பிரெக்ஸிட் பதற்றம்: அரச குடும்பத்தை பாதுகாப்பாக வெளியேற்ற பிரிட்டன் அரசு ரகசியத் திட்டம்

பிரெக்ஸிட் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பந்தம் எதுவும் ஏற்படாமல் போகும் பட்சத்தில் நாட்டில் ஏதேனும் வன்முறை நிகழ்ந்தால் அரச குடும்பத்தை பாதுகாப்பாக வெளியேற்ற பிரிட்டன் அரசு ரகசியத் திட்டத்தை வகுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

28 நாடுகள் கொண்ட ஐரோப்பிய யூனியனில் இருந்து அடுத்த மாதம் 29ஆம் தேதி பிரிட்டன் விலகுகிறது.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலக முடிவு செய்த பிறகு, அந்நாடுகளுடன் வர்த்தக பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயற்சி செய்தது. எனினும், அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியினரே ஆதரவு அளிக்கவில்லை. பிரிட்டன் மக்களில் ஒருசாரர் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில், அந்த ஒப்பந்தம் செய்துகொள்ளாமல் அடுத்த மாதம் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும்போது, ஏதேனும் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதாக போலீஸார் கருதுகின்றனர்.

அதுபோன்று ஏதேனும் அசம்பாவிதம் நேரிட்டால் பிரிட்டன் அரசி எலிசபெத், அவரது கணவர் பிலிப் மற்றும் இலவரசர்களை பாதுகாப்பு கருதி லண்டனில் இருந்து ரகசியமான இடத்துக்கு மாற்ற திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது என்று அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

Share:

Author: theneeweb