வட மாகாணத்தில் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் ஒருமாத காலத்திற்குள் பதிவு செய்யுமாறு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணிப்புரை

வடக்கு தனியார் கல்வி நிலையங்களுக்கான பணிப்புரை
வட மாகாணத்தில் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் ஒருமாத காலத்திற்குள் பதிவு செய்யுமாறு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஆளுநரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வட மாகாணத்தில் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களினதும் உரிமையாளர்கள் தமது கல்வி நிலையங்கள் தொடர்பான முழுமையான தகவல்களையும், கல்வி நிலையம் அமைந்திருக்கும் காணி தொடர்பான முழுமையான தகவல்களையும் எதிர்வரும் மார்ச் மாதம் 04ஆம் திகதிக்கு முன்னர் வடக்கு மாகாண கல்வி அமைச்சில் பதிவு செய்ய வேண்டும்.

இதற்கான மாதிரி விண்ணப்ப படிவத்தினை வட மாகாணத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.np.gov.lk இல் நாளைமுதல் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன் இது தொடர்பான மேலதிக தகவல்களை வடக்கு மாகாண கல்வி அமைச்சின் 0212 23 13 43 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும் என ஆளுநர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, வட மாகாணத்தின் நகரங்கள் மற்றும் நகரங்களுக்கு அண்மையில் பொருத்தப்பட்டுள்ள பெரிய, நடுத்தர மற்றும் சிறிய அளவிலான பிரசார பதாதைகளில் அவை பிரசாரப்படுத்துவதற்கு அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டபோது வழங்கப்பட்ட அனுமதி இலக்கங்களையும் இணைத்து காட்சிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையிலும் அந்த அனுமதி இலங்கங்கள் இல்லாது காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகளில் அவற்றை இணைத்துக் கொள்வதற்கு பதாதைகளை காட்சிப்படுத்திய நிறுவனத்தினர் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேநேரம், காட்சிப்படுத்துவதற்கான அனுமதிக்காலம் முடிவடைந்தும் இன்னும் அகற்றப்படாத பிரசார பதாதைகளை உரிய தரப்பினர் இரண்டு வாரங்களுக்குள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அவ்வாறு அகற்றப்படாத மற்றும் தகவல்களை இணைத்துக் கொள்ளாத பதாதைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார் என ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share:

Author: theneeweb