வெனிசூலா அதிபர் மடூரோ: நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டி நடத்த விருப்பம்

எதிர்க்கட்சியினருடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: வெனிசூலா அதிபர் மடூரோ: நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டி நடத்த விருப்பம்

வெனிசூலாவில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க, எதிர்க்கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் மடூரோ தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஷியாவின் ஆர்ஐஏ நோவோஸ்டி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளதாவது:வெனிசூலாவின் நன்மைக்காக, எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருக்கிறேன்.
மேலும், நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தினால், அது மிகச் சிறந்த நடவடிக்கையாக இருக்கும். அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கு அது சாதகமான சூழலை அமைக்கும்.

எனினும், அதிபர் தேர்தலை உடனடியாக நடத்த மாட்டேன். வெனிசூலாவில் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஆதிக்க சக்திகள் விரும்பினால், அதற்காக அவை 2025-ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.
அதுவரை, அரசியல் சாசனத்தின் அடிப்படையில் எனது பணிகளைச் செய்வேன். முப்படைகளின் தலைவராக நான் தொடர்ந்து பொறுப்பு வகிக்கிறேன்.
எனக்கு ஆதரவு அளித்து வருவதன் மூலம், நீதி, விசுவாசம், ஒழுக்கம் என்றால் என்ன என்பதை வெனிசூலாவின் பாதுகாப்புப் படைகள் உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளன.

என்னை படுகொலை செய்ய வேண்டும் என்று கொலம்பியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், கொலம்பியா அதிபர் இவான் டூகேவும்தான் பொறுப்பாவார்கள்.

இருந்தாலும், நான் மிகவும் அருமையான பாதுகாப்புக் கட்டமைப்பின் கீழ் உள்ளதால் என் உயிருக்கு ஆபத்து ஏதும் நேரிடாது என்று மடூரோ நம்பிக்கை தெரிவித்தார்.

வெனிசூலாவில், கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் நிக்கோலஸ் மடூரோ தலைமையிலான ஆட்சியில்  பொருளாதாரச் சீர்குலைவு ஏற்பட்டுள்ளதாக பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது. இதன் காரணமாக, 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது.
இந்தச் சூழலில், நாடாளுமன்றத்துக்கு ஆட்சி அதிகாரத்தைத் தர மறுத்த மடூரோ, அதை விட அதிக அதிகாரம் கொண்ட அரசியல் சாசனப் பேரவையை 2017-ஆம் ஆண்டு அமைத்தார்.

இந்த நிலையில், வெனிசூலாவின் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது. சர்ச்சைக்குரிய அந்தத் தேர்தலில் மடூரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்த நிலையில், வெனிசூலா அதிபராக நிக்கோலஸ் மடூரோ இந்த மாதம் 10-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஏற்பட்ட ஆர்ப்பாட்டங்களில் பலர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், வெனிசூலா நாடாளுமன்றத் தலைவராக பொறுப்பு வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவர்  ஜுவான் குவாய்டோ, நாட்டின் இடைக்கால அதிபராக தம்மை கடந்த வாரம் அறிவித்துக் கொண்டார். அவர் அவ்வாறு அறிவித்த சில நிமிடங்களிலேயே, அவரை வெனிசூலாவின் இடைக்கால அதிபராக அமெரிக்கா அங்கீகரித்தது.
மேலும், பிரேஸில், கொலம்பியா, சிலி, பெரு, ஆர்ஜெண்டீனா உள்ளிட்ட பிராந்திய நாடுகளும் ஜுவான் குவாய்டோவை அங்கீகரித்தன.
எனினும், இதற்கு ரஷியா, சீனா, துருக்கி, கியூபா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்தச் சூழலில், எதிர்க்கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக தற்போது நிக்கோலஸ் மடூரோ தெரிவித்துள்ளார்

.
ஜுவான் குவாய்டோவுக்கு பயணத் தடை


வெனிசூலாவின் இடைக்கால அதிபராக தம்மை அறிவித்துக் கொண்டுள்ள ஜுவான் குவாய்டோ, வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வதற்கு அந்த நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் காரணமாக ஜுவான் குவாய்டோ மீது குற்றவியல் வழக்கு தொடரப்படும் என்று அரசு தெரிவித்துள்ள நிலையில், உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதுதவிர, குவாய்டோவின் சொத்துக்களை முடக்கவும் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. குவாய்டோவுக்கு மடூரோ தலைமையிலான அரசு ஆபத்தை ஏற்படுத்தினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டன் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

 

Share:

Author: theneeweb