ஆஸ்திரேலியாவில் வெள்ள பாதிப்பு: மீட்பு பணிகளில் ராணுவம்

ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை-வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் தவித்து வரும் மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறங்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்ட் மாகாணத்தில் பெருமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ரோஸ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை நிரம்பியதால், அதன் மதகுகள் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக வெள்ளத்தின் தீவிரம் மேலும் அதிகரித்தது. ஏராளமான வீடுகள், பள்ளிக்கூடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

டவுன்ஸ்வில்லே நகரம் முழுமையாக வெள்ளத்தில் மிதக்கிறது.
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள மழை-வெள்ள பாதிப்புகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மூழ்கியுள்ளதுடன், விமான நிலையங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஏராளமான பாம்புகள் மட்டுமன்றி முதலைகளும் தென்படுகின்றன. இதனால் மக்கள் மிகுந்த பீதியடைந்துள்ளனர். வீடுகளின் மாடியில் தவித்து வரும் மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறங்கியுள்ளது. சிறிய ரக படகுகள் மூலமும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு நீடிப்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று குயின்ஸ்லாண்ட் மாகாண அரசின் தலைவர் அனாஸ்டாசியா பலாஸ்ஸூக் அறிவுறுத்தியுள்ளார்.

டவுன்ஸ்வில்லே நகர் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமையும் மழை பெய்த நிலையில் அடுத்த சில தினங்களுக்கு தொடர்ந்து பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மேலும் 20,000 வீடுகள் நீருக்குள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb