சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் சுதந்திர தினத்திலாவது விடுதலை செய்யப்பட வேண்டும்

மன்னார் பிரஜைகள் குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் சுதந்திர தினத்திலாவது விடுதலை செய்யப்பட வேண்டும் என மன்னார் பிரஜைகள் குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் மன்னார் பிரஜைகள் குழு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் உரிமையையும், வேண்டுகோளையும் மதித்து, பல ஆண்டுகளாக உரிமை இழந்து நீதிக்கு புறம்பாக சிறைவாசம் அனுபவிக்கும் தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதி, உண்மை, மனித உரிமைகள், உரிமை மீறல், உறவுகளைத் தேடல், புதை குழிகளை தோண்டுதல், மனித எச்சங்கள் இனம் காணல் இவ்வாறாக தமிழரின் உரிமைப் போராட்டம் பரவலாக விரிவடைந்து செல்கின்றது.

இவ்வாறான கால கட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகளின், வாழ்நாள் காலம் சிறையில் வீணடிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து, அவர்களின் இல்லங்களிலும், தமிழ் மக்களின் உள்ளங்களிலும் ஒளியேற்றுமாறு நாட்டுத் தலைவர்களிடமும், நல்லாட்சி அரசாங்கத்திடமும், நீதித்துறையிடமும் வேண்டு கோள் விடுப்பதாக மன்னார் பிரஜைகள் குழு குறிப்பிட்டுள்ளது.

Share:

Author: theneeweb