சிறிய படங்கள் அழிவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன

வசந்த பாலன் ….

தமிழ் ராக்கர்ஸில் ஏன் தெலுங்கு, மலையாளப் படங்கள் வெளியாவதில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் இயக்குநர் வசந்த பாலன்.

பொது நலன் கருதி என்கிற படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் வசந்த பாலன் பேசியதாவது:

சிறிய பட்ஜெட் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றாலும் சரியான திரையரங்குகள் கிடைப்பதில்லை. பரியேறும் பெருமாள் படத்தை பெரிய இயக்குநர் தயாரித்தாலும் திரையரங்குகள் கிடைக்கவில்லை. தற்போது வெளியான சர்வம் தாளமயம், பேரன்பு படங்களைத் திரையரங்குகளில் பார்க்கலாம் என்று காலையில் சென்றால் திரையரங்குகளில் திரையிடப்படவில்லை. சிறிய படங்கள் அழிவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன. ஆனால் பேரன்புவும் சர்வம் தாளமயமும் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகிவிட்டன. தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் துப்பறிவாளனாக இருக்கிறார், இரும்புத் திரை கொண்டு அடக்குகிறார், என்னென்னவோ எல்லாம் செய்கிறார்…. தமிழ் ராக்கர்ஸைக் கண்டுபிடிக்கலாம் அல்லவா! இதையெல்லாம் ஒழிக்கிறோம் என்று கூறித்தானே பதவிக்கு வந்தார்கள்!

எனக்குப் பயமாக இருக்கிறது. நாளை என்னுடைய படமும் தமிழ் ராக்கர்ஸில் வெளியானால் நான் எங்கே போவது? இயக்குநர்கள் சங்கமும் தயாரிப்பாளர்கள் சங்கமும்தானே எங்களைக் காப்பாற்றவேண்டும்? திரையரங்குகளுக்கு வருவதற்கு ஆளே இல்லை. உலகில் உள்ள பலரும் பேரன்புவைப் பாராட்டிவிட்டார்கள். ஆனால், தமிழ் ராக்கர்ஸில் வந்துவிட்டால் யார் திரையரங்குக்குச் சென்று பார்ப்பார்கள்? சிறுபடங்களின் நிலைமை இதுதான். உண்மை. இதை மறைத்துக்கொண்டிருக்கிறோம்? ஏன் தெலுங்குப் படங்கள், மலையாளப் படங்கள் தமிழ் ராக்கர்ஸில் வருவதில்லை. கேஜிஎஃப் என்கிற படம் இன்னமும் தமிழ் ராக்கர்ஸில் வரவில்லை. ஏன் தமிழ் ராக்கர்ஸைக் கண்டுபிடிக்கமுடியவில்லை? இரண்டு பேரைப் பிடித்துவிட்டதால் அமைதியாக இருக்கிறீர்களா? என் படங்களின் தோல்வி இங்குள்ள கட்டமைப்பால் நடக்கப்போகிறது. அதையும் மீறி நான் ஜெயிக்கவேண்டும். அப்புறம் என்னைப் போன்ற நலிந்த கலைஞர்களுக்காக இளையராஜாவைக் கொண்டு கச்சேரி நடத்தவேண்டும். முதலில் திரையுலகை இழுத்து மூடுங்கள். இதற்கு ஒரு தீர்வு காணலாம். மாலில் ஒரு பைக்கை பார்க்கிங் செய்தால் ஒரு மணி நேரத்துக்கு 40 ரூபாய் வாங்குகிறார்கள். இதையெல்லாம் ஒழித்துவிடுவேன் என்று சொல்லித்தானே பதவிக்கு வந்தீர்கள். முழு வேலையில் உள்ளவர்கள் தலைவர் பதவிக்கு வரவேண்டாம். செய்யவேண்டியதைச் செய்யாமல் என்னென்னவோ செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று ஆவேசமாகப் பேசினார்.

Share:

Author: theneeweb