ஆஸ்திரேலியா: விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் பெண்ணிடம் கத்தியையும், போலி வெடிகுண்டையும் காட்டி மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் சர்வதேச விமான நிலையத்தில், 50 வயது நபர் கத்தியையும், போலியான வெடிகுண்டையும் காட்டி ஞாயிற்றுக்கிழமை மிரட்டியதால் அங்கு விமானப் போக்குவரத்து 2 மணி நேரத்துக்கும் மேல் நிறுத்திவைக்கப்பட்டது.
அந்த விமான நிலையத்திலிருந்த உணவகத்தில், திடீரென கத்தியை எடுத்த அந்த நபர், அதனை அங்கிருந்த பெண்ணிடம் காட்டி மிரட்டினார்.
அந்தப் பெண்ணின் அலறல் சப்தம் கேட்டு அங்கிருந்த அனைவரும் அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர்.

கத்தியைக் காட்டி மிரட்டியது மட்டுமன்றி, தன்னிடமிருந்த போலி வெடிகுண்டையும் வெளியில் எடுத்து வைத்து அந்த நபர் மிரட்டினார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் அந்தப் பகுதிக்கு விரைந்த போலீஸார், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாத பஞ்சுப் பொதி குண்டு மூலம் அந்த நபரை சுட்டனர். இதனால் நிலைகுலைந்த அந்த நபரை போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

அவர் உருது மொழியை தாய் மொழியாகக் கொண்டவர் எனவும், இந்தச் சம்பவத்துக்கு பயங்கரவாதத்துடன் தொடர்பில்லை எனவும் போலீஸார் தெரிவித்தனர்.

விமான நிலையத்தைத் தகர்க்க முயன்றது, போலீஸாரின் உத்தரவை ஏற்க மறுத்தது, பெண்ணை மிரட்டியது உள்பட அந்த நபர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.முதலாவது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் அந்த நபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share:

Author: theneeweb