அறுத்தோடிகள்

         கருணாகரன்—

“அறுத்தோடிக்குள்ள விழுந்து அன்ரன் அண்ணை காலை உடைச்சுப் போட்டாராம்… ராத்திரி வயலுக்குத் தண்ணி விட்டுக்கட்டிப்போட்டு வரேக்க நடந்ததாம்” என்றார் பக்கிரி மாமா.

“ஓ…”

“அவருக்குச் சலரோகம் இருக்கெல்லோ… அறுவது வயசில கால் முறிஞ்சால் பொருந்திறது கஸ்ரம். அதுக்குள்ள சலரோகமும் எண்டால்…. காலைக் கழட்ட வேண்டியதுதான்…”

பக்கிரி மாமாவே தொடர்ந்து சொன்னார். குரல் துக்கம் கண்டது.

அன்ரன் அண்ணையின் கால் முறிந்த துக்கத்தைச் சொல்கிறாரா? இல்லை, அன்ரன் அண்ணையின்ரை காலைக் கழற்றுவதைப் பற்றிப் பகிடி விடுகிறாரா? என்று தெரியவில்லை.

பொதுவாகவே பக்கிரி மாமா கதைத்தார் என்றால் அதில ஏதோ ஒரு பகிடி இருக்கும். மரணத்துக்கத்திலும் வாய் விட்டுச் சிரிக்கக்கூடியமாதிரிக் கதைக்கிற பேர்வழி அவர். இல்லையென்றால், ஆஸ்பத்திரிக்குப் போக முதலே காலைக் கழற்றுவதைப்பற்றி யாராவது கதைப்பார்களா?

பக்கிரி மாமாவுக்குச் செல்வரத்தினம் என்ற அருமையான பெயரை அவருடைய தகப்பன் வைத்திருந்தாலும் ஊரில் பக்கிரி என்ற பேர்தான் பிரபலம்.

“படிக்கேக்கயே இந்தப் பேரைப் பெடியள் வைச்சான்கள். வாத்திமாரே இந்தப் பேரைச் சொல்லித்தான்  கூப்பிடுவினம். அப்பிடியொரு சரித்திர விலாசம் இந்தப் பேருக்கிருக்கு” என்று கண்ணைச் சிமிட்டிக்கொண்டு சொல்வார் பக்கிரிமாமா.

“பள்ளி வயதிலேயே பக்கிரி அண்ணை படு சுட்டித்தனமான காரியங்களைச் செய்யிறதிலயும் பகடி விடுகிறதிலும் வலு விண்ணன்” என்று தவமணி மாமி சொல்லக் கேட்டிருக்கிறேன்.

பக்கிரி மாமா எந்த நேரத்தில் எப்படித்தான் யாரைப்பற்றிக் கிண்டலடித்தாலும் யாரும் கோவிக்கிறதில்லை. ஆனால், அவர் பகிடி பகிடியாகப் பல உண்மைகளையும் சொல்லி விடுவார். அந்த உண்மைகளைப் பற்றி  மற்றவைக்கும் தெரியும். அப்பிடித் தெரிந்தாலும் அவர்கள் அதைப்பற்றி இப்படிப் பகிரங்கமாகக் கதைக்க மாட்டார்கள். ஏதோ ஒரு தடையோ தயக்கமோ அவைக்கிருக்கும். பக்கிரி மாமா பகிடியாக அதைச் சொல்லும்போது மட்டும் அவர்கள் அதை ரசிப்பார்கள்.

என்ன செய்வது? அறிவதற்கும் அந்தத் தளங்களில் வேலை செய்வதற்கும் உண்மைகள் அடிப்படையாக இருப்பதற்குப் பதிலாக இப்படி ரகசியமாக ரசிப்பதற்கானவை என்ற நிலைக்கு வந்து விட்டன என்பதையிட்டு நாம் கவலைப்படுவதைத் தவிர.

“ஏன் மாமா, இந்த அறுத்தோடிகள் எத்தனை காலை முறிச்சிருக்கும்? இன்னும் எத்தினையை முறிக்கப்போகுதோ!” என்று கேட்டேன்.

“தம்பி, எங்கட ஒழுங்கையில கிடக்கிற ரண்டு அறுத்தோடியளும் மட்டும் வருசத்துக்கு ஏழெட்டுப் பேற்ற காலை உடைச்சு ஆஸ்பத்திரிக்கு அனுப்பும்… மூண்டு வருசத்துக்கு முதல் வெள்ளத்தில என்ரை காலைப் பிரட்டினது. ஆருக்கு இதைப்பற்றியெல்லாம் கவலை?” என்று கேட்டார் பக்கிரி மாமா.

பக்கிரி மாமா சொல்வதைப்போல வன்னி முழுவதிலும் தாராளமாக அறுத்தோடிகள் விளைஞ்சு கிடக்கின்றன.

நாற்பது வருசத்துக்கு மேலாக இந்த அறுத்தோடிகளைப் பார்த்துக் கொண்டே வருகிறேன். வருசத்துக்கு வருசம் கூடிக் கொண்டேயிருக்கிறதே தவிரக் குறைந்த மாதிரியில்லை. அறுத்தோடிகள் கூடக் கூடப் பாதைகள் பாழாகும். பாதைகள் கெட்டால் காலும் கையும்தானே முறியும். ஊரின் அமைப்புக் கெட்டுப்போகும்.

வன்னியில் ஒழுங்கான வடிகாலமைப்பில்லாததே இதற்குக் காரணம். அதுக்கு முதல் ஒழுங்கான திட்டமிடல் இல்லாமல் செய்யப்பட்ட வன்னிக் குடியேற்றங்கள்.

வன்னியில் கண்டாவளை, புளியம்பொக்கணை, முள்ளியவளை, முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு, முள்ளியவளை, தண்ணீரூற்று, நெடுங்கேணி, ஒட்டுசுட்டான், கரிப்பட்டமுறிப்பு, அம்பகாமம், பனங்காமம், பல்லவராயன்கட்டு, பொன்னாவெளி, பூநகரி போன்ற பூர்வீகக் கிராமங்களைத் தவிர, ஏனைய பெரும்பாலான இடங்களும் குடியேற்றத்திட்டங்களின் மூலமாக உருவாகியவையே. வவுனிக்குளம், மல்லாவி, முத்தையன்கட்டு, உடையார் கட்டு, முழங்காவில், கரியாலை நாகபடுவான், தென்னியன்குளம், ஐயன்கன்குளம், புத்துவெட்டுவான், வன்னேரிக்குளம், அக்கராயன், ஸ்கந்தபுரம், கிளிநொச்சி, வட்டக்கச்சி, உருத்திரபுரம், முரசுமோட்டை, தருமபுரம், இராமநாதபுரம், முறிப்பு, கோணாவில், கனகாம்பிகைக்குளம், ஜெயபுரம், விசுவமடு, பிரமந்தனாறு, புன்னைநீராவி, கல்மடு, கல்லாறு எல்லாமே குடியேற்றத்திட்டங்களினால் உருவாகிய கிராமங்களும் நகரங்களும் சிறுபட்டினங்களுமாகும்.

காடாக இருந்த இடங்களைக் குடியேற்றத்திட்டங்களாக மாற்றும்போது நீரோட்டத்தைக் கவனத்திற் கொள்ளத் தவறி விட்டனர் உரிய தரப்பினர். குடியேற்றங்களை அமைக்கும்போது ஒருங்கிணைந்த திட்டமிடல் செய்யப்பட்டிருக்க வேணும்.  தனியே காணிகளை அளந்து கொடுப்பதற்காக நில அளவைத்திணைக்களமும் கச்சேரியும் காணிப் பகுதியும் மட்டும் இதைச் செய்ய முடியாது. அப்படிச் செய்ததன் விளைவே இப்பொழுதுள்ள நெருக்கடிகளும் பிரச்சினைகளும்.

குடியேற்றம் செய்வதற்குப் பொருத்தமான இடங்களைத் தெரிவு செய்தபோது வனத்திணைக்களம், நில அளவைத்திணைக்களம், வீதி அபிவிருத்திப் பிரிவு, நீர்ப்பாசனத் திணைக்களம், கட்டிடத் திணைக்களம், மாவட்ட நிர்வாகம், காணிப் பிரிவு, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை போன்ற முக்கியமான – ஒருங்கிணைந்த நிறுவனங்கள் நேரில் சம்மந்தப்பட்டிருக்க வேணும்.

அப்படி ஒருங்கிணைந்த முறையில் இவை இணைந்து செயற்பட்டிருந்தால் காடுகளை அழித்து ஊர்களை உருவாக்கும்போது நீரோட்டத்துக்கு ஏற்ற மாதிரி காணிப் பங்கீடுகளைச் செய்திருக்க முடியும்.

நீரோட்டமானது அடிப்படையான ஒன்று. அது நிலத்தின் அமைப்புக்கு ஏற்ற மாதிரியே ஓடும். உயரத்திலிருந்து தாழ்வான பகுதிகளை நோக்கியே செல்லும். அது மட்டுமல்ல, வன்னியில் மழை வீழ்ச்சி கூடுதாலாக இருப்பதாலும் வன்னியின் நிலமானது களி, கிறவல் போன்றவையாக இருப்பதாலும் பெய்கின்ற மழை நீர் உடனடியாகவே பெரு வெள்ளமாக மாறும் இயல்புடையது. சில கடலோரங்கள், வேறு சில இடங்களைப்போல பெய்யும் மழையை உள்ளிழுக்கும் தன்மை குறைந்தது. ஆகவே பெருகி வரும் வெள்ளமானது ஓடிச் செல்வதற்கு வழிகளைத் தேடியே தீரும்.

முன்பு இந்த வெள்ளம் காடுகளின் அடியாக ஓடி ஆறுகளில் சேரும். இப்படி ஓடும்போது அது காடுகளில் அறுத்தோடியாக மாறுவதுமுண்டு. ஆனால் காடுகளில் ஓடுகின்ற அறுத்தோடிகள் எப்போதும் ஒரே போக்கில் இருப்பதில்லை. சிலவேளை ஒரு மரம் அறுத்தோடியின் குறுக்கே விழுந்தால் அல்லது ஒரு மரத்தின் பெரியதொரு வேர் மிதந்து நின்றால் அறுத்தோடியின் போக்கே மாறி விடும். அப்படி மாறுகின்ற அறுத்தோடி காலப்போக்கில் ஆறாக மாறுவதுமுண்டு.

வன்னியில் உள்ள கனகராயன் ஆறு, பறங்கி ஆறு, கலவரப்பு ஆறு, பேராறு, நெத்தலியாறு, மண்டைக்கண்ணாறு, குடமுருட்டி ஆறு, பிரமந்தனாறு, அருவியாறு, கொண்டைச்சியாறு, குருவியாறு, நாயாறு எல்லாமே தொடக்கத்தில் இப்படி அறுத்தோடிகளாக இருந்தவைதான். காடுகளின் உள்ளே போய் ஆழத்தில் பார்த்தீர்கள் என்றால், எத்தனையோ சிற்றாறுகளை – அறுத்தோடிகளைக் காணலாம்.

இப்படியிருந்த காடுகளை அழித்துக் குடியேற்றம் செய்ய முற்பட்டபோது நில அமைப்பு, நீரோட்ட வழி போன்றவற்றைக் கவனத்திற் கொண்டிருந்தால் அதற்கான கால்வாய்களை அமைக்க வேண்டும். அதற்குத் தோதாக வீதிகளைப் போட வேண்டும் என்றெல்லாம் தெரிந்திருக்கும். கூடவே வீதியோரங்களிலும் மரங்களைப் பாதுகாத்திருக்க முடியும்.

ஒரு காலம் காடுகளாக இருந்த இந்த இடங்களில் இப்பொழுது தலை தெறிக்க வெயில் எறிக்கிறது என்றால் மரங்களைப் பாதுகாக்கவில்லை. காடுகளை அழிக்கும்போது இடையிடையே மரங்களை விட்டு வைக்க வேணும். வீதியோரங்களில் அவற்றைப் பாதுகாக்க வேணும் என்றெல்லாம் யாருமே யோசிக்கவில்லை. அப்படி மிஞ்சி நின்ற மரங்களையும் ஏதோ காரணங்களைச் சொல்லி அவற்றை வெட்டி முடித்ததே நடந்தது. பெரும்பாலும் அந்த மரங்களை வெட்டி தங்கள் வீட்டுக் கதவுகளையும் நிலைகளையும் கூரைக்கு மரங்களையும் போட்டு முடித்தாயிற்று.

இப்படி உருக்குலைக்கப்பட்ட குடியேற்றங்களில் இன்று எங்கே பார்த்தாலும் அறுத்தோடிகள்தான் பெருகிக் கிடக்கின்றன. மழைக்காலங்களில் எவ்வளவு வெள்ளம் அவற்றில் பாய்கிறது என்று யாருக்கும் தெரியாது. ஒவ்வொரு அறுத்தோடியும் பேராறுகளைப் போலப் பெருகிப் பிரவாகமெடுத்துப் பாய்கின்றன.  இதனால் எவ்வளவுதான் செலவழித்து வீதிகளைப் போட்டாலும் அடுத்த வருசத்தில் அதை வெள்ளம் அள்ளிக் கொண்டு போய் விடும். வன்னியில் பெரும்பாலான வீதிகளும் கெதியில் பாழாகிப் பழுதடைவதற்கு இந்த அறுத்தோடிகளே காரணம்.

அறுத்தோடிகளைக் கட்டுப்படுத்துவதும் லேசுப்பட்ட விசயமில்லை. ஒழுங்கான முறையில் கால்வாய்களை அமைத்தால் அறுத்தோடிகளின் பிரச்சினை இருக்காது என்று யாரும் மேதாவித்தனமாகச் சொல்லலாம். அறுத்தோடிகளில் வரும் நீரின் அளவையும் வேகத்தையும் தாங்கிப் பிடிக்கக் கூடிய அளவுக்கு கால்வாய்களை அமைக்கும் வளர்ச்சி இப்போதைக்கு இலங்கையில் சாத்தியமில்லை. அப்படித்தான் சிரமப்பட்டுக் கால்வாய்களையும் வடிகால்களையும் அமைத்தாலும் அவை நீண்ட காலத்துக்கு நீடித்திருக்கும் என்றில்லை. எல்லாவற்றையும் வெள்ளம் உடைத்துச் சிதைத்து விடும்.

அப்படியென்றால் இதற்கு என்னதான் தீர்வு என்று நீங்கள் கேட்கிறீர்கள். மரங்களை வளர்ப்பது. சிறிய நீர்த்தேக்கங்களை உருவாக்குவது. கால்வாய்களைப் பெருக்குவது. சீரமைப்பது. காணிகளிலும் வளவுகளிலும் முடிந்தளவு நீரைச் சேமிப்பது. வீதிக்கு நீர் வருவதைக் கட்டுப்படுத்துவது… எனப் பல விதங்களில் முயற்சி எடுத்தால்தான் இதை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தலாம்.

இல்லையென்றால் இன்றிருக்கின்ற இந்தப் பாதைகளில் பலவும் ஒரு காலத்தில் வெள்ள வாய்க்கால்களாக – நிலத்தை விட மிகத் தாழ்ந்தவையாக மாறி விடும். யாழ்ப்பாணத்துக் கிராமங்களில் வெள்ளவாய்க்கால்கள் என்று இப்போது சொல்லப்படுவதெல்லாம் ஒரு காலத்தில் இந்த மாதிரி அறுத்தோடிகளாக இருந்தவையே. ஆனால், அங்கே உள்ள நில அமைப்பும் குடியிருப்பு முறைகளும் வேலிகளும் அவற்றை ஒரு எல்லைக்குமேல் ஆழமாக்கவில்லை. நிலத்தை அரித்துக் கொண்டோட விடவில்லை.

வன்னிப் பெரு நிலம் குணாம்ச ரீதியாக வேறாக இருப்பதால் இதற்கு மாற்றுப் பொறிமுறைகள் அவசியம். கடந்த காலத் தவறுகளைத் தொடர விடாமல் இன்றே மாற்று நடவடிக்கைகளைச் செய்ய வேணும். இல்லையென்றால், அன்ரன் அண்ணையின் காலைப் போல ஆயிரம் பேரின் கால்களை முறியக் கொடுக்க வேண்டியதுதான்.

Share:

Author: theneeweb