யாழ் குடாநாடு: குடிநீர் நெருக்கடிகள்

–          கருணாகரன்—

“யாழ்ப்பாணத்தில் எங்கே நீங்கள் பயணம் செய்தாலும் இரண்டு விசயங்களைக் கவனிக்கலாம். ஒன்று கோயில்கள் கட்டப்படுவதை. மற்றது வீதியோரங்களை அகழ்ந்து  குடிநீருக்கான குழாய்களைப் பொருத்திக் கொண்டிருப்பதை. ஏ9 வீதியில் யாழ்ப்பாணத்திலிருந்து புதுக்காட்டுச் சந்தி வரையில் பெரிய குழாய்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. தீவுப் பகுதி, காரைநகர் போன்ற இடங்களிலும் இந்த மாதிரி ஏற்பாடுகள் நடக்கின்றன. இதை விட பளை, நாவற்குழி உள்ளிட்ட முக்கியமான இடங்களில் பெரிய தண்ணீர்த்தாங்கிகளும் அமைக்கப்படுகின்றன.

இதெல்லாம் சரியாக இயங்கத் தொடங்கும்போது யாழ்ப்பாணத்தின் நீண்டகாலத் துயரமான குடிநீர்ப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று சொல்லப்படுகிறது.

நல்லது. நல்லவை நடந்ததால் நல்லதுதானே!

ஆனால், இதெல்லாம் நடந்தேறுமா என்பதே கேள்வி.

பொருத்தப்படுகின்ற குழாய்களில் தண்ணீர் வருமா அல்லது வெறும் காற்றுத்தான் வருமா? என்று கேட்கிறார் மெலிஞ்சிமுனையில் இருக்கும் ஐம்பத்தாறு வயதுடைய சவரிமுத்து எட்வேர்ட் செபஸ்தியாம்பிள்ளை.

மெலிஞ்சிமுனையில் வாழும் மக்கள் வருசத்தில் எட்டு, ஒன்பது மாதங்கள் ஒரு சொட்டுத் தண்ணீருக்காக வீதியோரங்களில் தண்ணீர்க்குடங்களையும் கொள்கலன்களையும் வைத்துவிட்டுக் காத்திருக்கும் பாக்கியவான்கள்.

ஆமாம், நீரின் அருமையை நன்கறிந்தவர்கள்.

“யாழ்ப்பாணத்துக்குக் குடிதண்ணீர் வந்தால் தீவுக்கும் வரும். தீவுக்கு வந்தால் மெலிஞ்சிமுனைக்கும் வரும். மெலிஞ்சிமுனைக்குத் தண்ணீர் வந்தால் அதுதான் சொர்க்கம்.

பிறகு மெலிஞ்சிமுனையையும் மெலிஞ்சிமுனைச் சனங்களையும் கண்டு பிடிக்கேலாது. அந்தளவுக்குச் சொர்க்கத்தின் குடிமக்களாகி விடுவார்கள்.

நீரின்றி அமையாது உலகு என்றிருப்பவர்களுக்கு நீர் வந்தால் அவர்களுடைய உலகு எப்படியிருக்கும்?

பொன்கொழிக்குமல்லவா!

தன்னுடைய ஆயுள் காலத்திற்குள் மெலிஞ்சிமுனையின் தண்ணீர்ப்பிரச்சினை தீர வேணும் என்பதே செபஸ்தியான்பிள்ளையின் ஆசை.

தண்ணீர் என்ற சொல்லைப் பேசும்போதே அவருடைய முகத்தில் மலர்ந்து குளிரும்.

செபஸ்தியானோடு பேசிக் கொண்டிருந்தபோது அவர் எதேச்சையாகச் சில கேள்விகளைக் கேட்டார். அவருடைய கேள்விகளில் சிலவற்றை கீழே நிரற்படுத்துகிறேன்.

ஆனால், இந்தக் கேள்விகளை நாம் எதேச்சையானவை என்று எடுத்துக் கொள்ள முடியாது. இவை செபஸ்தியானுடைய அடிமனதின் ஆழத்திலிருந்து எழுந்து வந்தவை.

ந்தக் கேள்விகள் ஏதோ தனியொரு செபஸ்தியாம்பிள்ளையினுடையவை மட்டுமல்ல. செபஸ்தியானைப்போன்றிருக்கும் பல லட்சம் மக்களின் அடிமனதிலுள்ளவை. சிலர் இதைப் பகிரங்கமாகக் கேட்கிறார்கள். பலரும் எப்பிடி இதைக் கேள்விகளாக்குவது என்று தெரியாத நிலையில் உறைந்து போயிருக்கின்றனர். ஆனால், இந்த உறை நிலை நீடிக்காது. நிச்சயமாக ஒரு நாள் கொதிப்பு ஏற்படும்.

இதோ செபஸ்தியானின் கேள்விகள்.

1.   ஏற்கனவே சொன்னதைப்போல இரணைமடுக்குளத்திலிருந்து குடிநீர் யாழ்ப்பாணத்துக்குக் கிடைக்குமா? கிடைக்காதா?

2.   இதை உறுதிப்படுத்திக் கூறுவது யார்?

3.   இரணைமடுக் குளத்திலிருந்து குடிநீரை யாழ்ப்பாணத்துக்கு வழங்க முடியாது என்றால் அதற்கான மாற்று நடவடிக்கை என்ன? அது நீடித்த கால அடிப்படையிலானதா? அதற்கான உத்தரவாதம் என்ன? அதனுடைய சாத்தியங்கள் எவ்வாறுள்ளன?

4.   வடமராட்சி கிழக்கிலிருந்து (மருதங்கேணியிலிருந்து) உவர் நீரை நன்னீராக்கும் திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான குடிநீரை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகச் சொல்லப்பட்டது. அதனுடைய நிலை என்ன? அது சாத்தியம் என்றால் எப்பொழுது ஆரம்பிக்கப்படும். இல்லையெனில் அதற்கான மாற்று நடவடிக்கை என்ன? அந்த மாற்று நடவடிக்கை எப்போது ஆரம்பமாகும்?

5.   இரணைமடுக்குளத்தின் நீரை யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்குப் பதிலாக ஆறுமுகம் திட்டம் உருவாக்கப்படும் என்றொரு கதை உலாவுகிறது. அந்தத் திட்டத்தின் சாத்தியங்கள்? அதனுடைய வலு? அது எப்போது எந்தத் திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும்? இதைப்பற்றி யார் விவரம் சொல்வது?

6.   ஆறுமுகம் திட்டம் யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப்பிரச்சினைக்குத் தீர்வைத் தருமா? அவ்வாறெனில் அதை உறுதிப்படுத்தும் பொறுப்பான தரப்பு யார்? அதனுடைய செயற்திட்ட விவரத்தை எங்கே, யாரிடம் பெற முடியும்?

7.   வடக்கு மாகாணசபையில் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட  பாலியாற்றுத்திட்டத்தின் மூலமாக யாழ்ப்பாணக் குடாவுக்கான குடிநீர் விநியோகம் என்றது இப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைத் தருமா? அதனுடைய தொழில்நுட்ட விவரங்கள் என்ன? இதைக் குறித்த உத்தரவாதம் யாருடையது? சாத்தியங்கள் என்ன? திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வழிகள், கால எல்லை எல்லாம் என்ன? இது தொடர்பான ஆய்வறிக்கையை எங்கே பெறலாம்?

8.   அல்லது, மாகாவலி திட்டத்திற்கூடாக நீர் இரணைமடுவுக்கு வந்து, அதன் மூலமாக யாழ்ப்பாணத்தின் நீர்ப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படுமா? இதற்கான சாத்தியங்கள், எதிர்ப்புகள் எப்படி? இதைக்குறித்து எங்கே யாரிடம் சரியான தகவல்களைப் பெற முடியும்?

9.   ஆசிய அபிவிருத்தி வங்கி ஒதுக்கிய 24 ஆயிரம் மில்லியன் ரூபாயில் ஒரு பகுதி பணம் இரணைமடுவின் அணைக்கட்டை இரண்டு அடி உயர்த்துவதற்கானது. இதன் மூலம் சேமிக்கப்படும் மேலதிக இரண்டு அடி நீரும் யாழ்ப்பாணக் குடாநாட்டின் குடிநீர்ப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கானதா? அல்லது விவசாயத் தேவைகளுக்கானதா? அப்படியென்றால் ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டத்தின் அர்த்தம் என்ன? அதனுடைய நிலைப்பாடு என்ன?

10.யாழ்ப்பாணத்தில் நன்னீருக்குக் கேடு விளைவிப்பதைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படவிருந்த மலக்கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்றும் திட்டமும் முறைப்படுத்தப்பட்ட கழிவகற்றல் மற்றும் கால்வாய்த்திட்டமும் என்ன நிலையில் உள்ளன?

11.குடிநீரில் அரசியல் ஆதாயம் தேட முற்படும் அரசியல்வாதிகளைப் பற்றிய ஊடகங்களின் நிலைப்பாடு என்ன? புத்திஜீவிகளின் பதில் என்ன? அரசியல் தலைமைகளின் நிலைப்பாடும் பொறுப்பும் எத்தகையன?

12.யாழ்ப்பாணத்துக்கான குடிநீர்ப்பிரச்சினை என்பது தனியே யாழ்ப்பாணக்குடிநீர் விநியோகம் தடுக்கப்பட்டதுடன் நிற்கவில்லை. அது கிளிநொச்சி மாவட்டத்திலும் குடிநீர் விநியோகத்தைத் தாமதப்படுத்தியுள்ளது. இதனால் பூநகரி, பளை, தட்டுவன்கொட்டி, பரந்தன், உமையாள்புரம் போன்ற பிரதேசங்களைப் பாதித்துள்ளன. இதற்கான பதிலைச் சொல்வது யார்? தீர்வு என்ன?

13.இந்தப் பாரிய பிரச்சினையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? அதை அது ஏன் பகிரங்கப்படுத்தாமல் பின்னடிக்கிறது? தமக்கு வாக்களித்த மக்களுக்கு நீதி வழங்காமல் எப்படி இதிலிருந்து கூட்டமைப்புத் தப்பிக் கொள்ள முடியும்?

14.யாழ்ப்பாணத்துக்கான குடிநீர்ப்பிரச்சினை அரசியலாக்கப்பட்டதைத் தெரிந்தும் தொடர்ந்தும் யாழ்ப்பாணச் சமூகம் – நீருக்குத் தேவைப்படுவோரும் நியாயவாதிகளும் – ஏன் மௌனம் காக்க வேண்டியுள்ளது என்பது ஏன்?

15.இரணைமடுவின் நீர் அளவு, அதன் விநியோக முறைமை, அதனுடைய முகாமைத்துவம் போன்றனவெல்லாம் சரியானவையா? விவசாயிகள் சரியான முறையில் வழிகாட்டப்படுகின்றனரா?

16.வடக்கிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான குடிநீரைப் பெற்றுக் கொள்ளக் கடினம் என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

17.வடக்கின் பெரிய நீர்த்தேக்கமான இரணைமடு அந்தத் திட்டத்தின் கீழுள்ள விவசாயிகளுக்கு மட்டும்தான் உரித்துடையதா? அது மாவட்டத்துக்கும் வடக்கின் ஏனைய பிரதேசங்களுக்கும் உரித்துடையது இல்லையா?

18.யாழ்ப்பாணத்துக்கான நீரைக் கொடுப்பதற்கும் 13 ஆவது திருத்தத்திற்கும் உள்ள சம்மந்தம் என்ன?

இவற்றைப்பற்றிய பதில்களைக் கண்டறியாமலே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றன தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சு, வட மாகாணசபை, அரசியல் தலைமைகள், அரச தலைமை, நீர்ப்பாசனத்திணைக்களம், பொதுமக்கள் நலனோம்பு அமைப்புகள்… எல்லாம்.

பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற நிலையில், எந்தத்தீர்மானமும் இல்லாமல் ஒரு பெரிய திட்டமும் ஆறு லட்டம் மக்களின் அடிப்படைத் தேவையும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இவ்வளவுக்கும் இந்தப் பிரச்சினையை நெருக்கடி நிலைக்குத் தள்ளியது ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினரே.

அவர் சிவஞானம் சிறிதரன்.

அவருடைய இந்தத் தவறான நிலைப்பாட்டைக்குறித்து கூட்டமைப்பும் பதில் கூறவில்லை. அரசும் நிலைப்பாடெடுத்துச் செயற்படவில்லை.

இரணைமடுத்தண்ணீரை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்ல முடியாது என்று கூட்டமைப்பின் கீழுள்ள  அடிமட்டப்பாராளுமன்ற உறுப்பினரின் அச்சுறுத்தலை மீற முடியாத நிலையில் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் உள்ளது என்று சொல்கிறார் செபஸ்ரியன்.

இப்பொழுது இந்தப் பிரச்சினை ஒரு தேசிய விவகாரமாக்கப்படும் கட்டத்தை எட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்படித் தேசிய விவகாரமாக்கப்பட்டால் அதில் மத்திய அரசு தலையீடு செய்வதற்கான வாய்ப்புகளே அதிமாகும். அப்படி மத்திய அரசு தலையீடு செய்ய முற்பட்டால் இரணைமடுக்குளமானது மத்திய அரசியன் கைகளில் – மைய அரசின் கட்டுப்பாட்டில் சென்று விடும்.

இதற்கான ஒரு சமிக்ஞையாகத்தான் கடந்த 25.12.2019 இல் இரணைமடுவுக்கு ஜனாதிபதி வருகை தந்து விவசாயப்பாசனத்துக்கான நீரைத் திறந்து வைத்ததாகவும் கொள்ள முடியும்.

ஆகவே குளத்தைக் கலக்கிப் பருந்துக்குக் கொடுக்கும் கதைதான் நடக்கப் போகிறது போலுள்ளது.

எதிர்காலத்தில் எப்படியானவை நடக்கும் என்பதற்கு நிகழ்காலத்தீர்மானங்களும் நடவடிக்கைகளும் கால்கோளாக இருப்பதுண்டு.

இன்று யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான நீர் தொடர்பில் கடைப்பிடிக்கப்படும் அசமந்தப்போக்கும் கள்ளத்தனங்களும் நாளை பெரிய நெருக்கடிகளில் கொண்டு வந்து நிறுத்தும் அனைவரையும்.

தலைக்குமேலே வெள்ளம் வந்த பிறகு எதுவும் செய்வதற்கில்லை.

தமிழ் அரசியல் எப்படித் தேறா நிலைக்குள் கிடந்து தேய்கிறதோ அதைப்போலக் குடிநீர்ப்பிரச்சினையும் தீரா நிலைக்குள் சிக்கிச் சீரழிகிறது.

இதை உணர்ந்து செயற்படும் நாள் எப்போது வரும்? யார் அதற்கான முதலடிகளை வைப்பது?

Share:

Author: theneeweb