வெனிசூலாவில் தேர்தல் நடத்த முடியாது’: ஐரோப்பிய யூனியன் கெடுவை நிராகரித்தார் மடூரோ

வெனிசூலாவில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் விடுத்த  இறுதி கெடுவை அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மடூரோ திட்டவட்டமாக நிராகரித்து விட்டார்.

ஸ்பெயின் தொலைக்காட்சி நிறுவனத்தின் நேர்காணல் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்ட மடூரோ இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது:வெனிசூலாவில் தேர்தல் நடத்த வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள இறுதிக் கெடுவை திட்டவட்டமாக ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் எங்களுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். தேர்தல் நடத்த இறுதிக் கெடு விதிப்பதன் மூலம் அவர்கள் எங்களை மிகத் தீவிரமான மோதல் போக்கு சூழ்நிலைக்குள் தள்ள முயற்சிக்கின்றனர் என்று மடூரோ கூறியுள்ளார்.
ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் உள்ள ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட ஏழு நாடுகள் அரசியல் குழப்பம் நிலவி வரும் வெனிசூலாவில் பிப்ரவரி 3-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த உத்தரவிடவேண்டும் என அந்நாட்டின் அதிபர் மடூரோவுக்கு கெடு நிர்ணயித்திருந்தன. தேர்தலை மீண்டும் நடத்தாதபட்சத்தில் வெனிசூலாவின் எதிர்கட்சித் தலைவர் ஜுவான் குவாய்டோவை இடைக்கால அதிபராக அங்கீகரிக்கப் போவதாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் தெரிவித்திருந்தன.

இந்தச் சூழ்நிலையில், ஐரோப்பிய யூனியனின் இறுதி எச்சரிக்கையை அதிபர் மடூரோ திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் நிக்கோலஸ் மடூரோ தலைமையிலான ஆட்சி வெனிசூலாவில்  நடைபெற்று வருகிறது. அவரது தவறான நிர்வாகத்தால்  பொருளாதாரச் சீர்குலைவு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால், 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது.

இந்தச் சூழலில், நாடாளுமன்றத்துக்கு ஆட்சி அதிகாரத்தைத் தர மறுத்த மடூரோ, அதை விட அதிக அதிகாரம் கொண்ட அரசியல் சாசனப் பேரவையை 2017-ஆம் ஆண்டு உருவாக்கினார்.

அதன்பின்னர், வெனிசூலாவில் கடந்தாண்டு மே மாதத்தில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய தேர்தலில் மடூரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்த நிலையில், வெனிசூலா அதிபராக நிக்கோலஸ் மடூரோ ஜனவரி 10-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் பலர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், வெனிசூலா நாடாளுமன்றத் தலைவராக பொறுப்பு வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவர்  ஜுவான் குவாய்டோ, நாட்டின் இடைக்கால அதிபராக தம்மை அறிவித்துக் கொண்டார். அவர் அவ்வாறு அறிவித்த சில நிமிடங்களிலேயே, அவரை வெனிசூலாவின் இடைக்கால அதிபராக அமெரிக்கா அங்கீகரித்தது.

மேலும், பிரேஸில், கொலம்பியா, சிலி, பெரு, ஆர்ஜெண்டீனா உள்ளிட்ட பிராந்திய நாடுகளும் ஜுவான் குவாய்டோவை இடைக்கால அதிபராக அங்கீகரித்தன.எனினும், இதற்கு ரஷியா, சீனா, துருக்கி, கியூபா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

ஜுவான் குவாய்டோவை இடைக்கால அதிபராக அங்கீகரித்த ஐரோப்பிய நாடுகள்

ஐரோப்பிய யூனியனில் இடம்பெற்றுள்ள நாடுகள் வெனிசூலாவில் மீண்டும் அதிபர் தேர்தலை நடத்த 8 நாள்கள் கெடு விதித்திருந்தன. இந்தக் கெடு ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த நிலையில், மீண்டும் தேர்தல் என்ற கோரிக்கையை ஏற்க மடூரோ திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்த நிலையில், பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய யூனியன் நாடுகள் வெனிசூலாவின் எதிர்கட்சி தலைவர் ஜுவான் குவாய்டோவை அந்த நாட்டின் இடைக்கால அதிபராக அங்கீகரிப்பதாக தெரிவித்துள்ளன.
பிரிட்டன் வெளியுறவுத் துறை செயலர் ஜெரிமி ஹன்ட் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் “வெனிசூலாவில் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற்று புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, எதிர்கட்சி தலைவர் ஜுவான் குவாய்டோவை இடைக்கால அதிபராக அங்கீகரிப்பது என பிரிட்டன்முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அங்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb