ஒப்பந்தம் இல்லாத பிரெக்ஸிட்: பிரிட்டன் நாடாளுமன்றம் நிராகரிப்பு

பிரெக்ஸிட்டுக்குப் பிறகும் பிரிட்டனுக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகள் சிறப்பு அந்தஸ்து வழங்கும் எந்த ஒப்பந்தமும் இல்லாமல், அந்த அமைப்பிலிருந்து விலகும் யோசனையை பிரிட்டன் நாடாளுமன்றம் புதன்கிழமை நிராகரித்தது.
மேலும், ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் திருத்தம் செய்வது குறித்து ஐரோப்பிய யூனியனுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள பிரதமர் தெரசா மே-வுக்கு எம்.பி.க்கள் ஆதரவு அளித்தனர்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:28 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிந்த பிறகு, எஞ்சிய 27 நாடுகளுக்கும், பிரிட்டனுக்கும் இடையிலான உறவு குறித்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஐரோப்பிய யூனியனுக்கும், தெரசா மே தலைமையிலான பிரிட்டன் அரசுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தத்தின் சில அம்சங்கள் பிரிட்டனின் நலனுக்கு உகந்ததாக இல்லை எனக் கூறி, அந்த ஒப்பந்தத்தை நாடாளுமன்றம் நிராகரித்தது.

அதையடுத்து, ஒப்பந்தத்தின் சர்ச்சைக்குரிய பகுதிகளில் மாற்றம் செய்ய ஐரோப்பிய யூனியனுடன் தெரசா மே பேச்சுவார்த்தை நடத்தினார்.
எனினும், அந்த ஒப்பந்தமே இறுதியானது என்று ஐரோப்பிய யூனியன் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.

இதையடுத்து, பிரெக்ஸிட்டுக்குப் பிறகும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் சிறப்பு சலுகைகளுடன் கூடிய உறவைத் தொடர்வதற்கான எந்த ஒப்பந்தம் இல்லாமல் அந்த அமைப்பிலிருந்து பிரிட்டன் பிரிய நேரிடும் என்று தெரசா மே தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில், ஐரோப்பிய யூனியனுடன் ஒப்பந்தம் இல்லாமலே அந்த அமைப்பிலிருந்து வெளியேறுவது தொடர்பான தீர்மானம், பிரிட்டன் நாடாளுமன்றத்தின் கீழவையில் செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டது.
அந்தத் தீர்மானத்துக்கு  ஆதரவாக 310 வாக்குகளும், எதிராக 318 வாக்குகளும் பதிவாகின. அதையடுத்து, ஒப்பந்தம் இல்லாத பிரெக்ஸிட் தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

பிரெக்ஸிட் நடவடிக்கைகளை இந்தத் தீர்மானம் சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தாது. எனினும், இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் கருத்தை இது வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தத் தீர்மானத்தைத் தொடர்ந்து, பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள, சர்ச்சைக்குரிய அயர்லாந்து எல்லைத் தொடர்பு குறித்த அம்சத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து ஐரோப்பிய யூனியனுடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மீண்டும் விவாதிக்க வேண்டும் என்ற தீர்மானம் கீழவையில் கொண்டு வரப்பட்டது.அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 317 வாக்குககளும், எதிராக 301 வாக்குகளும் பதிவாகின. அதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய யூனியன் தலைவர்களுடன் தெரசா மே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரசா மே கூறுகையில், நாடாளுமன்றத் தீர்மானத்தை ஏற்று ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகத் தெரிவித்தார்.

வடக்கு அயர்லாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கிடையிலான எல்லை பிரெக்ஸிட்டுக்குப் பிறகு மூடப்படுவதைத் தடுக்கவும், அதே நேரம் திறந்த எல்லை குறித்து பிரிட்டன் எம்.பி.க்களின் கவலையைப் போக்கும் வகையில் அதுதொடர்பான பிரெக்ஸிட் ஒப்பந்த அம்சங்களில் சில மாற்றங்களைக் கொண்டு வரவும் யூனியன் தலைவர்களுடன் விவாதிக்கப்போவதாக அவர் கூறினார்.

ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த 28 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனில், கடந்த 1973-ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் அங்கம் வகித்து வருகிறது.
இந்த நிலையில், அந்த அமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பொது வாக்கெடுப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது.

அந்த வாக்கெடுப்பில், பெரும்பாலான வாக்காளர்கள் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனிலிருந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியேற பிரிட்டன் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, வெளியேற்றத்துக்குப் பிறகு பிரிட்டனும், ஐரோப்பிய யூனியனும் பின்பற்ற வேண்டிய வர்த்தக விதிமுறைகள் குறித்த ஒப்பந்தத்தை இரு தரப்பினரும் மேற்கொண்டனர்.

அந்த ஒப்பந்தத்தில், பிரிட்டனின் அங்கமாகத் திகழும் வடக்கு அயர்லாந்துக்கும், சுதந்திர நாடான அயர்லாந்துக்கும் இடையே பிரெக்ஸிட்டுப் பிறகும் தாராள வர்த்தகம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டனின் பிற பகுதிகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான எல்லை சர்வதேச எல்லையாக மாறப்போகும் நிலையில், வடக்கு அயர்லாந்துக்கும், அயர்லாந்துக்கும் இடையிலான எல்லை மட்டும் தாராள வர்த்தகத்துக்கு திறந்துவிடப்படுவது பிரிட்டன் எம்.பி.க்களை கவலையடையச் செய்துள்ளது.

ஏற்கெனவே, வடக்கு அயர்லாந்துக்கு சுதந்திரம் அளித்து அயர்லாந்து நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்று ஒரு சாரார் வலியுறுத்தி வரும் நிலையில், எல்லைகளைத் திறந்துவிடுவது பிரிட்டனின் இறையாண்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தெரசா மே அமைச்சரவையைச் சேர்ந்த 7 அமைச்சர்கள் பதவி விலகினர். நாடாளுமன்றமும் அந்த ஒப்பந்தத்தை அண்மையில் நிராகரித்தது.இந்தச் சூழலில், ஒப்பந்தமே இல்லாத பிரெக்ஸிட்டும் நாடாளுமன்றம் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளதையடுத்து, பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்வதற்கான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கப்போவதாக பிரதமர் தெரசா மே அறிவித்துள்ளார்.

பிரெக்ஸிட் ஒப்பந்தம் மட்டுமே மிகச் சிறந்த தீர்வு:

பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய ஐரோப்பிய யூனியனுடான உறவு குறித்து பிரிட்டன் தற்போது செய்துகொண்டுள்ள ஒப்பந்தம்தான், அமைப்பிலிருந்து அந்த நாடு விலகிய பிறகு எழக்கூடிய அனைத்து பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு என்று ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீக்கோ மாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், அயர்லாந்து தொடர்பான ஒப்பந்த அம்சத்தில் பிரிட்டன் என்ன மாற்றத்தைக் கொண்டு வரவிருக்கிறது என்பது தெரியவில்லை; இருந்தாலும், இந்த விவகாரத்தில் அயர்லாந்து தனிமைப்படுத்தப்பட நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றார்.

Share:

Author: theneeweb