போதைப்பொருள் கடத்தலை தடுக்க இலங்கை மற்றும் மாலைதீவு ஜனாதிபதிகள் இணக்கம்

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நிகழ்ச்சித் திட்டங்களில் விரிவான ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு இலங்கை மற்றும் மாலைதீவு ஜனாதிபதிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சாலிஹ் (Ibrahim Mohamed Solih)க்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (05) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போதே இரு நாடுகளின் தலைவர்களும் இது பற்றி கலந்துரையாடினர்.

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துவரும் நிகழ்ச்சித் திட்டங்களையும் அதற்காக அவர் மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்புகளையும் மாலைதீவு ஜனாதிபதி பாராட்டினார்.

நீண்டகால நட்பு நாடுகளான இலங்கைக்கும் மாலைதீவுக்குமிடையில் இருந்துவரும் உறவுகளை மேலும் பலப்படுத்தவும் வர்த்தகம், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இரண்டு நாடுகளுக்குமிடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைகளை இற்றைப்படுத்தவும், அத்துறைகளில் புதிய உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொள்வது பற்றியும் இதன்போது தலைவர்கள் கலந்துரையாடினர். மேலும் இரண்டு நாடுகளுக்குமிடையில் இணைந்த வர்த்தக வாய்ப்புக்களை மேம்படுத்துவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் பல முதலீட்டாளர்கள் மாலைதீவில் தமது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன், அவர்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் இலங்கையில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மாலைதீவு மாணவர்களுக்கு விசா வழங்குதல் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் தீவு நாடுகள் மற்றும் சார்க் உறுப்பு நாடுகள் என்றவகையில் பிராந்திய நாடுகளின் முன்னேற்றத்திற்காக இணைந்து செயற்படுவது குறித்தும் தலைவர்கள் கலந்துரையாடினர்.

இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்த மாலைதீவு ஜனாதிபதி Ibrahim Mohamed Solih வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டதுடன், மாலைதீவு ஜனாதிபதிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

இரு நாடுகளின் தலைவர்களுக்கிடையிலான சுமூகமான கலந்துரையாடலை தொடர்ந்து இருதரப்பு பேச்சுவார்த்தை ஆரம்பமானது.

71வது சுதந்திர தின விழாவில் பிரதம அதிதியாக பங்குபற்றுவதற்காக இலங்கைக்கு வருகை தந்தமைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாலைதீவு ஜனாதிபதிக்கு தனது நன்றியை தெரிவித்தார்.

மாலைதீவு ஜனாதிபதிக்கு இன்று பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் விசேட பகல் போசன விருந்துபசாரமும் அளிக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த மாலைதீவு ஜனாதிபதி அவர்களையும் அவரது பாரியாரையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், ஜயந்தி சிறிசேன அம்மையாரும் அன்புடன் வரவேற்றனர்

Share:

Author: theneeweb