‘ஆவா’ குழு உறுப்பினர்களுக்கு ரொசான் பெர்னான்டோ விடுத்துள்ள கோரிக்கை!!

வடக்கில் மிகவும் அச்சுறுத்தலாக காணப்பட்ட ஆவா குழுவினை தற்போது முற்றாக கைது செய்து விட்டதாக வட மாகாண சிரேஸ்ட பிரதி காவற்துறை மா அதிபர் ரொசான் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

இன்று காலை காங்கேசன்துறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வடக்கில் அச்சுறுத்தல் மிக்கதாக கடந்த காலங்களில் ஆவா என்ற வன்முறை குழு காணப்பட்டது.

ஆனால் தற்போது அதில் ஒரு சிலரை தவிர ஏனையோரை கைது செய்து நீதிமன்றங்களில் முற்படுத்தியுள்ளோம்.

ஆனால் அவர்களில் சிலர் நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்ட போது பிணை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்னமும் கைது செய்யப்படாத நிலையில் மறைந்திருக்கும் ஆவா குழு உறுப்பினர்களுக்கு தாம் ஒரு கோரிக்கை விடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதாவது அவர்களையும் காவல் நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும் சரண்டைந்து உங்களது வழக்குகளை முடிவுறுத்திகொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், வட மாகாணத்தில் இந்த ஆண்டின் முதல் மாதத்தில் மாத்திரம் சுமார் 400 கிலோவுக்கும் மேற்பட்ட கேரள கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

அது தொடர்பாக 111 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும், அதனுடன் தொடர்புபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடந்த 10 நாள்களில் மாத்திரம் 380 கிலோ கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன், அதனை வைத்திருந்த குற்றச்சாட்டில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 90 சதவீதமானவை யாழ்ப்பாணத்திலேயே மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் பெருந்தொகையான கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

தற்போதும், யாழ்ப்பாணத்தில் கேரள கஞ்சா கடத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுபடுத்தும் வகையில் விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளன.

அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் அச்சுவேலி, இளவாளை, பருத்தித்துறை, காங்கேசன்துறை ஆகிய பிரதேசங்களில் இந்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சுற்றிவளைப்புக்களை பகிரங்கமாக முன்னெடுக்கும் அதேநேரம் இரகசியமான முறையிலும் தமது விசாரணை நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், இதன் காரணமாகவே கஞ்சா கடத்தல் அதிகளவில் இடம்பெறும் பகுதியில் உள்ள மக்களது விபரங்கள் திரட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சியில் அண்மையில் போதைப்பொருள் குறித்து தகவல் வழங்கிய இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பபட்டது.

இதற்கு பதிலளித்த அவர், குறித்த இளைஞரை அச்சுறுத்தியமை தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் குறித்த சம்பவமானது போதைப்பொருள் தொடர்பில் தகவல் வழங்கியமையினால் மேற்கொள்ளப்படவில்லை எனவும், தனிப்பட்ட பிரச்சினைகளே அதற்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் தொடர்பில் தகவல் வழங்குபவர்கள் குறித்த விபரங்கள் பாதுகாக்கப்படும் எனவும், வட மாகாண சிரேஸ்ட பிரதி காவற்துறைமா அதிபர் ரொசான் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb