இஸ்லாமியப் புரட்சியின் 40-ஆவது ஆண்டு தினம்

ஈரானில் மதகுரு அயதுல்லா கோமேனி தலைமையிலான இஸ்லாமியப் புரட்சியின் 40-ஆவது ஆண்டு தினக் கொண்டாட்டம், அந்த நாட்டில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ஈரானில் அயதுல்லா கோமேனி தலைமையில் 1979-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெற்ற புரட்சியைத் தொடர்ந்து, பெஹலவி வம்சத்தினரின் மன்னராட்சி வீழ்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த நாட்டில் இஸ்லாமிய ஆட்சி அமைக்கப்பட்டது.

இதையொட்டி ஈரானில் ஆண்டுதோறும் பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கி 10 நாள்களுக்கு புரட்சி தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், 40-ஆவது புரட்சி தினக் கொண்டாட்டங்கள் தலைநகர் டெஹ்ரானில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

வெளிநாடுகளில் தஞ்சமடைந்திருந்த கொமேனி, ஈரான் திரும்பிய பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி, காலை 9.33 மணிக்கு அந்தக் கொண்டாட்டங்களும் தொடங்கின.

இந்தக் கொண்டாட்டத்தையொட்டி, டெஹ்ரானிலுள்ள பிரம்மாண்ட நினைவக மைதானத்தில் ராணுவ அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அந்த நிகழ்ச்சிகளை ஏராளமானோர் பார்வையிட்டனர்.

அப்போது பேசிய ஈரானின் தற்போதைய மதபீடத் தலைவர் அயதுல்லா அகமது ஜன்னத்தி, “அமெரிக்காவின் உதவியில்லாமல் ஈரான் செயல்பட முடியாது என்று நினைப்பது மிகவும் மடமையாகும். அந்த நாட்டின் பலம் குறைந்து கொண்டே வருகிறது. நாம் அதனைப் பார்த்து அச்சம் கொள்ளத் தேவையில்லை’ என்றார்.
இந்தக் கொண்டாட்டங்கள், ஈரானில் 2,500 ஆண்டு கால மன்னராட்சி வீழ்த்தப்பட்ட பிப்ரவரி  11-ஆம் தேதி வரை நடைபெறும்.

Share:

Author: theneeweb