பாகிஸ்தான் கழுதைகள் சீனாவுக்கு ஏற்றுமதி

சீனாவுக்கு கழுதைகளை ஏற்றுமதி செய்து அதிகளவில் வருமானம் ஈட்ட பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. உலகளவில் கழுதைகள் அதிகம் நிறைந்த நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் மூன்றாவது இடத்தில் உள்ளது. எனவே, அவற்றை அதிகளவில் ஏற்றுமதி செய்கிறது பாகிஸ்தான்.

குறிப்பாக,  சீனாவுக்கு கழுதைகளை அதிக அளவில் ஏற்றுமதி செய்வதில் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது.

இதுகுறித்து கைபர் பக்துன்குவா மாகாணத்தின் கால்நடைத் துறை உயரதிகாரி கூறியதாவது:சீனாவில் கழுதைகள் விலை அதிகமாக உள்ளது. ஏனெனில், அங்கு தயாரிக்கப்படும் பாரம்பரிய மருந்துகளுக்கு அவை பல்வேறு வழிமுறைகளில் மறைமுகமாக உதவுகின்றன. கழுதைகளில் தோல் பகுதியிலிருந்து எடுக்கப்படும் கெலட்டின் என்ற பொருள் சீனாவின் பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. எனவே, பாகிஸ்தான் கழுதைகளுக்கு சீனாவில் கிராக்கி அதிகம்.

இதனை கருத்தில் கொண்டு, பாகிஸ்தானில் கழுதைப் பண்ணைகளை அமைக்க சீன  நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்காக, அவை 3 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய தயாராக உள்ளன என்றார் அவர்.
மூன்றாண்டு காலத்தில், 80,000 கழுதைகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.  உலகளவில் கழுதைகள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. இப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள பாகிஸ்தானில் 50 லட்சம் கழுதைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb