சீனாவிடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் பெறவுள்ள இலங்கை

கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை பணிகளுக்காக சீனாவிடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை கடனாகப் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கருணாசேன கொடித்துவக்கு நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்தத் தகவலை வெளியிட்டாரென சர்வதேச ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

குறித்த கடன்தொகையின் ஊடாக கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலையின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, இரண்டாம்கட்ட பணிகளுக்காக இலங்கை முதலீட்டாளர்கள் நிதி வழங்கவுள்ளதுடன், மூன்றாம்கட்ட பணிகளுக்காக ஜப்பான் கடன் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், சீன வங்கியிடமிருந்து இலங்கை, இந்த ஆண்டின் முற்பகுதியில் ஒரு பில்லியன் ரூபா கடனைப் பெறவுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறிருப்பினும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கடன் தொகையும், இதே கடன்தொகைதானா என்பதனை இலங்கைத் தூதுவர் உறுதிப்படுத்தவில்லை என குறித்த சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.

Share:

Author: theneeweb