ஒருமரணத்தில் இழையோடும் துயரம் :திரு. அருணாசலம் குமாரதுரை

ஒருமரணத்தில் இழையோடும் துயரம் :திரு. அருணாசலம் குமாரதுரையின்( பிறப்பு: 25.05.39 மறைவு: 23.01.2019) மறைவு குறித்து மனதில்பட்டவை.

…எஸ்.எம்.எம்.பஷீர்—

 

“உங்கள் வார்த்தைகளை மாற்றுவதன் மூலம் உஙக்ளின் உலகத்தை மாற்றிக்கொள்ளலாம் … நினைவிருக்கிறதா, மரணம் மற்றும் வாழ்க்கை நாக்குகளின் சக்தியாக இருக்கின்றன.” ( ஜோயல்ஒஸ்டீன் )

சென்ற 23 ஆம்திகதி தை மாதம் 2019 ஆம்ஆண்டு தனது எழுபத்தொன்பதாவது வயதில் டென்மார்க்கில் காலமான திரு. அருணாசலம்குமாரதுரை அவர்களின் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட நினைவுகளுடன் எனது துயரத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். அவரின் இழப்புக் குறித்து நான் தனிப்பட்டவகையில் மிகுந்த துயரமடைகிறேன். ஒரு அரசியல் ஆய்வாளர் என்றவகையில் துணிச்சலாக , துல்லியமான புள்ளிவிபரங்களுடனான தனது பக்கநியாயங்களை முன்வைத்து கருத்தாடல் செய்து ஐரோப்பா மட்டுமல்ல மத்தியகிழக்கிலும் ஒரு புதிய அரசியல் சிந்தனைவீச்சினை ஏற்படுத்தியவர்திரு. அருணாசலம் குமாரதுரை. இன்றும் அவரின் மறைவு கேட்டதும் பலரின் காதுகளில் அவரின் குரல் ரீங்காரமிடும் என்பதில் எனக்கு ஐயமில்லை. அவரின் பிசிரில்லாதகுரலும் , அவரின் ஆணித்தரமானவாதங்களும் அவரின் தன்னிகரற்ற அடையாளங்களாக திகழ்ந்தன.

எனது அரசியல் சமூகசெயற்பாடுகளின் நீட்சியாக புலம்பெயர்தேசத்தில் ஒருநெருக்கடியான காலகட்டத்தினூடே பயணிக்க நேரிட்டபொழுதுதிரு. அருணாசலம் குமாரதுரை அவர்களுடனான அறிமுகம் எனக்கு கிடைத்தது , வக்கற்றவர்களின் விமர்சனங்களின் வக்கிரங்களை , வன்முறையாளர்களின் வரம்புமீறல்களை அச்சமின்றிதுச் சமாக எதிர்கொள்ளும் அவரின்ஆளுமை என்னை ஆகர்ஷித்தது. சமரசம் செய்து கொள்ளாத கொள்கைபற்று என்னையும் அவருடன் அவரின் இறுதிநிகழ்வுவரை இணைத்து வைத்தது, இடைக்காலத்தில் பயணித்த பலரின் வேஷங்கள் காலகதியில் கலைந்து போனது.
செல்வாக்கும் செல்வத்துக்கும் சரியாத சந்தர்ப்பவாதசாயம் பூசாத அவரின் குன்றையொத்த கொள்கை உறுதி என்னைக் கவர்ந்தது. அதனால்தான் புலம்பெயர்தமிழ் அரசியல் நட்புக்கள் , அந்நியோன்யங்களை அனைத்தும் அற்றுப்போன நிலையிலும் திரு. அருணாசலம் குமாரதுரையுடனான எனது உறவு நிலைத்தது.

“நெஞ்சில் ரமுமின்றி நேர்மைத்ததிறனுமின்றி வஞ்சனை செய்வாராடி” என்று பாரதி அங்கலாய்த்த அரசியல் அங்காடிகள் பலரின் அவலட்சணங்களை நாங்கள் இருவரும் எதிர்கொண்டுள்ளோம். அப்பொழுதெல்லாம் அவரின்வயதோடு இயைந்துவந்த அனுபவத்தின் ஊடான ஆறுதலளிக்கும் வார்த்தைகள் என்னை ஆசுவாசப்படுத்தி உள்ளது.
அவர் மரணிக்க ஒருவாரத்துக்கு முன்னர் அவரை நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டபொழுது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருடன் வீட்டுக்கு வந்ததும் மீண்டும் அழைக்கிறேன் என்றுகூறி விடைபெற்ற பின்னர் ,அவர்வீடு திரும்பி ஓருநாட்களின் பின்னர் இவ்வுலகை விட்டு விடைபெற்றுவிட்டார் என்ற செய்தி என்னை துயரத்தில் ஆழ்த்தியது .

சிலமாதங்களுக்கு முன்னரே எனக்கு நன்குநெருக்கமான மட்டக்களப்பில் மிக நீண்டகாலமாக வதியும் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தில் உள்ள இளம்யுவதி ஒருவருக்கு அறுவைசிகிச்சை செய்ய நாங்கள்உதவியவேளையில் திரு . குமாரதுரையும் முன்வந்துஒருபெரியதொகையைஅப்பெண்மணிக்குவழங்கினார். தர்மத்திலும் அவர்பெயர் பெற்றவர் என்று கேள்விப்பட்டுள்ளேன். ஜனநாயககுரல் உலகெங்கும் உழைக்கும் பணியில் வானொலிஒன்றிற்கு பாரியநிதி உதவிகளை செய்துள்ளார் என்று சொல்ல கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் “நீங்கள் சொல்லிவிட்டீர்கள் நான் உதவுகிறேன்” என்று அடுத்த கேள்வி கேட்காமல் உதவிய அந்தக்குரல் தர்மத்தின் குரலன்றிவேறன்ன.! . “குமாரபுரம்” அவரின் பரோபகாரத்தின் பலன்களை பவ்வியமாக பலதலைமுறைக்கும் பறை சாற்றும்.

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக புலம்பெயர்ந்து வாழ்ந்தபொழுதும் திரு. அருணாசலம் குமாரதுரை கிழக்குமாகாணத்தின் ஒரு ஆதர்சன புருஷராகவே திகழ்ந்தார். அவரின் குடும்பத்தினர் கிளிவெட்டியில் உருவாக்கிய “குமாரபுரம்” அவரினதும் ,அவரின் குடும்பத்தினரதும் சமூகப்பணிகளை இன்றும் பறைசாற்றுகின்றன. ஐரோப்பாவில் அன்னாரின் ஜனநாயக தர்க்கரீதியான கருத்துப்பரிமாற்றங்கள் அரசியல் செயற்பாடுகள், குறுகிய இனவாத அரசியல் சித்தாந்தங்களை கேள்விக்குட்படுத்தும் நடைமுறைகள் அவர் எதிர்காலசந்ததியினருக்கு விட்டுச் செல்லும் வழிமுறையாகும்.

இந்தப் பின்புலத்தில், அவருடன் தொடர்புட்ட அந்தவரலாற்று நிகழ்வு எனது ஞாபகத்துக்குவருகிறது. இலங்கையின் அரசியல்வரலாற்றில் ,அதிலும் குறிப்பாக புலம்பெயர்தமிழ் அரசியல்வரலாற்றில் ஜேர்மனியிலுள்ளஸ்ருட்காட்நகரில் இலங்கையர் ஜனநாயகஅரங்கு சார்பில் 11-11-2006-12-11-2006 ஆம்திகதிகளில் தமிழ்மக்களின் அரசியல்தீர்வு குறித்து நடைபெற்ற கலந்துரையாடல் இடம்பெற்றது. தமிழ்பேசும் மக்களின் வெளிப்படையான இனமொழி அரசியல் முரண்பாடுகளைத் தாண்டி உள்ளார்ந்த சாதி, மத, பிரதேச வேறுபாடுகளை , ஒற்றைப்பரிமான தமிழ்தேசியவாத கோட்பாடுகளின் சூழ்ச்சியினால் மறுக்கப்படுகின்றதும் மறைக்கப்படுகின்றதுமான அடையாளங்களை வலிந்து அரசியல்கோஷங்களுடன் திணிக்கப்பட்ட பண்பாட்டு உளவியல் தேசியஉருவாக்கங்களை முதன் முதலில் கேள்விக்குற்படுத்திய ஒருபகிரங்கநிகழ்வு என்றால்மிகையாகாது.
கிழக்குமாகாணம் வடக்கிலிருந்து பிரியவேண்டும் என்ற முன்மொழியினை அருணாசலம்குமாரதுரை முன்மொழிந்து பாரிய கருத்துக்சமரை எதிர்கொண்ட ஜனநாயகக்களம் அதுவாகும். அவ்வரங்கில்தான் கிழக்கின் தனித்துவம் பற்றிய சமூக அரசியல் பண்பாட்டு வரலாற்று அம்சங்களை முன்னிறுத்தி கிழக்கு பிரிந்திருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி எம்.ஆர். ஸ்டாலின் “கிழக்கின்சுய நிர்ணயம்”எனும்தலைப்பில் ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்து உரை நிகழ்தினார் என்பதும் அவ்வறிக்கை குமாரதுரையின் கோரிக்கைக்கு வலுச்சேர்த்தது. அந்த நிகழ்வினைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை குமாரதுரை எதிர்கொண்ட பாங்கு அவரின் இறுதிவரையான அரசியல் அடையாளமாகவே நிலைகொண்டது.

மேலும் அம்மாநாட்டில்தான் பிரான்சிலுள்ள ‘இலங்கைத் தலித்சமூகமேம்பாட்டுமுன்னணி’யினர் தலித்மக்களின் கடந்தகால சமூக அவலங்களை வெளிப்படுத்தியதோடு, அம்மக்களுக்கான அரசியல் சமூகஉரிமைகள் தனித்துவமாக பேணப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். அத்துடன் தலித் சமூகத்தின் எதிர்கால அரசியல் உத்தரவாதத்தைக் கோருமுகமான ஓர் அரசியல் அறிக்கையையும் அவ்வரங்கில் சமர்ப்பித்தனர்.

தனது வாழ்நாளில் எப்படியும் தனது அரசியல் அனுபவங்களை ,தனது அனுமானங்களை எழுத்தாக்கி விடவேண்டும்என்ற அவரின் வேணவாவை , “அரசியல்வரலாறு : இழப்புக்களும் பதிவுகளும் ” என்ற பெயரில் தமிழிலும் ஆங்கிலத்திலும் சில வருடங்களுக்கு முன்னர் நூலாக வெளிக்கொண்டு வந்தார். அந்நூலை அவரின் சகோதரர் மறைந்த முன்னாள் மூதூர் நாடாளுமன்றஉறுப்பினர்அ. தங்கத்துரைக்கு அர்ப்பணம்செய்துள்ளார். இலங்கை அரசியலில் மாற்றுஅரசியல் கருத்தாக்கத்திற்கு ஒரு புதியவீச்சினை அவை ஏற்படுத்தும் என்பதில் எனக்கு நம்பிக்கைஉண்டு. ஒருசாமான்ய மனிதரின் அரசியல் அனுபவங்களின் அசைக்கமுடியாத நம்பிக்கைகளின் அவதானங்கள் அவை. அவரின் கொண்ட அரசியல் நிலைப்பாடு கிழக்கின் தனித்துவ அரசியலை அடிநாதமாகக் கொண்டது என்பதால் அவர் பின்னாளில் கிழக்கின் தமிழ்மக்களின் தனித்துவ அரசியல்கடசியான தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தினை ஆதரித்தார். கிழக்கின் அரசியல் தனித்துவம் குறித்த அவரின் சிந்தனைகளுடன் கிழக்கின் முஸ்லீம் அரசியல் குறித்த நிலைப்பாடுகளுடன் நாங்கள் இருவரையும் பரஸ்பர புரிந்துணர்வுடன் நெருக்கமாக பயணிக்க நேர்ந்தது. கிழக்குமாகாணத்தை ,அதன்தனித் துவத்தை நிலைநிறுத்த போராடிய ஒருகுரல் ஓய்ந்துவிட்டது என்பதுமிகுந்த வேதனையை அளிக்கிறது.
அவரது இலங்கை” அரசியல் வரலாறு –இழப்புக்களும் பதிவுகளும் ” எனும் நூலில் அவரின் சில அத்தியாயங்களின் தலைப்புக்கள் ” விடுதலைப்புலிகளின் தாயகக் கோட்பாட்டிலிருந்து தனியாகப் பிரியும் கிழக்கின் விடுதலை” , “கிழக்கின் சுயாட்சி , தனித்துவம் , அரசியல்அதிகாரம்” என்பன அவரது அரசியல் நிலைப்பாட்டை துல்லியமாகவே பிரதிபலிக்கின்றன.

அவரின் நட்பு கிடைத்திருக்காவிட்டால் நேர்மையும் நெஞ்சுறுதியும் , நெகிழ்வுறாக் கொள்கை பற்றுறுதியும் , நிலைக்களனாகக் கொண்ட ஒரு சிறந்த மனிதரை நான் என்வாழ்வில் இழந்திருப்பேன் என்று திடமாகநம்புகிறேன். அவருடன் பழகிய பொழுதுகள் எனதுநினைவில் என்றும் நீங்காதவை. அவருடன் இலங்கை ஜெர்மனி ,பிரான்ஸ் என்று அரசியல் பணிகளில் பயணித்த அனுபவங்கள் நினைவில் நிறைந்தவை.
தாய்நாட்டிலே ஒரு அரசியல் போராட்ட வரலாற்றைகொண்ட ,அதற்காக சிறைசென்று சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து, புலம் பெயர்ந்த நாட்டில் கால் பதித்து, நல்லமனைவி நல்லபிள்ளைகள் என ஒரு “பல்கலைக்கழகத்தை” உருவாக்கி , தான்கொண்ட கொள்கையில் விட்டுக்கொடுக்காத கொள்கைப் பற்றுறுதி கொண்டவராக வாழ்ந்து இன்று எம்மை விட்டுமறைந்தாலும் அவரின் பெயர் அவர் தனது நூலிலே ” உண்மை மௌனிப்பதுண்டு மரணிப்பதில்லை” என்று குறிப்பிடுவது போலவே அவரின் உண்மையான கருத்துக்களும் மரணிக்காது என்று நம்புகிறேன்.

Share:

Author: theneeweb