அரச மற்றும் தனியார் வங்கிகளின் ஏ.ரீ.எம். ஊடாக இடம்பெறும் பண மோசடி

பொதுமக்களிடம் காவல்துறை முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை

சீ.சீ.ரீ.வி கமராக்களில் தென்படாத வகையில் ஏ.ரீ.எம். இயந்திரங்களுக்கு அருகில் சந்தேகத்திற்கிமான முறையில் நடமாடுபவர்கள் குறித்து காவல்துறையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அரச மற்றும் தனியார் வங்கிகளின் ஏ.ரீ.எம். ஊடாக இடம்பெறும் பண மோசடி குறித்த தகவல்கள் வெளியாகின்ற நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அறிக்கையிடப்பட்டுள்ள இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பில் சீன பிரஜைகள் இருவரும், ரூமேனிய பிரஜை ஒருவரும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள், ஏ.ரீ.எம் இயந்திரங்களுக்கு அருகில் இயந்திரமொன்றை பொருத்தி, வைப்பாளர்களினால் ஏ.ரீ.எம் இயந்திரத்தினுள் செலுத்தப்படும் அட்டைகளின் தகவல்களைத் திருடி, போலி அட்டைகளைத் தயாரித்து 12 இலட்சம் ரூபா அளவான பணத்தை திருடியுள்ளனர் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களிடமிருந்து 200 போலி ஏ.ரீ.எம் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த பண மோசடி தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர, ஏ.ரீ.எம் இயந்திரங்களுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுபவர்கள் குறித்து அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரியுள்ளார்.

 

Share:

Author: theneeweb