வெனிசுலாவில் தலையிடாதே

(பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்) —-

அமெரிக்க ஏகாதிபத்தியம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி நிக்கோலாஸ் மதுரோ தலைமையிலான வெனிசுலா அரசாங்கத்திற்கு எதிராக யுத்தத்தைப் பிரகடனம் செய்திருக்கிறது.டிரம்ப் நிர்வாகம், வெனிசுலாவின் வலதுசாரி எதிர்க்கட்சித் தலைவரான ஜூவான் குவாய்டோ-வை இடைக்கால ஜனாதிபதியாக அங்கீகரித்து அறிவித்திருப்பதானது,  வெனிசுலாவின் உள்நாட்டு விவகாரங்களில் மிகவும் கூச்சநாச்சமின்றி தலையிட்டிருக்கிறது என்பதேயாகும். இத்தகைய சட்டவிரோத நடவடிக்கையுடன், சட்டபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதிக்கு ஆயுதப்படையினர் தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அறைகூவலும் விடுத்திருக்கிறது.

மேற்படி குவாய்டோ தன்னை இடைக்கால ஜனாதிபதி என்று ஜனவரி 23 அன்று தனக்குத்தானே பிரகடனம் செய்துகொண்டார். இதனை, உடனடியாக அமெரிக்கா ஏற்றுக் கொண்டிருக்கிறது. இது, வெனிசுலாவில் ஒரு இராணுவப் புரட்சிக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதையே காட்டுகிறது. எனினும், இராணுவ அமைச்சரும், இராணுவத்தின் தலைவரும் சட்டபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கே தங்களின் ஆதரவு என்று உறுதிமொழி அளித்ததைத்தொடர்ந்து, இவர்களின் சதித்திட்டம் படுதோல்வி அடைந்துவிட்டது. ஜனாதிபதி மதுரோவுக்கு ஆதரவு தெரிவித்து காரகாசில் மக்களின் மகத்தான் ஆர்ப்பாட்டம் நடந்திருக்கிறது.

ஹூகோ சாவேஸ், 1999இல் வெனிசுலாவின் ஜனாதிபதியாக மாறியதிலிருந்தும் பொலிவாரியன் புரட்சிகர நடைமுறைகளை அவர் அறிமுகப்படுத்தியதிலிருந்தும், அங்குள்ள வலதுசாரிக் கும்பல்கள், அமெரிக்காவின் ஆதரவுடன், பொலிவாரியன் புரட்சி அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காகவும், அங்கே தங்களுக்குச் சாதகமானமுறையில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்காகவும்  எண்ணற்ற சாகசங்களில் ஈடுபட்டு வந்தன.

2002இல், ஜனாதிபதி சாவேசுக்கு எதிராக ஒரு சதிமுயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆயினும் மக்களின் மகத்தான அணிதிரட்டல் மூலமாக அது தோல்வியடைந்தது. அதிலிருந்தே, அங்கேயுள்ள வலதுசாரி பிற்போக்கு சக்திகள், முதலாளிகளின் கும்பல்கள் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன், வீதிகளில் கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலமாகவும், வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிடுவதன் மூலமாகவும்,  சாவேஸ் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வந்தன.

வெனிசுலாவில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி, இரு காரணிகள் மூலமாகக் கிளர்ந்தெழுந்துள்ளன.   முதலாவதாக, 2014இல் எண்ணெய் விலைகள் கூர்மையாக வீழ்ச்சியடைந்தபின்னர், வெனிசுலாவின் பொருளாதாரம் ஸ்தம்பித்ததன் காரணமாக, மக்களின் வாழ்க்கைக் கடும் பாதிப்புக்கு உள்ளாயின. இதனைத் தொடர்ந்து முதலாளிகள் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கொண்டுவந்த நாச வேலைகள் நிலைமைகளை மேலும் மோசமாக்கின.

இரண்டாவது காரணி, வெனிசுலாவைச் சுற்றியும் உள்ள நாடுகளில் நடைபெற்றுவரும் நிகழ்ச்சிப் போக்குகளாகும். சுமார் பதினைந்து ஆண்டுகாலம் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரிகள் மிகவும் உறுதியானமுறையில் முன்னேறி வந்த நிலைமையில் தற்போது பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் வலதுசாரி சக்திகள் எதிர்வினையாற்றத் துவங்கியிருக்கின்றன. அர்ஜண்டினாவில் வலதுசாரி அரசாங்கம் அமைந்தபின்னர், பிரேசிலில் அதிதீவிர வலதுசாரி நபர் ஜனாதிபதியாக வந்ததற்குப் பின்னர், வலதுசாரிகளுக்கும் இடதுசாரிகளுக்கும் இடையேயான போராட்டங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பெரு, கொலம்பியா மற்றும் சிலி ஆகிய நாடுகளில் வலதுசாரி அரசாங்கங்கள் அமைந்துள்ளன.  வெனிசுலாவின் அண்டை நாடுகளான கொலம்பியாவிலும் பிரேசிலிலும், முறையே ஆட்சி நடத்துகின்ற ஜனாதிபதிகளான   இவான் துகே மற்றும் ஜெயிர் போல்சானாரோ, ஜனாதிபதி மதுரோவை எப்படியாவது ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்திட வேண்டும் என்று உறுதிபூண்டிருக்கிறார்கள். இவர்களுடன் இப்போது ஜனாதிபதி டிரம்ப்பும் சேர்ந்துகொண்டு, எப்படியாவது, 21ஆம் நூற்றாண்டில் இடதுசாரிகளின் முன்னேற்றத்தின் மையமாக விளங்கும் வெனிசுலாவில் உள்ள இடதுசாரி அரசாங்கத்தை நசுக்கிட கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்.

ஜனாதிபதி மதுரோவைத் தூக்கி எறிந்திட, அமெரிக்கா மிகவும் துடித்துக்கொண்டிருப்பது, வெனிசுலாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்கு அது கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்திருப்பதிலிருந்து  நன்கு தெரிகிறது.  அமெரிக்காவிலிருந்த, வெனிசுலா நாட்டிற்குச்  சொந்தமான பிவிடிஎஸ்ஏ எனப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கம்பெனியின் சொத்துக்களைப் பறிமுதல் செய்திருக்கிறது. வெனிசுலாவின்பொருளாதாரத்தை நாசம் செய்ய வேண்டும் என்ற இழிநோக்கத்துடனேயே அமெரிக்கா இந்த நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது. ஏனெனில் அமெரிக்காதான், வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்துவந்த நாடாகும்.

அமெரிக்காவால் வெனிசுலா மீது மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோதமான தலையீட்டுக்கு மேற்கத்திய நாடுகள் ஆதரவளித்து வருகின்றன. பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகியவை மதுராவிடம் ஒருவார காலத்திற்குள் வெனிசுலாவில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்றும், அவ்வாறு தேர்தல் நடத்தத்தவறினால், இடைக்கால ஜனாதிபதியாகத் தன்னை அறிவித்துக்கொண்டுள்ளவரை அங்கீகரித்திடுவோம் என்றும் கூறியிருக்கின்றன. இவர்களின் கோரிக்கையை வெனிசுலா அரசாங்கம் உடனடியாக நிராகரித்துவிட்டது. அங்கே 2018 மே மாதத்தில்தான் தேர்தல் நடந்தது. எதிர்க்கட்சிகளில் சில தேர்தலைப் புறக்கணித்தருந்த நிலையில்,  மதுரோவிற்கு 67.8 சதவீத வாக்குகள் கிடைத்தன.

இவ்வாறு, வெனிசுலா, அதன் சுதந்திரம் மற்றும்   இறையாண்மை மீது கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில்,   உலகம் முழுதும் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும், ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளும் மதுரோ அரசாங்கத்திற்குத் தங்களுடைய ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்வதுடன், ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சித்திட்டங்களைக் கடுமையாகக் கண்டித்திடவும் முன்வர வேண்டும். மோடி அரசாங்கம், சட்டபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வெனிசுலா அரசாங்கத்தை பலவீனப்படுத்திட நடைபெற்றுவரும் சதித்திட்டங்கள் குறித்து எதுவும் கூறாது மவுனம் சாதித்து வருகிறது.  ஏகாதிபத்தியத்தின் இத்தகைய இழிமுயற்சிகளுக்கு எதிராக, இந்தியா கருத்துக் கூற வேண்டியது அவசியமாகும்.

(ஜனவரி 30, 2019)

(தமிழில்: ச. வீரமணி)

Share:

Author: theneeweb