எந்த இடங்களில் நடிக்க வேண்டும் என்பதை விட எந்த இடங்களில் நடிக்கக் கூடாது என்பதை அறிந்த ‘பேரன்பு’ நடிகர் மம்முட்டி!

 -மணிகண்டன் தியாகராஜன்  |

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம், சீனாவின் ஷாங்காய் ஆகிய இடங்களில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு கவனம் ஈர்த்த தமிழ் திரைப்படம் பேரன்பு.

இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான மம்முட்டி ஏறக்குறைய 18 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் நேரடியாக நடித்து வெளியான திரைப்படம் பேரன்பு. இதற்கு முன்பு அவர் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டில் வெளியான நேரடி தமிழ் படம் ஆனந்தம்.

மம்முட்டி என்னும் உச்ச நட்சத்திரம் என்ற எதிர்பார்ப்பும், கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி என படத்துக்கு படம் வித்தியாசம் காட்டி வரும் இயக்குநர் ராமின் திரைப்படம் என்ற எதிர்பார்ப்பும் ஒரே சேர இணைந்து ரசிகர்களின் மனதில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்தான் பேரன்பு. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று பார்ப்போம்.

ஒவ்வொருவரையும் முரணாக படைத்துவிட்டு எல்லோரையும் சமமாக பார்க்கும் இயற்கையின் முரண் குறித்து பேசும் படம் என்று கதையை ஒருவரியில் கூறிவிடலாம். அமுதவனாக மம்முட்டி. அவருடைய மகளாக பேபி சாதனா. பாப்பா என்று அன்பாக அழைக்கப்படும் சாதனாவுக்கு இந்தப் படத்தில் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் கதாபாத்திரம். எல்லா குழந்தைகளையும் போல் இவர்களால் அனைத்து செயல்களையும் செய்ய முடியாது. ஒருவரின் துணை எப்போதும் வேண்டும். இப்படிப்பட்ட குழந்தையை வெளிநாட்டில் உள்ள கணவரின் (அமுதவன்) துணையின்றி தனியாக பல ஆண்டுகள் பார்த்துக் கொள்ள முடியாமல் ஒரு கட்டத்தில் விட்டுவிட்டு வீட்டை வெளியேறி விடுகிறார் மனைவி.

வெளிநாட்டில் இருந்து வரும் அமுதவன் தனது மகளை எப்படியெல்லாம் கவனித்துக் கொள்கிறார். வளர்க்க கஷ்டப்படுகிறார் என்பதே முழு திரைப்படமும். மகளின் பிரச்னையை புரிந்து கொள்ளாத இந்த நகரத்தை விட்டு யாருமற்ற இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் மகளுடன் தஞ்சமடைகிறார் அமுதவன். அங்கு சிறுமியை பார்த்துக் கொள்ளும் பெண் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் அஞ்சலி.

மகளின் பிரச்னையைப் புரிந்து கொள்வதற்காக கண்ணாடி முன்பு நின்று அவரைப் போல் செய்து பார்ப்பதில் தொடங்கி, பாப்பாவின் அன்புக்காக ஏங்குவதும், அன்பு கிடைத்ததும் அவரை வளர்ப்பதற்கு அவர் படும் சிரமங்களையும் தத்ரூபமாக திரையில் கொண்டு வந்துள்ளார் மம்முட்டி. எந்த இடங்களில் நடிக்க வேண்டும் என்பதை விட எந்த இடங்களில் நடிக்கக் கூடாது என்பதை அறிந்து அமுதவன் கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார். வெல்கம் பேக் டு தமிழ் சினிமா. சிக்கலான கதாபாத்திரத்தில் வந்து, சிறப்பாக நடித்துவிட்டு போகிறார் அஞ்சலி. இவரை தமிழ் சினமா நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திருநங்கை கதாபாத்திரத்தை ஏற்று துணிச்சலாக நடித்துள்ளார் திருநங்கை அஞ்சலி அமீர். மலையாளத்தில்  அவர் ஏற்கெனவே சில படங்களில் தலைகாட்டியுள்ளார். தமிழ் சினிமா அவரை பூங்கொத்து அளித்து வரவேற்கிறது.

கதையின் நாயகியான சாதனாவுக்கு தங்க மீன்களுக்கு பிறகு மீண்டும் ஒரு தேசிய விருது கிடைக்க வாய்ப்புள்ளது. படம் தொடங்குவதிலிருந்து முடியும் வரை ஒரே மாதிரியாக கை விரல்களையும், முகத்தை கோணாலாகவும் வைத்துக் கொண்டு அவர் நடித்திருப்பது சாதாரணமான ஒன்றல்ல. ஒத்தரு மாரியே இன்னொருத்தரும் ஏன் இல்லைன்னு கேக்கறது எவ்வளவு பெரிய வன்முறை என்பது தொடங்கி பல வசனங்களுக்கு அரங்கில் கைத்தட்டல் பெறுகிறார் இயக்குநர் ராம். சில வசனங்கள் கவிதையாகவும், சிந்திக்கத் தூண்டுபவையாகவும், சமூகத்தைக் கேள்விக்குள்படுத்துபவையாகவும் அமைந்துவிடுவது ராம் என்னும் படைப்பாளரின் தனிச்சிறப்பு. நட்சத்திரங்களை மகளும், தந்தையும் எண்ணிப் பார்ப்பது ரசனைக்குரிய காட்சிகளில் ஒன்று. மகள் வயதுக்கு வந்ததும் என்ன இனி நான் எப்படி அவளை பார்த்துக்கொள்வது என்று உதடுகள் துடித்து கண்களில் கண்ணீர் மல்கும் காட்சி மம்முட்டி நடிப்புக்கு சாட்சி. இயற்கை ஆபத்தானது,இயற்கை புதிரானது, இயற்கை அழகானது என பல அத்தியாயங்களாக விரிந்து இயற்கை பேரன்புக்குரியது என்று முடிகிறது படம். கொடைக்கானலில் மலைகளுக்கு நடுவே பனிமூட்டம் கலைந்து செல்லும் காட்சி, பறவை தனது குஞ்சுகளுக்கு உணவூட்டும் காட்சி என்று தேனி ஈஷ்வரின் ஒவ்வொரு ஃப்ரேமும் கவிதை. பின்னணி இசை யுவன் சங்கர் ராஜா. இசைஞானியின் ராஜா என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டிவிட்டார் யுவன். படத்தில் பல இடங்களில் யுவனின் இசையே ரசிகர்களுக்கு பலவித உணர்வுகளை கடத்தி விடுகிறது.

ராமின் ஆஸ்தான நண்பரான நா.முத்துக்குமாரின் வரிகள் இல்லாமல் போனது வருத்தத்தை தருகிறது. அன்பே அன்பின் பாடல் மட்டும் மனதில் பதிகிறது. மற்ற பாடல்கள் கதையுடன் நகர்ந்துவிடுகிறது. சில காட்சிகளுக்கு கத்தரி போட்டிருக்கலாமோ என்று எண்ணம் எழுகிறது. சில இடங்களில் மட்டும் படம் மெதுவாக நகர்வது அயர்வைத் தருகிறது. இதுபோன்ற பாதிப்புள்ள குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும் என்பதே இந்தப் படம் சொல்ல வரும் கருத்து. அத்துடன், எல்லோருக்கும் எல்லாம் சிறப்பாக அமைந்துவிடுவதில்லை. இருப்பினும், எல்லாவற்றையும் தாண்டி அன்பையும், நேசத்தையும் பகிர்ந்தால் வாழும் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதையும் இந்த படம் மெளனமாக ரசிகர்களுக்கு கடத்தி விட்டுச் செல்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை போன்று கதையையும் கதாபாத்திரங்களையும் முன்னிறுத்தி வரும் பேரன்பையும் ரசிகர்கள் வரவேற்க வேண்டும். பேரன்பு போற்றதலுக்குரிய படம். எளிமையான படம். தவரிக்க முடியாத தவிர்க்கக் கூடாத தமிழ் சினிமா.

– Dinamani –

Share:

Author: theneeweb