரைவாக தீர்வு காண்பது எதிர்கால மனித வாழ்விற்கும், நாகரிக வளர்ச்சிக்கும்,கைத்தொழில் நகராக்க செயற்பாடுகளுக்கும், இன்றியமையாததாக அமைந்துள்ளது.

பல்வேறுபட்ட நிபுணர்கள், கல்வியாளர்கள், இதுபற்றி அக்கறையுடன் சிந்தித்து செயலாற்றி வருகின்றனர். முன்னெப்போதும் இல்லாத வகையில் நீர்வள அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறப்பான பொறியியல், முகாமைத்துவ வழிமுறைகளையே நீர்வள மேம்பாடு வேண்டிநிற்கின்றது. யாழ் குடாநாட்டு நீர்வளம் தற்போது முக்கியமாக 3 பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது.

• உவர்த்தன்மையடைதல்
• நீர்மாசடைதல் (மலசலகலப்பு)
• விவசாய இரசாயனப் பாவனையால் நீர் நஞ்சாகின்ற தன்மையும் அதிகரித்து வருகின்றது.

யாழ் குடாநாட்டின் தோட்டச் செய்கை குடிநீர் தேவை என்பன அதிகரித்து வந்த காரணத்தினால் அதிகளவான கிணறு நீர்;உவர்தன்மையாக மாறுவதற்குநீர் பெறுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. மேலும் கட்டட நிர்மாணத் தேவைகளுக்காக பிரதேசங்கள் தோறும் காணப்பட்ட மணல்மண் வகைதொகையின்றி அகற்றப்பட்டதால் மழைநீரை உறிஞ்சி வைத்திருக்கும் தன்மையை மேற்பரப்புத் தரை இழந்துள்ளது.

உதாரணம் :-
வேலணை, மண்கும்பான், வல்லை மணற்காட்டுப் பகுதிகளில் காணப்பட்ட மண்மேடுகள் அகற்றப்பட்டுவிட்டன. யாழ்.குடாநாட்டில் ஏறத்தாழ 1050 குளங்கள் காணப்பட்டன என்றும் இன்று அவற்றில் அரைவாசியை காணவில்லை எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தோட்டநிலங்களாக, குடியிருப்புப் பகுதிகளாக இவை மாற்றப்பட்டுவிட்டன. இதனால் மழைநீர் நின்று வற்றி தழைகீழ் மீள்நிரப்பும் நிலை தற்போது குறைந்துள்ளது. யாழ். குடாநாட்டில் உள்ள குளங்களை தூர்வாரி மழைநீரைத் தேக்கி மீள்நிரப்பியாக அவற்றை மீண்டும் உருவாக்க வேண்டிய தேவை தற்போது அவசியமாக உள்ளது.
யாழ். குடாநாடு தற்போது வேகமாக நகராக்க வளர்ச்சியை எய்துகின்றது. குடியிருப்புகள் பெருகுகின்றன. திண்மக் கழிவு அகற்றல் முறை இதுவரை மேம்பாடு அடையாமையால் அவை நிலத்திற்குள்ளேயே விடப்படுகின்றன. இவை தரைகீழ் நீருடன் கலப்பதால் குடிதண்ணீர் வழங்கும் கிணறுகளில் மலக்கழிவு உட்பட திண்மக்கழிவுகள் கலக்கின்றன. யாழ். குடாநாட்டில் முக்கியமாக நகரங்களில் காணப்படும் குடிநீர் கிணறுகளில் ‘இகோலி’ (மலசலக் கழிவால்) எனப்படும் கழிவுகள் கலந்து குடிநீர் மாசடைந்துள்ளது. கிராமப்புறங்களில் தோட்டச் செய்கைக்கு அதிகளவு விவசாய இரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதால் அப்பகுதிகளில் இரசாயன நஞ்சுத்தன்மை கலந்து குடிநீர் மாசடைந்துள்ள தன்மை அதிகரித்துள்ளது.
யாழ்.குடாநாட்டின் நீர்வளம் எதிர்நோக்கும் மேற்படி பிரச்சனைகள் நிபுணத்துவ ஆலோசனைகள் பெற்று நிவர்த்தி செய்யப்பட வேண்டும். இதற்கான தீர்வுத் திட்டங்களை முன்வைக்கும் நிபுணர்கள் பல வழிகளைக் கூறினாலும் முக்கியமாக இரண்டு பற்றி இங்கு குறிப்பிடுதல் நன்று.

• யாழ். குடாநாட்டின் கடல் நீர் ஏரித்திட்டம்
• மகாவலிகங்கை திசை திருப்பத்துடன் இணைந்த அபிவிருத்தி

யாழ்.குடாநாட்டின் எந்த இடத்தில் இருந்தும் 7 மைல் தூரத்தில் கடல் காணப்படுகின்றது. இதனாலே உவர்நீர் தரைகீழ் நீருடன் கலக்கும் நிலை அதிகமாகவுள்ளது. குடாநாட்டின் தரைகீழ் நீரை மேம்படுத்துவதற்கு குடாநாட்டிற்கான கடல் நீர் ஏரித்திட்டம் என்ற பாரிய திட்டம் 1922 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டது. குடாநாட்டில் 13 கடல் நீர் ஏரிகள் அடையாளப்படுத்தப்பட்டாலும் 3 பாரிய ஏரித்திட்டங்கள் கவனங்கொள்ளத்தக்கன.

• ஆனையிறவு மேற்கு, கிழக்கு கடல்நீர் ஏரி
• தொண்டமனாறு கடல்நீர் ஏரி
• உப்பாறு (நாவற்குழி கைதடி) கடல்நீர் ஏரி

இவற்றினை நன்னீர் ஏரிகளாக மாற்ற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தை ஆறுமுகத்திட்டம், யாழ்ப்பாணத்திற்கான ஆறு எனவும் தற்போது இதனை ஆய்வு செய்வோர்வழங்குவார். ஆனையிறவுக்கடல் நீரேரித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கிழக்குக்கடல் உள்ளேவராது. தடுப்பணை உருவாக்கி பின் கனகராயன் ஆற்றில் இருந்து வரும் நன்னீரை இதனுள் தேக்கி நன்னீர் ஏரியாக மாற்றுதல் இத்திட்டத்தின் முதற்படியாக இருந்தது. தடுப்பணைகள் சரியாக பராமரிக்கப்படாததால் இத்திட்டம் தோல்வியில் முடிந்தது. இது போன்றே தொண்டமனாறு நன்னீர் ஏரித்திட்டமும் கடல்நீரை மீனவர்கள் திறந்து நன்னீர் ஏரியில்;விட்ட காரணத்தாலும் சரியான முகாமைத்துவம் இன்மையாலும் தோல்வியை தழுவிற்று.
உண்மையில் இத்திட்டம் முறையாக அமுல்படுத்தப்பட்டு நன்னீரேரிகள் உருவாக்கப்பட்டால் யாழ். குடாநாட்டின் பாரிய நன்னீர் மீள்நிரப்பியாக இவை மாற்றமடைவதோடு இப்பகுதிகளில் உவர்தன்மைநீக்கி நன்னீர் தேங்கி நின்றால் இவற்றின் கரையோரமுள்ள 6000 ஏக்கர் அளவிலான நிலம் விவசாய நிலமாக மாற்றமடையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், யாழ். குடாநாட்டு தரைகீழ் நீர் அபிவிருத்திக்கான மீள் நிரப்பியாக இந்நன்னீர் ஏரிகள் விளங்கி, குடாநாட்டின் நீர்வளம் மேன்மைபெறும். இத்திட்டம் பற்றிய விழிப்புணர்வும், மறுசிந்தனையும், தற்போது இப்பிரதேச அபிவிருத்தியில் அக்கறை கொண்டோரிடம் தோன்றி பல நடவடிக்கைகள் அண்மைக்காலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

1 970 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மகாவலி கங்கை விருத்தித் திட்டம் இலங்கையின் வரண்ட பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்காக உருவாக்கப்பட்ட திட்டமாகும். இது வன்னிப் பிரதேசத்தையும், அபிவிருத்திக்கு உட்படுத்தும் என கூறப்பட்டது. வரண்ட பிரதேசமான பொலனறுவை போன்ற பகுதிக்கு நீரைக் கொண்டு வந்து அங்கு ஏற்கனவே உள்ள குளங்களில் நீரை நிரப்பி விவசாயச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கத்தை உடைய இத்திட்டம் கனகராயன் ஆற்று நீரேற்று பரப்புக்குள் விடப்பட்டு அதன் ஊடாக இரணைமடுக் குளத்தையும், அயலில் உள்ள குளங்களையும், நிரப்பி கனகராயன் ஆற்றில் கழிமுகம் ஊடாக ஆனையிறவுக் கடல் நீரேரியை நன்னீர் கொண்டு நிரப்பும் என திட்டவரைவு கூறுகின்றது.

இது பின்னர் 1988 துரித மகாவலி அபிவிருத்தித்திட்டமாக சில மாற்றங்களுக்கு உட்பட்டு, முல்லைத்தீவுப் பகுதியை ‘டு’ வலய அபிவிருத்தி என மீள்திருத்தம் உருவாக்கப்பட்டது. வடக்கே வாழும் பெரும்பான்மையான

தமிழர்கள்இத்திட்டத்தின் ஊடாக சிங்கள மக்கள், குடியேற்றப்படுவார்கள் என அஞ்சுகின்றார்கள். அதிகார சபை என கூறும் போது உள்ளுர் சட்டங்கள் செல்லுபடியற்றுப் போகும் எனவும் பிரதேச இனவிகிதாசாரம் பேணப்படாமல், தேசிய இன விகிதாசாரம் பேணப்பட்டால் 75 வீதமாகவுள்ள சிங்கள மக்கள் இப்பிரதேசத்தில் குடியேற்றப்படுவார்கள் என தற்போது அரசியல்வாதிகளாலும், சமூக ஆர்வலர்களாலும் எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகின்றது.

1972 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மகாவலி திசைதிருப்பும் திட்டத்தினால் கடந்த 46 ஆண்டுகளாக ஒரு துளிநீரும் வடக்கே வராத நிலையில் நாம் அதற்காக பயந்து கலவரம் அடைதல் தேவையற்றது. ஜேர்மனி, பிரித்தானியா, சுவிடன், கனடா போன்ற நாடுகள் மகாவலித்திட்டத்திற்கு உதவுகின்றன. சிறுபான்மை மக்கள் பாதிப்படைவார்கள் என்ற குரலை சர்வதேசம் வரை ஓங்கி ஒலித்தால் எமது நியாயமான கோரிக்கைகள் கவனத்தில் எடுக்கப்படும் சாத்தியம் உள்ளது.
மேலும், மாகாண சபை, உள்ளுராட்சி சபைகள், பிரதேச இனவிகிதாசாரப்படியே குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என உள்ளுராட்சி சட்டம், சரத்துக்கள் மூலம் வலியுறுத்த முடியும். பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக தமிழர்களிடையே நிபுணர்களும், புத்திஜீவிகளும், கல்வியாளர்களும், இணைந்து எமக்கான சாதக, பாதக நிலைகளை ஆய்வு செய்து அரசியல் ரீதியாக வலியுறுத்தி நிவாரணம் பெறுவதே புத்திசாலித்தனமாகும். அபிவிருத்திகளை எமக்கான அபிவிருத்தியாக மாற்றி நிலைபேறுடைய அபிவிருத்தியாக்கி பயன்பெறுவதே எமது பிரதேசத்திற்கும், மக்களிற்கும், நாம் ஆற்றும் பணியாகும்.

Share:

Author: theneeweb