வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகளுக்கு தடை

வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்கள் நடத்தக்கூடாது என வவுனியா நகரசபையின் தலைவர் இ.கௌதமன் அதிரடித் தீர்மானமொன்றினை எடுத்துள்ளார்.

இன்று (06.02) வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இத்தீர்மானத்தினை அவர் தெரிவித்திருந்தார்.

தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், நகரசபையின் உப தலைவர் சு. குமாரசாமி மற்றும் பெற்றோர் சார்பில் சிலரும் வவுனியா வர்த்தகர் சங்கத்தினர், நகரசபை தலைவரின் ஆலோசகரும் ஈழமக்கள் புரட்சகரவிடுதலை முன்னணியின் சர்வதேச இணைப்பாளருமான இ.சஜீந்திரா உட்பட பலரும் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன் போது தனியார் வகுப்புகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்குவது, சுகாதார வசதிகள், காற்றோட்ட வசதிகள், நகரசபையில் பதிவு செய்தல், இரவு நேர வகுப்புகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருந்தது.

இதன்போது பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் இறுதித்தீர்மானமாக ஞாயிற்றுக்கிழமைகளில் உயர்தர வகுப்புகள், சாதாரணதர வகுப்புகள், புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய வகுப்புகள் தவிர்ந்த அனைத்து வகுப்புகளும் நடத்தப்படக்கூடாது எனவும், வவுனியா நகரசபைக்குட்பட்ட அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் நகரசபையில் பதிவு செய்யப்படவேண்டும்,

மாலை 7.30 மணிக்கு பின்னர் தனியார் கல்வி நிலையங்களில் எவ்வகையான வகுப்புகளும் நடத்தப்படக்கூடாது, காற்றோட்ட வசதிகள், மலசலகூடங்கள் உட்பட சுகாதார வசதிகள் போதுமான வகையில் ஏற்படுத்தப்படவேண்டும் எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 

இந் நிலையில் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதியில் இருந்து இந் நடைமுறை பின்பற்றப்படவேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டு நகரசபை தலைவரால் அறிவிக்கப்பட்டது.


    
Share:

Author: theneeweb